யதார்த்தத்துடன் கூடிய கலகலப்பான ‘மிடில்கிளாஸ்’ குடும்பக் கதை

Get real time updates directly on you device, subscribe now.

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் அனைவருமே வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறோம். படங்களில் கூட வேகம், விறுவிறுப்பு என்ற சூழல் வந்தவுடன் குடும்ப பாங்கான படங்களின் வருகை என்பது குறைந்துவிட்டது. அதிலும் குடும்ப படங்களில் முழுக்க காமெடி முன்னிலைப்படுத்தியது குறைந்தே விட்டது என்று கூறலாம். ஏனென்றால் குடும்பங்களில் தான் அவ்வளவு காமெடி கலாட்டாக்கள் இருக்கும். அதைக் கதைக்களமாகக் கொண்டு நம்மை மகிழ்விக்க ஒரு கலகலப்பான குடும்பக் கதை ஒன்று தயாராகவுள்ளது.

‘அறம்’ தொடங்கி சமீபத்திய ‘க/பெ ரணசிங்கம்’ வரை எப்போதுமே புதுமையான நம்பிக்கைக்குரிய கதைகளுக்குக் கைகொடுக்கும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் ராஜேஷ் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளார். அவருடன் இணைந்து ‘டோரா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான தாஸ் ராமசாமியின் கெளஷ்துப் எண்டர்டையின்மெண்ட் நிறுவனமும் தயாரிக்கிறது. எதார்த்தத்துடன் கூடிய கலகலப்பான இந்தக் கதை எழுதி, இயக்கவுள்ளார் கிஷோர் எம்.ராமலிங்கம். இவர் ‘களவாணி’ படத்தின் உதவி இயக்குநராக பணிபுரிந்தது மட்டுமன்றி ‘இது வேதாளம் சொல்லும் கதை’ மற்றும் ‘பூமிகா’ ஆகிய படங்களில் இணை இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார்.

‘மிடில்கிளாஸ்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு தீபாவளி முடிந்தவுடன் தொடங்கவுள்ளது. இதில் முனீஸ்காந்த், ‘கலக்கப் போவது யாரு’ ராமர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இதர நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் ஆச்சரியமூட்டும் நடிகர்கள் பட்டியல் வெளியாகும் என்கிறது படக்குழு.

நல்ல கதைக்கு, வலுவான தொழில்நுட்ப கலைஞர்கள் அமைந்துவிட்டால் வெற்றி உறுதி என்பார்கள். அப்படி பல்வேறு படங்களுக்கு தனது ஒளிப்பதிவால் அழகூட்டிய ஆர்வி ஒளிப்பதிவாளராகவும் பணிபுரியவுள்ளார். இசையமைப்பாளராக சந்தோஷ் தயாநிதி, எடிட்டராக ஆனந்த் ஜெரால்டின், கலை இயக்குநராக ஏ.ஆர்.மோகன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். தற்போது படப்பிடிப்பு தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.