ரசிகர்களை சிரிக்க வைக்க வருகிறார் ‘மிஸ்டர். பாரத்’!

Get real time updates directly on you device, subscribe now.

சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர். பாரத்’ படத்தின் கிளிம்ப்ஸ் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பேஷன் ஸ்டுடியோஸ், ஜி ஸ்குவாட் மற்றும் தி ரூட் போன்ற புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்கும் படங்கள் பொதுவாக தீவிரமான ஆக்‌ஷன் அல்லது க்ரைம் த்ரில்லர்களாக இருக்கும். ஆனால் ஆச்சரியப்படும் விதமாக, அவர்களின் வரவிருக்கும் படமான ‘மிஸ்டர். பாரத்’ ரசிகர்களை சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியுள்ளது. பாரத் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தை நிரஞ்சன் எழுதி இயக்குகிறார்.

தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம், லோகேஷ் கனகராஜ் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோர் கூறும்போது, “திறமையான ‘பைனலி’ டீமுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். பாரத் மற்றும் நிரஞ்சன் இருவரும் தங்கள் வீடியோக்கள் மூலம் உலகம் முழுவதுமுள்ள ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர். அவர்கள் ‘மிஸ்டர். பாரத்’ மூலம் திரையுலகி அடியெடுத்து வைப்பது பெருமையாக உள்ளது. திறமையாளர்களை ஊக்குவிப்பதை நாங்கள் எப்போதும் விரும்புகிறோம். மேலும் ‘மிஸ்டர். பாரத்’ பார்வையாளர்களுக்கு பிடித்த ஒன்றாக இருக்கும். இந்த தலைப்பை எங்களுக்கு வழங்கிய ஏவிஎம் புரொடக்ஷன்ஸுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்” என்றனர்.

இயக்குநர் நிரஞ்சன் கூறும்போது, “ஒவ்வொரு ஆர்வமுள்ள இயக்குநருக்கும் நடிகருக்கும் சிறந்த படம் கொடுக்க வேண்டும் என்ற ஆசை எப்போதும் இருக்கும். அந்த வகையில், சினிமாவில் சிறந்த தயாரிப்பு நிறுவனத்துடன் பணியாற்றுவது எங்களுக்கு மகிழ்ச்சியான விஷயம். இது மிகவும் எளிமையான கதைக்களம். கதாபாத்திரத்தை மையப்படுத்தி கதை நகரும். பிடிவாதமான குணம் கொண்ட ஒருவன் காதல் திருமணத்தை விரும்புகிறான். ஆனால், ஒரு பெண்ணே முன் வந்து அவனிடம் காதல் சொல்லும்போது அதை அவனால் உணரக்கூட முடியவில்லை. இது நிறைய ஆச்சரியங்களைக் கொண்ட எண்டர்டெயின்மெண்ட் படம்” என்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில், குறுகிய காலத்தில் முழு படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.