‘மெட்ராஸ் மேட்னி’ படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா!

மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் & இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி, ரோஷினி ஹரிப்பிரியன் , விஷ்வா ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா சாம்ஸ் ,கீதா கைலாசம் மற்றும் பலர் நடித்திருந்த மெட்ராஸ் மேட்னி எனும் திரைப்படம் ஜூன் மாதம் 6 ஆம் தேதியன்று வெளியானது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகிறார்கள். இந்தத் திரைப்படத்திற்கு ஊடகங்களும் நல்ல படைப்பு என்ற விமர்சனத்தை வழங்கி வருகிறது. இதனால் இந்த திரைப்படம் மிகப் பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. தொடர்ந்து நூற்றுக்கணக்கான திரையரங்குகளில் ரசிகர்களின் பேராதரவுடன் இந்த படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த தருணத்தில் படத்தை வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும் , ரசிகர்களுக்கும் படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் விழா ஒன்றினை சென்னையில் ஒருங்கிணைத்திருந்தனர். இந்த விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
நடிகர் காளி வெங்கட் பேசுகையில்,
” இந்தப் படத்திற்கு இதுவரை வழங்கிய ஆதரவிற்கும், இதற்கும் மேலும் தொடர்ந்து வழங்கப் போகும் ஆதரவிற்கும் நன்றி. இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநருக்கு நன்றி. இப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியூசரான அபிஷேக் ராஜா மூலம் இயக்குநர் அறிமுகமாகி கதையை சொன்னார். அதன் பிறகு அந்த கதாபாத்திரத்தை சொன்னார். அது என்னுடைய தந்தையை நினைவு படுத்தியது. அவருக்கு சமர்ப்பிக்க இதைவிட சிறந்த வாய்ப்பு கிடைக்காது என்று இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.
இந்தப் படம் வெளியான பிறகு ரசிகர்களின் வரவேற்பை தெரிந்து கொள்வதற்காக திரையரங்கத்திற்கு சென்ற போது, சிலர் என்னை கட்டிப்பிடித்து அழுதனர். என் சட்டை ரசிகர்களின் கண்ணீரால் நனைந்தது. இந்த அனுபவம் புதிதாக இருந்தது மறக்க முடியாததாகவும் ஆகிவிட்டது.
நடிக்கும்போது அந்த கதாபாத்திரம் ரசிகர்களிடத்தில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைக்கவில்லை.கலையில் மட்டும் தான் அழுவதை கூட ரசிக்க முடியும். இது சினிமாவில் உள்ள நடிகர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம். நான் இதற்கு முன்பு அதிகமாக பார்த்த படம் கார்கி. தற்போது அதைவிட அதிகமாக பார்த்த படம் மெட்ராஸ் மேட்னி. ஏனெனில் இந்தப் படத்தின் ஒலி அமைப்பு மிகச் சிறப்பாக இருந்தது.
இந்தப் படத்தில் ஒரு பாடலை பாடிய வடிவேலுக்கு நன்றி. மேலும் இந்த திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் மற்றும் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை படமாக்குவதில் என்ன இருக்கிறது? என்ற கேள்விக்கு இயக்குநர் இந்த படத்தை பதிலாக அளித்திருக்கிறார். இதனால் நான் இயக்குநரை மனதார பாராட்டுகிறேன். மேலும் இந்தக் கதையை.. அவர் சொன்ன விதத்தை நான் முக்கியமானதாக பார்க்கிறேன்.
ஒரு கவிதையை மொழிபெயர்த்து அதனை திரைப்படமாக உருவாக்குவது போல் இருந்தது. இயக்குநர் கார்த்திகேயன் மணி தொடர்ந்து இது போன்ற படங்களையும் இயக்க வேண்டும். மேலும் இந்தப் படம் ஏராளமானவர்களுக்கு புது நம்பிக்கையை அளித்திருக்கிறது. இதற்காகவும் இயக்குநர் கார்த்திகேயன் மணிக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.