பாரதிராஜா காலத்தில் வாழ்வது பெருமை- கார்த்தி
தமிழ்சினிமா வரலாற்றை எந்தப்பக்கத்தில் இருந்து எழுதினாலும் பாரதிராஜா என்ற பெயரை மட்டும் தவிர்க்கவே முடியாது. தமிழ்த்திரையில் பாரதிராஜா ஏற்படுத்திய மாற்றமும் ஏற்றமும் அப்படி! வைரமுத்து தான் சொல்வார், “பாரதிராஜா வரும்வரை எங்கள் ஊருக்கு சினிமா வந்தது, பாரதிராஜா வந்தபின் தான் எங்கள் ஊர் சினிமாவில் வந்தது”. எவ்வளவு சத்தியமான வார்த்தை. இன்றும் இளைய தலைமுறையினரால் ‘இயக்குநர் இமயம்’ எனக்கொண்டாடப்படும் பாரதிராஜா நடிப்பில் அவரது மகன் மனோஜ் எழுதி இயக்கியுள்ள மார்கழித் திங்கள் என்ற படம் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் பாரதிராஜா, சிவகுமார், சீமான், லிங்குசாமி, நடிகர் கார்த்தி உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர். விழாவில் அனைவரும் மனோஜின் திரைமுயற்சியைப் பாராட்டிப் பேசினார்கள். விழாவில் கார்த்தி பேசும்போது, ” ஒரு படத்தின் காட்சியை எப்படி அமைக்க வேண்டும். ஒரு பாடலின் லிங்-ஐ எப்படி சரியாக கதையோடு பொருத்த வேண்டும் என்பதையெல்லாம் நாங்கள் பாரதிராஜா சாரிடம் இருந்து தான் கற்றுக்கொள்கிறோம். அவர் வாழும் காலத்தில் நாங்களும் இருக்கிறோம் என்பதே பெருமை” என்றார். இப்படத்திற்கு இசை இளையராஜா என்பதாலும், 31 வருடங்களுக்குப் பிறகு பாரதிராஜா இளையராஜா கூட்டணி இணைந்திருப்பதாலும் தயாரிப்புத் தரப்பு பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறது