மாசு என்கிற மாசிலாமணி – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

MASSSKV

வெள்ளிக்கிழமை ஆனால் ஒரு பேய்ப்படமாவது தமிழக தியேட்டர்களில் தங்களின் கோரமுகத்தை காட்டாமல் விடுவதில்லை என்கிற சீஸன் தான். அந்த சீஸனுக்கு வந்திருக்கும் இன்னொரு பேய்ப்படமாக மட்டுமே ‘மாசு’வை சொல்லிவிட முடியாது.

தனது நண்பன் பிரேம்ஜியுடன் சேர்ந்து கொண்டு கைக்கு கிடைத்ததையெல்லாம் சுருட்டி ”மனம் போல் தினம் ஜமாய்” ரகமாக இருப்பவர் சூர்யா. அதே ‘கை வரிசை’யை ஒரு பயங்கரமான வில்லனிடமும் காட்ட அது அவருக்கு பெரிய சிக்கலை உண்டு பண்ணுகிறது.

பணத்தை இழந்த வில்லன் கோஷ்டிகள் சூர்யாவை தேடிப்பிடித்து வெளுத்துக் கட்டுகிறார்கள். அவர்களிடமிருந்து தப்பித்து வருகிற வழியில் ஒரு விபத்து ஏற்படுகிறது. அந்த விபத்தால் சூர்யாவுக்கு ஆவிகளை காணவும் அவர்களுடன் பேசவும் சக்தி கிடைக்கிறது.

பயத்தில் கோவிலுக்கு போக ”இந்த கொடுப்பினை எல்லாம் எல்லாருக்கும் கிடைக்காதுப்பா…” என்று ஒரு சாமியார் ஆசீர்வாதம் செய்து வீட்டுக்கு அனுப்புகிறார். சூர்யாவின் வீட்டு வாசலில் சிலபேர் வந்து நிற்கிறார்கள். ”உங்களுக்கெல்லாம் என்ன வேண்டும்?” என்று கேட்டுக்கொண்டே சூர்யா அவர்களை அடிக்கப் பாய அது முடியாமல் போகிறது. அப்போது தான் தெரிகிறது அவர்கள் எல்லோருமே ஆவிகள் என்று.

”எங்களுக்கு நிறைவேறாத ஆசை இருக்கு. அதை நிறைவேத்தி வெச்சுட்டா நாங்க போயிடுறோம்” என்று கூட்டாகச் சொல்கின்றன.

”அப்போ நான் சொல்றதை முதல்ல நீங்க செய்யுங்க, அப்புறம் உங்களோட ஆசையை நான் நிறைவேத்தி வைக்கிறேன்” என்று கமிட்மெண்ட் கொடுக்கிறார். பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படுகிறது.

அந்த ஆவிகளின் உதவியுடன் பணம் பறிக்கும் வேலையில் ஈடுபடுகிற நேரத்தில் ஒரு வீட்டுக்குள் பேய் ஓட்ட நுழையும் சூர்யாவுக்கு பயங்கர அதிர்ச்சி காத்திருக்கிறது.

அந்த அதிர்ச்சி என்ன? ஆவிகளின் ஆசையை சூர்யா நிறைவேற்றி வைத்தாரா? என்பதே கிளைமாக்ஸ்.

முதல்பாதி முழுவதும் ஆக்‌ஷன், காமெடி, ரொமான்ஸ் என ‘அயன்’ பட பாணியில் கலந்து கட்டியடிக்கும் சூர்யா இடைவேளைக்குப் பிறகு ஈழ மக்களின் வாழ்க்கைப் போராட்டங்களை தனது அப்பா கேரக்டர் வழியே மிக அழகாக வெளிப்படுத்தி உலக மக்களின் கவனத்தை ஈர்க்கிறார்.

பேய்ப்படம் என்றாலே பில்லி சூனியம், ஏவல், செய்வினை என்று குழந்தைகள் அறிந்திராத ஏரியாவை விலாவாரியாகக் காட்டாமல் இருந்ததுக்கு இயக்குனர் வெங்கட்பிரபுவுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்.

நர்ஸாக வரும் நயன்தாராவுக்கு குறிப்பிட்டு சொல்லக்கூடிய அளவுக்கு காட்சிகளும் இல்லை. அவரது நடிப்புக்கு தீணியும் இல்லை.

அப்பா சூர்யாவுக்கு ஜோடியாக வரும் ப்ரணிதா நெகிழ்ச்சியான காட்சிகளில் கவர்கிறார். பெரிய விழிகளை விரித்து விரித்து டூயட்டில் நடந்து வரும்போதெல்லாம் காதல் வழிந்தோடுகிறது.

வழக்கமாக வெங்கட்பிரபு படத்தில் காமெடிக்கு மட்டுமே அவரது தம்பி பிரேம்ஜி இருப்பார். இதில் கூடுதலாக செண்டிமெண்ட் காட்சிகளிலும் கலங்க வைக்கிறார். ”டேய் மச்சான் அப்போ நான் செத்துட்டேனா..?” என்று கலங்குவதும் ”நீ ஆவி மாதிரியாடா என்கிட்ட பழகினே..?” என்று சூர்யா தவிப்பதும் நெகிழ்ச்சியின் உச்சம்.

கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் ஒரு வில்லனின் உடம்புக்குள் புகுந்து கொண்டு தனது வழக்கமான விரல் ஸ்டைல்களை அவரை பண்ண வைத்து ”எவ்வளவோ பண்ணிட்டோம், இதப்பண்ண மாட்டோமா…” என்று டயலாக்கை பேசும் சீனில் தியேட்டரே சிரிப்புச் சத்தத்தில் குலுங்குகிறது.

கருணாஸ், நான் கடவுள் ராஜேந்திரன், ஸ்ரீமன், சண்முகசுந்தரம், ரித்திகா, ஞானவேல் பல குணச்சித்திர நட்சத்திரங்கள் ஆவிகளாக வந்து காமெடி, சென்டிமெண்ட்டில் கவனிக்க வைக்கிறார்கள்.

இண்டர்வெல்லுக்குப் பிறகு அசிஸ்டெண்ட் கமிஷனராக வரும் பார்த்திபன் வருகிற சீன்கள் எல்லாமே நக்கல், நையாண்டி தான். ”இங்க ஒரு ஹீரோ சண்டை போட்டுக்கிட்டிருந்தாரே..?” என்று சூர்யாவைத் தேடும் போது ”இவரும் ஒரு ஹீரோங்கிறதையே மறந்துட்டார் பாரேன்…!” என்று கருணாஸ் நக்கல் செய்வது, வில்லன் கோஷ்டியில் உள்ள ஒருவனின் கூலிங் க்ளாஸை பிடுங்கிக் கொண்டு “போலீஸ் வந்து என்னத்தைப் புடுங்குச்சு..?”ன்னு யாரும் கேட்கக்கூடாதில்லையா… அதுக்குதான்…என்று சொல்லிக்கொண்டே அந்த கிளாஸை இன்னொரு போலீஸுடம் கொடுத்து “இதை லஞ்சமா வச்சுக்கங்க…” என்பது செம டைமிங்!

‘சாட்டை’ உட்பட பல படங்களில் குணச்சித்திர நடிகராகவே வந்த சமுத்திரக்கனி இந்தப்படத்தில் ஆக மோசமான வில்லன் பாத்திரத்தில் வருகிறார். அதுவும் அவருக்கு மிகச்சரியாக பொருந்தியிருக்கிறது. இன்னொரு வில்லன் சரத் லோகித்ஸ்வாவும் சேம் ப்ளட்.

ஆர்.டி.ராஜசேகரின் பரபர ஒளிப்பதிவும், யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசையும் அப்படி ஒரு வேகம்.

ஒரு படத்தில் மற்ற படங்களில் பரபரப்பாக பேசப்பட்ட காட்சிகளை நக்கலடித்து சீன் வைக்கும் எத்தனையோ படங்களை ரசிகர்கள் பார்த்திருப்பார்கள். முதல் முறையாக இதில் ஜெய் நடித்த ‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் வரும் ஆக்சிடெண்ட் மற்றும் ஜெய், அஞ்சலி காம்பினேஷன் சீன்களை திரைக்கதையோடு பொருந்தும்படி மிகச்சரியாக பயன்படுத்தியிருப்பது வெங்கட்பிரபுவின் புத்திசாலித்தனம்!

இப்படி சின்னச் சின்ன விஷயங்களைக் கூட கவனமாகச் செய்திருக்கும் அவர் ”பேய்களால் எதையும் தொட முடியாது” என்கிற மிகப்பெரிய லாஜிக்கை மட்டும் கிளைமாக்ஸ் சீனில் மறந்திருக்கிறார்.

கதையே இல்லாமல் ‘ஹிட்’டடிக்கும் திறமைசாலியான வெங்கட்பிரபு இதில் கதையோடு ஆக்‌ஷன், ரொமான்ஸ், காமெடி, ஹாரர், பேண்டஸி, சென்டிமெண்ட் என பல விஷயங்களை சுவாரஷ்யமான திரைக்கதையாக்கி ரெண்டரை மணி நேர ”பக்கா டைம் பாஸ்” படமாக தந்து நிஜமாகவே ‘சிக்ஸர்’ அடித்திருக்கிறார் இயக்குனர் டைரக்டர் வெங்கட்பிரபு.