“மெட்ராஸ்காரன்”படத்தின்”காதல் சடுகுடு” பாடல் வெளியீடு!

Get real time updates directly on you device, subscribe now.

SR PRODUCTIONS சார்பில் B.ஜகதீஸ் தயாரிப்பில், ரங்கோலி பட இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகாம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில், புதுமையான ஆக்சன் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “மெட்ராஸ்காரன்”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் “காதல் சடுகுடு” பாடல் வெளியீட்டு விழா, தனியார் மாலில், மக்கள் முன்னிலையில் படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, சிறப்பாக நடைபெற்றது.

ஆடல், பாடல், நடனம் மற்றும் மேஜிக் ஷோ என மக்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்ற இந்நிகழ்வினில் இயக்குநர் வாலி மோகன் தாஸ் பேசியதாவது…

மிக மிகச் சந்தோசமாக இருக்கிறது. படம் ஆரம்பித்து இவ்வளவு தூரம் வந்துவிட்டது. விரைவில் உங்களை மகிழ்விக்கத் திரையில் இப்படத்தைக் கொண்டு வருகிறோம். இந்தப்படம் ஆரம்பமாக மிக முக்கிய காரணமாக இருந்த ஐஸ்வர்யா தத்தாவுக்கு நன்றி. சதீஷ் மாஸ்டர், அருமையாக வேலை பார்த்துத் தந்ததற்கு நன்றி. எடிட்டர் வசந்த் பார்க்க சின்னப்பையன் போல இருப்பார், ஆனால் அருமையாக வேலை பார்த்துள்ளார். ஷேன் நிகாம், நிஹாரிகா இருவரும் பெரும் ஒத்துழைப்பு தந்தனர், இருவருக்கும் நன்றிகள். தயாரிப்பாளர் ஜகதீஸ் என் மீது நம்பிக்கை வைத்து முழுதாக கதை கேட்காமல் தயாரித்தார் அவருக்கு நன்றி. படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும் அனைவருக்கும் நன்றி.

மலையாளத்தில் புகழ்பெற்ற கும்பளாங்கி நைட்ஸ், ஆர் டி எக்ஸ், இஷ்க் படப்புகழ் நடிகர் ஷேன் நிகாம், இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக தெலுங்குத் திரையுலகின் மிகப்பெரும் நட்சத்திரக்குடும்பமான சிரஞ்சீவி குடும்பத்திலிருந்து முன்னணி நடிகை நிஹாரிகா நடிக்கிறார். இவர்களுடன் நடிகர் கலையரசன் முதன்மைப் பாத்திரத்தில் இணைந்து நடிக்கிறார்.

ஒரு சிறு ஈகோ, ஒருவனின் வாழ்வை எந்த எல்லைக்கு கூட்டிச்செல்லும் என்பதே இப்படத்தின் மையம். ரங்கோலி படம் மூலம், பள்ளிச் சிறுவர்களின் வாழ்வியலை வண்ணங்களாக தீட்டிய, இயக்குநர் வாலி மோகன் தாஸ், இப்படத்தில் ஒரு சிறு சம்பவம் பெரும் பிரச்சனையாக, இருவர் வாழ்க்கையை புரட்டி எடுப்பதை, பரபரப்பான திரைக்கதையாக படைத்துள்ளார். இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் சாம் CS இசையமைக்கிறார்.

பெரும் பொருட்செலவில், உயர்தர தொழில் நுட்ப கலைஞர்களுடன் தரமானதொரு படைப்பாக SR PRODUCTIONS சார்பில் B. ஜகதீஸ் இப்படத்தை தயாரித்துள்ளார்.