‘கில்லி நாங்கடா சொல்லியடிப்போம்’ : விஜய் ரசிகர்களிடம் பிரபலமான இசையமைப்பாளர் குரு கல்யாண்!

மாத்தியோசி, குகன், கோட்டி ஆகிய படங்களில் பணியாற்றிய இளம் இசையமைப்பாளர் குரு கல்யாண்.
அந்தப் படங்களுக்குப் பிறகு புதுப்பட வாய்ப்புகளுக்கு காத்துக் கொண்டிருந்த போது தான் ஏன் நான் தனியாக பாடல்களை வெளியிடக்கூடாது என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்.
அதனடிப்படையில் யூடியூபில் சொந்தமாக ‘குரு கல்யாண் மியூசிக்’ என்கிற பெயரில் ஒரு சேனலை ஆரம்பித்திருக்கிறார். ஆரம்பித்த முதல் அந்தச் சேனலில் தான் இசையமைத்த தனிப் பாடல்களையும், ஆல்பங்களையும் வெளியிட்டு வருகிறார்.
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஒரு பாடல், உலகத்தையே தமிழகம் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஜல்லிக்கட்டுவை முன்னிறுத்தி ஒரு பாடல் என தொடர்ச்சியாக பாடல்களை வெளியிட்டார்.
சென்ற ஆண்டு காலமான பாடலாசிரியர் அண்ணாமலையின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பாடல், விவசாயம் தொடர்பான ‘வதுவை நன்மணம்’ என்னும் தனிக் கவிதை பாடல் ஒன்றை வெளியிட்டார்.
இந்தப் பாடலை எழுதியது நடிகர் விஜய்யின் ஆஸ்தான பாடலாசிரியரான பழநிபாரதி. அதன் மூலமாகத்தான் விஜய் ரசிகர்களின் பார்வை குரு கல்யாணின் இசை மீது விழுந்திருக்கிறது. இதனால் அவர்கள் மத்தியில் பிரபலமானதும் நடிகர் விஜய்யை வாழ்த்தியும், அவரது ரசிகர்களை பாராட்டும் விதத்திலும் ‘இளைய தளபதி ரசிகன்டா’ என்கிற தலைப்பில் பழனிபாரதி ஒரு பாடலை எழுத அதற்கு இசையமைத்து தனது யூ-டியூப் சேனலில் வெளியிட்டார்.
‘கில்லி நாங்கடா…; சொல்லியடிப்போம்’ என்று ஆரம்பிக்கும் அந்தப் பாடல் ‘பெர்பெக்ட் விஜய் ஆன்தம்’ என்கிற பெயரில் வெளியாகி விஜய்யின் கோடிக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றது.
தற்போது தலைநகர் தில்லியில் நடைபெற்றும் தமிழக விவசாயிகளின் அறப்போராட்டத்தை ஆதரித்தும் இயற்கை நம்மை கைவிடாது என்பதை வலியுறுத்தியும் ‘விவசாயிகள்’ என்னும் பாடலை வெளியிட திட்டமிட்டுள்ளாராம். இந்தப் பாடலை உமா சங்கர் என்கிற புதுமுக இயக்குநர் இயக்கப் போகிறார்.
அதோடு உமா ஷங்கருடன் இவர் பணியாற்றிய ‘ஈஷா’ என்னும் குறும்படம் திருக்குறளின் 146-ன் பொருட் கருவை மையமாக வைத்து உருவானது. இந்தக் குறும்படம் ‘தாதா சாஹேப் பால்கே குறும்பட விருது’க்கு அனுப்பப்பட்டுள்ளது என்று பெருமிதத்தோடு சொல்கிறார் குரு கல்யாண்.
இப்படி தனிப்பாடல்களில் தன் கவனத்தை செலுத்தி வருகின்ற அதே நேரத்தில் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் பணியையும் குரு கல்யாண் விடவில்லை.
ஆமாம், இயக்குநர் உமா சங்கருடன் இணைந்து ஸ்ரீசாயி பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் தயாரிப்பில் புதுப்படம் ஒன்றுக்கு இசையமைக்கப் போகிறாராம் குரு கல்யாண்.
குரு என்கிற தன் பெயருடன் அமெரிக்காவில் வசிக்கும் தனது அண்ணன் கல்யாண் பெயரையும் இணைத்தே படங்களில் இசையமைத்து வருகிறார் குரு கல்யாண். அந்த வகையில் தனது புதுப்படத்தின் இசைக்கோர்ப்பு வேலைக்கும் அமெரிக்காவில் வசித்து வரும் அண்ணன் கல்யாண் துணையாக இருப்பார் என்கிறார் குரு கல்யாண்!
விஜய்யின் புகழ் பாடும் பாடல் வெளியிட்டவரை அஜித் ரசிகர்கள் சும்மாவா விட்டார்கள்? என்று கேட்டால் ஆச்சரியமான ஒரு தகவலைச் சொன்னார் குரு கல்யாண்.
”நெஜமா சார் விஜய் சாரோட புகழ் பாடுகிற அந்தப் பாடலைப் பார்த்து அஜித் ரசிகர்கள் ஒருத்தர் கூட கிண்டல் பண்ணியோ, கேலி பண்ணியோ ஒரு கமெண்ட் கூட போடவில்லை சார்’’ என்றார்.
உண்மையிலேயே ஆச்சரியமான தகவல் தான்.