நான் பட்ட அவமானங்களுக்கு கிடைத்த வெற்றி தான் ‘இறுதிச்சுற்று’ : மாதவன் நெகிழ்ச்சி
‘இறுதிச்சுற்று’ மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் எண்ட்ரி போட்டாலும் மிகப்பெரிய வெற்றியை அறுவடை செய்திருக்கிறார் நடிகர் மாதவன்.
சென்றவாரம் ரிலீசான இந்தப்படம் தமிழில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. உற்சாகத்தில் இருந்த டீம் பத்திரிகையாளர்களை சந்தித்து நன்றிகளை தெரிவித்தனர். அப்போது பேசிய மாதவன் வேதனை தந்த சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
இங்கு தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசும்போது நான் தமிழ்சினிமாவை விட்டுப் போய் விட்டதாகச் சொன்னார். அப்படி இல்லை. நான் சென்னையை விட்டு எங்கும் போய் விடவில்லை. தமிழ்ப்படம் தான் எனது உயிர். இந்த இடைப்பட்ட காலங்களில் நான் பட்ட அவமானங்களும் அதிகம்.
இறுதிச் சுற்று படத்தில் நடித்து முடிப்பதற்குள் பல தடைகளை கடக்க வேண்டியிருந்தது. பலபேர் இந்த படம் உனக்கு ஏற்ற படம் இல்லை என்று வெளிப்படையாகவே தடுத்தனர். நம்பிக்கை இழக்கும்படி பேசினார்கள். ஒரு கட்டத்தில் இந்த படத்தை கைவிட்டு விட்டு வேறு படத்துக்கு போய்விடலாம் என்றும் யோசித்தேன்.
ஆனால் எனக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் இந்த படத்தின் கதாபாத்திரம் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் என்று கூறி தடுத்தார். அதன்பிறகு படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தி ஒரு வழியாக முடித்தோம். படம் வெளியான பிறகு நல்ல வரவேற்பை பெற்றது. பாராட்டுகளும் கிடைத்தன. ஏற்கனவே பட்ட அவமானங்கள் மறைந்து விட்டன.
பணத்துக்காக நடிக்க கூடாது. பாராட்டு கிடைப்பது மாதிரியான நல்ல நல்ல கதைகளில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இந்த படத்தின் வெற்றி எனக்கு உணர்த்தியுள்ளது” என்றார் மாதவன்.