மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார்

Get real time updates directly on you device, subscribe now.

m.s.v

சென்னை தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 87.

கேரளாவின் பாலக்காட்டுக்கு அருகில் எலப்புள்ளி என்ற கிராமத்தில் 1928ம் ஆண்டு மலையாளக் குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை சுப்ரமணியன். தாய் நாராயண குட்டியம்மாள் விஸ்வநாதன் 1953 ஆம் ஆண்டில் வெளிவந்த ம. கோ. இராமச்சந்திரனின் ஜெனோவா திரைப்படத்தில் வெளிவந்த நான்கு பாடல்களுக்கு முதன் முதலாக இசையமைத்தார். தமிழ் திரைப்படங்களில் அதிகம் பணிபுரிந்தாலும் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னட படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இவர் 1200 திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

தனது நான்காவது வயதிலேயே தந்தையை இழந்த விஸ்வநாதன் கண்ணனூரில் உள்ள தன் தாத்தா கிருஷ்ணன் நாயர் வீட்டிற்கு சென்று வளர்ந்தார். பள்ளிப் படிப்புப் படிக்காத இவர் இசையின் மீது கொண்ட நாட்டத்தால் அங்கு கர்நாடக இசையை நீலகண்ட பாகவதரிடம் பயின்று 13​வது வயதிலேயே மேடைக் கச்சேரி நிகழ்த்தினார்.

இசையமைப்பாளர் சி. ஆர். சுப்புராமன் இசைக்குழுவில் இவர் ஆர்மோனியத்தையும் டி. கே. ராமமூர்த்தி வயலினையும் வாசிப்பவர்களாக பணிபுரிந்தார்கள். உடல்நல குறைவு காரணமாக, சி. ஆர். சுப்புராமனுடைய மறைவால் முழுமை பெறாமல் இருந்த தேவதாஸ், சண்டிராணி, மணமகள் போன்ற படங்களை அவரின் உதவியாளர்களாக இருந்த விஸ்வநானும் ராமமூர்த்தியும் முடித்துக் கொடுத்தார்கள்.

தேவதாஸ் (தமிழ் & தெலுங்கு) மற்றும் சண்டிராணி (தமிழ், தெலுங்கு & இந்தி) படங்களின் இணை இசையமைப்பாளராக இவர்கள் இருவரும் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். இப்படங்கள் வெற்றி பெற்றதால் ஹிந்தியில் சங்கர்-ஜெய்கிஷன் என்ற பெயரில் புகழ்பெற்ற இரட்டை இசையமைப்பார்கள் இருந்தது போல் தமிழில் விஸ்வநாதன்-இராமமூர்த்தி என்ற இரட்டை இசையமைப்பாளராக உருவாகலாம் என்ற எண்ணத்தை விஸ்வநாதன் இராமமூர்த்தியிடம் தெரிவித்து அவரது இணக்கத்தைப் பெற்றார். இவர்கள் இருவரும் பணம் என்ற திரைப்படத்திற்கு முதலில் இணைந்து இசையமைத்தார்கள்.

ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வரை 700 படங்களுக்கு இணைந்து இசையமைத்தார்கள். இவர் தனியாக 500 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இளையராஜாவோடு சேர்ந்து, மெல்லத் திறந்தது கதவு, செந்தமிழ்ப் பாட்டு, செந்தமிழ் செல்வன் என மூன்று படங்களுக்கு இசையமைத்துள்ளார். 1995-ல் சத்யராஜ் நடித்த எங்கிருந்தோ வந்தான் என்ற திரைப்படத்தில் இருவரும் மீண்டும் இணைந்து இசையமைத்தார்கள்.

1963ம் ஆண்டு ஜூன் மாதம் 16-ஆம் தேதி மதராஸ் ட்ரிப்ளிகேன் கல்சுரல் அகாடமி சார்பில் இந்து நாளிதழ் உதவியுடன் இயக்குனர் ஸ்ரீதர் மற்றும் “சித்ராலயா”கோபு முன்னிலையில் நடைபெற்ற விழாவில் சிவாஜி கணேசனால் விசுவநாதன்-இராமமூர்த்திக்கு மெல்லிசை மன்னர்கள் என்று பட்டம் வழங்கப்பட்டது

கண்ணகி, காதல் மன்னன், காதலா காதலா போன்ற 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர் இசையமைத்த பல்லாயிரக்கணக்கான பாடல்களில் உள்ளத்தில் நல்ல உள்ளம்(கர்ணன்), மயக்கமா கலக்கமா, மனிதன் என்பவன் தெய்வமாகலாம்(சுமைதாங்கி), வசந்தத்தில் ஓர் நாள்(மூன்று தெய்வங்கள்), எங்கே நிம்மதி(புதிய பறவை), அவளுக்கு என்ன அழகிய முகம்(சர்வர் சுந்தரம்), அதோ அந்த பறவை (ஆயிரத்தில் ஒருவன்) உள்ளிட்ட காலத்தால் அழியாத ஆயிரக்கணக்கான பாடல்கள் தந்தவர் எம்.எஸ்.வி

ஏ.பீம்சிங், கிருஷ்ணன் பஞ்சு, ஏ.சி. திருலோசந்தர், கே.பாலசந்தர் என்ற இயக்குநர்களிடம் மற்ற இயக்குனர்களை விட அதிகமாக வேலை பார்த்திருக்கிறார். தமிழ்த் தாய் வாழ்த்தான நீராடும் கடலுடுத்த பாடலுக்கு மோகன இராகத்தில் இசைக் கோர்ப்பு செய்தவர் விஸ்வநாதன்.

வி.குமார், இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், கங்கை அமரன், தேவா, யுவன் சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் போன்ற அனைத்து இசையமைப்பாளர்களின் இசையமைப்பிலும் பாடல்களை பாடி இருக்கிறார்.

மெல்லிசை மன்னர், கலைமாமணி, திரை இசை சக்கரவர்த்தி உள்ளிட்ட பல பட்டங்களையும், தென்னிந்திய பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருதும், சிறந்த இசையமைப்பாளருக்கான கேரள அரசு விருதும் பெற்றவர். ஃபிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட பல விருதுகளையும் பெற்றவர்.

எம்.எஸ்.வி மறைந்து விட்டாலும் இந்த உலகம் இருக்கும் வரை அவரது புகழ் இசை ரசிகர்களிடையே நீங்கா இடம் பெற்றிருக்கும்.