முப்பரிமாணம் – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

Mupparimanam

RATING : 2/5

டிக்கிற படம் ஒவ்வொன்றிலும் எடுக்கிற பரிமாணம் எதுவும் சாந்தனுக்கு செரிமானம் ஆன பாடில்லை. இருந்தாலும் தன் ‘முன்னணி ஹீரோ’ முயற்சியிலிருந்து பின் வாங்காமல் பாலாவின் சீடரான அதிரூபனை முழுமையாக நம்பி இன்னொரு பரிமாணம் எடுத்திருக்கும் படம் தான் இந்த ”முப்பரிமாணம்.”

குழந்தை பருவத்திலிருந்தே பக்கத்து பக்கத்து வீட்டில் வசிக்கும் ஹீரோ சாந்தனுவும், ஹீரோயின் சிருஷ்டி டாங்கேவும் வயசுப் பருவம் வந்ததும் காதலர்கள் ஆகிறார்கள்.

இருவரின் காதலும் சாதி வெறிப் பிடித்த சிருஷ்டியின் அப்பாவுக்கும், அண்ணனுக்கும் தெரிய வர, நம் திருமணம் நடந்தால் என் வீட்டார் என்னை கொலை செய்யக்கூட தயங்க மாட்டார்கள் என்று சாந்தனுவை சந்திப்பதையே தவிர்க்கிறார் சிருஷ்டி.

இதனால் மனம் நொந்து போகும் சாந்தனு தன் காதலியின் உயிரைக் காப்பாற்ற காதலை தியாகம் செய்து விட்டு அவளை மறக்க முடியாமல்  மது, போதைக்கு அடிமையாகி மனநலம் பாதிக்கப்பட்டவராகி விடுகிறார்.

மகனின் மோசமான நிலையை நேரில் பார்த்து நொந்து போகும் சாந்தனுவின் அம்மா ஹார்ட் அட்டாக்கில் இறந்து விடுகிறார், பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீளும் சாந்தனு பிரபல நடிகர் ஸ்கந்தா தன் காதலி சிருஷ்டியை திருமணம் செய்யப் போகிறார் என்று கேள்விப்பட்டதும் அவரை காரில் கடத்துகிறார்.

பிரிந்த காதலர்கள் ஒன்று சேர்வார்கள் என்று பார்த்தால் இடைவேளைக்குப் பிறகு சின்னதாய் ஒரு ட்விஸ்ட் வைத்து கதை வேறொரு டிராக்கில் பயணிக்கிறது. அதன் முடிவு என்ன என்பதே கிளைமாக்ஸ்.

ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் நடக்கிற சம்பவங்களில் சரி, தவறு என்கிற இரண்டு பரிமாணங்கள் தான் இருக்கும். இந்த இரண்டையும் தாண்டி மூன்றாவதாக நாம் மனம் சொல்கிறபடி எடுக்கிற முடிவால் நம் வாழ்க்கை எவ்வாறு அமையும் என்பதே இந்தப்படம் நமக்கு சொல்ல வருகிறது.

இதுவரை நடித்த படங்களில் ஏதோ வந்தோம், போனோம் என்றிருந்த சாந்தனு இப்படத்தில் கேரக்டர்களுக்காக ரொம்பவே உழைப்பைக் கொட்டியிருக்கிறார். மென்மையான இளைஞர், அந்தக் காதலைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஆவேசம் கொள்கிற இளைஞர் என இருவேறு பரிமாணம் காட்டியிருக்கிறார்.

நடனத்தில் சாந்தனு கை தேர்ந்தவர் என்பதை அவரது முந்தைய படங்களில் நிரூபித்து விட்டார். இதில் ஆக்‌ஷன், நடிப்பு  இரண்டிலும் ஒருபடி முன்னேற்றம்.

படம் முழுக்க வரும் சிருஷ்டி டாங்கே கிளைமாக்ஸில் தான் நடிப்பில் மிரட்டுகிறார். தேடி வருகிற பகட்டு வாழ்க்கையை இழக்க எந்தப் பெண்ணும் விரும்ப மாட்டாள் என்கிற இந்தக் காலத்து இளம் பெண்களின் மனநிலையை அப்படியே திரையில் பிரதிபலிக்கிறது அவரது கேர்க்டர்.

படத்திலும் நடிகராக வரும் ஸ்கந்தா அதற்கான தேர்ந்த நடிப்பில் எந்தக் குறையும் வைக்கவில்லை.

 இப்படி சில விஷயங்களை பாராட்டத் தோன்றினாலும் சாக்லேட் பாயான சாந்தனுடன்  அப்புக்குட்டி, சுவாமிநாதன் என முத்தின முகங்களை நண்பர்களாக்கியிருப்பது தான் படத்தில் சகித்துக் கொள்ளவே முடியாத ஆகப் பெருங்கொடுமை! அதிலும் அப்புக்குட்டி கத்திபடியே வசனம் பேசுகிற அந்த சீரியஸான ஹாஸ்பிட்டல் காட்சியில் மொத்தத் தியேட்டரும் விழுந்து விழுந்து சிரிக்கிறது.

ஜி.வி பிரகாஷின் இசையில் பின்னணி மற்றும் பாடல்கள் மோசமில்லை. ராசாமதியின் ஒளிப்பதிவில் 27 நட்சத்திரங்கள் ஆடிப்பாடும் அந்த ஹேப்பி நியூ இயர் பாடல் கலர்புல் என்றால் பொள்ளாச்சி, கேரளாவின் பச்சைப் பசேலென்ற பகுதிகள் புது ரசனை.

காதலுக்கு குறுக்கே நிற்கும் சாதி என்கிற அறுதப்பழசான யோசனையாக இருந்தாலும், இடைவேளைக்குப் பிறகு திரைக்கதை வேறோரு பாதையில் பயணிப்பது சுவாரஷ்யம். ஆனால் மெதுவாக நகரும் முதல் பாதி காட்சிகள் அந்த சுவாரஷ்யத்தையும் அப்படியே குறைத்து விடுகிறது.

வழக்கமான ரொமாண்டிக் த்ரில்லராக இருக்கக் கூடாது என்று கவனமாக இருந்த இயக்குநர் அதிரூபன் படத்தின் வேகத்தையும் ஆமை வேகமாக இல்லாமல், முயல் வேகத்தில் நகர்த்தியிருந்தால் முழுமையாக கவர்ந்திருக்கும் இந்த ‘முப்பரிமாணம்.’