முடிஞ்சா இவன புடி – விமர்சனம்

RATING : 3/5
எஸ்.எஸ்.ராஜமெளலியின் ‘நான் ஈ’ படத்தில் ஒரே ஒரு ஈயின் துரத்தலுக்கு பயந்து ஓடும் கிச்சா சுதீப் இரண்டு தொழிலதிபர்களின் கண்களில் விரலை விட்டு ஆட்டுவது தான் இந்த ‘முடிஞ்சா இவன புடி!’.
சட்டத்துக்கு விரோதமாக கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் தொழிலதிபர்களிடமிருந்து அவர்களுக்கு தெரியாமல் கோடிக்கணக்கான பணத்தை ஆட்டையப் போடுகிறார் ஹீரோ சுதீப்.
அவர் தான் திருடுனார் என்பது வில்லன் கோஷ்டிக்கும் தெரிந்தும் ஆதாரம் கிடைக்காமல் அள்ளாடுகிறார்கள். இருந்தாலும் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி போலீசை வைத்து சுதீப்பை மிரட்ட, அவரோ அது நான் இல்லை என்னை மாதிரியே இருக்கிற என் அண்ணன் என்கிறார்.
சுதீப்புக்கு உண்மையிலேயே அண்ணன் இருக்கிறாரா? கொள்ளையடித்த கோடிக்கணக்கான பணத்தை என்ன செய்கிறார்? என்பதை நித்யாமேனனுடனான சின்னதா ஒரு லவ் போர்ஷனுடன் சொல்லி முடிக்கிறார் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்.
‘நான் ஈ’ வில்லனாக அறிமுகமானவர் இதில் கமர்ஷியல் ஹீரோவாக எண்ட்ரி கொடுத்திருக்கிறார். தமிழில் எப்படி விஜய் – அஜித்தோ அப்படித்தான் கன்னடத்தில் கிச்சா சுதீப். சின்னச் சின்னதாய் ஸ்டைல் காட்டுவதிலாகட்டும், லவ், டான்ஸ், ஆக்ஷன் காட்சிகளாகட்டும் மாஸ் ஹீரோவுக்கான லெவலை கொஞ்சமும் குறைவில்லாமல் திரையில் தருகிறார்!
நாயகியாக வரும் நித்யாமேனன் சுதீப்பின் உசரத்துக்கு ஈடுகொடுத்து நடிப்பதிலும், டான்ஸ் ஆடுவதிலும் சமாளித்திருக்கிறார். மணிரத்னம் படத்தில் பார்த்ததை விட ஒரு சுற்று பெருத்துப் போயிருக்கிறார். ( வெயிட்டைக் குறைங்கம்மா…) காமெடிக்கு சதீஷ் கேரண்டி தருகிறார்.
முகேஷ் திவாரி, சரத் லோகிஸ்டாவா, சாய் ரவி மூவரும் அவர்கள் உடம்பு வெயிட்டைப் போலவே வில்லத்தனத்திலும் செம வெயிட்!
ப்ளாஷ்பேக் காட்சிகளில் வரும் பிரகாஷ்ராஜ் நெகிழ்வான நடிப்பில் மனதில் ஈரம் கசிய வைக்கிறார்.
ராஜ ரத்தினத்தின் ஒளிப்பதிவும், டி.இமானின் இசையும் கமர்ஷியல் படத்துக்கே உரிய நிறைவு.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய ‘வில்லன்’ படத்தின் கதையையே லைட்டாக மாற்றம் செய்து தந்திருக்கிறாரோ கதைக்கு சொந்தக்காரரான டி. சிவகுமார் என்கிற சந்தேகம் வராமல் இருக்காது. அந்தளவுக்கு முழுப்படத்திலும் ‘வில்லன்’ படத்தின் சாயல் அப்பட்டமாகத் தெரிகிறது.
அதைத்தாண்டி கே.எஸ்.ரவிக்குமாரின் படங்களுக்கே உரிய காதல், ஆக்ஷன், செண்டிமெண்ட், காமெடி என சகல கலவைகளும் சேர்ந்து அந்தக் குறையை பெரிதாக எடுத்துக்காதீங்கப்பா… என்று சொல்ல வைத்து விடுகிறது.
வழக்கமாக தன்னுடைய படங்களில் கிளைமாக்ஸில் வந்து காமெடியோடு சுபம் போடும் கே.எஸ்.ரவிகுமார் இந்தப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் டான்ஸ் போடுவதோடு ஓதுங்கி விடுகிறார்.
கமர்ஷியல் படங்களில் கிங்கான கே.எஸ்.ரவிக்குமார் தொழில்நுட்ப ரீதியாக மட்டும் தன்னை அப்டேட் செய்து கொண்டால் போதாது. கதை, திரைக்கதை போன்ற படங்களின் ஜீவனான விஷயங்களிலும் தன்னை அப்டேட் செய்து கொள்வது சாலச்சிறந்தது.
முடிஞ்சா இவன புடி – ஆக்ஷன்