பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மரணம்! : திரையுலகம் அதிர்ச்சி

Get real time updates directly on you device, subscribe now.

na.muthu1

மிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் சென்னையில் இன்று காலை மஞ்சள் காமாலை காரணமாக மரணமடைந்தார். அவருக்கு வயது 41.

அவரது உடலுக்கு திரையுலகினர் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முத்துகுமாரின் மரணம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரத்தில் ஜூலை 12, 1975-ம் ஆண்டு பிறந்தவர் நா. முத்துக்குமார். காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் கல்விப் படிப்பை முடித்தவர், திரைப்பட இயக்குநராக வேண்டும் என்றஆசையில் இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான பாலுமகேந்திராவிடம் ஆரம்ப நாட்களில் உதவியாளராகப் பணியாற்றினார். பின்னர் சீமான் இயக்கிய ‘வீரநடை’ படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியராக அறிமுகம் ஆனார்.

தொடர்ந்து ‘காதல் கொண்டேன்’, ‘பிதாமகன்’, ‘கில்லி’, ‘கஜினி’, ‘நந்தா’, ‘புதுப்பேட்டை’, ‘காதல்’, ‘சந்திரமுகி’, ‘சிவாஜி’, ‘கற்றது தமிழ்’, ‘7 ஜி ரெயின்போ காலனி’, ‘காக்காமுட்டை’, ‘தெறி’ உள்ளிட்ட பல படங்களில் நா.முத்துக்குமார் எழுதிய பாடலகள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றன.

தமிழ் சினிமாவில் 92க்கும் மேற்பட்ட படங்களில் 1500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். ‘தங்கமீன்கள்’ படத்தில் இவர் எழுதிய ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடலுக்கும், ‘சைவம்’ படத்தில் எழுதிய அழகே அழகே பாடலுக்கும் தேசிய விருதுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு உடல்நலம் குன்றியிருந்த நா.முத்துக்குமார் கடந்த சில தினங்களாக அதற்கு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நா.முத்துக்குமார் இன்று காலை உயிரிழந்தார்.

நா.முத்துக்குமாருக்கு தீபலஷ்மி என்ற மனைவியும், ஆதவன் (9) என்ற மகனும், யோகலட்சுமி என்ற 8 மாதமே ஆன கைக்குழந்தை உள்ளனர். பழகுவதற்கு மிகவும் இனிமையானவரான நா.முத்துகுமாரின் மரணம் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.