ரசிகர்களை நேரில் சந்தித்த “மை லார்ட்” படக்குழு !

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில், நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘ மை லார்ட்’ ( My Lord) எனும் திரைப்படம் – பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
நேற்று ஆயிரக்கணகான ரசிகர்கள் முன்னிலையில், பட வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் ரசிகர்களைச் சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து, பாடல் பாடி, பட வசனங்கள் பேசி, ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். மேலும் மை லார்ட் படம் குறித்த தகவல்களை ரசிகர்களோடு பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வினில் நடிகர் சசிக்குமார் பேசியதாவது…,
டூரிஸ்ட் ஃபேமிலியில் மனிதநேயத்தைப் பற்றி சொன்ன மாதிரி, இந்த படமும் உங்களுக்கு அன்பையும், மனிதநேயத்தையும் போதிக்கும் படம். என்னுடைய படங்கள் எப்போதுமே ஃபேமிலிக்கான படங்கள். உங்கள் குடும்பத்தோட, குழந்தைகளோட நிச்சயமாக வந்து பார்க்கலாம். இளம் தலைமுறைக்கும் ஏற்ற ஒரு படம். இப்போ உள்ள ஜெனரேஷன், வேகமா கோபப்படுற சூழ்நிலைக்கு நடுவில்,
“பொறுமையா இருங்க, மனிதநேயமா இருங்க” என்று சொல்கிற படம். ராஜுமுருகன் சார் ஸ்டைலில், கலகலப்பான காமெடியோட படம் நகரும். உங்களை சோகப்படுத்த மாட்டோம். அழ வைக்க மாட்டோம். சிரிக்க வைப்போம்… சிந்திக்க வைப்போம்.
நாயகி சைத்ரா, கர்நாடகாவிலிருந்து வந்து தமிழில் சிறப்பாக நடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார். “கன்னடத்தில் சிறந்த நடிகையாக இருப்பதுபோல, தமிழிலும் அவர் ஒரு முக்கிய நடிகையாக வளர்வார். மை லார்ட் அவருக்கான சிறந்த அறிமுகமாக இருக்கும்.
படத்தில் குரு சோமசுந்தரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எதிர்பாராத சூழ்நிலையில் படக்குழுவில் இணைந்த அவர், எந்த தயக்கமும் இன்றி வந்து கதாபாத்திரத்திற்கு முழுமையான உயிர் கொடுத்தார்.
இசையமைப்பாளர் ஷான் குரல் எல்லோரையும் கவரும் தன்மை கொண்டது. காதல், சோகம், சந்தோஷம் – எந்த உணர்வாக இருந்தாலும் அவரது குரல் மனதில் நிற்கும். டூரிஸ்ட் ஃபேமிலிக்குப் பிறகு மீண்டும் இணைவது மிகுந்த சந்தோஷம். பிப்ரவரி 13-ஆம் தேதி, சமயத்தில் மை லார்ட் படம் வருகிறது அனைவரும் பார்த்து கொண்டாடுங்கள்.
ஏழை எளிய மக்கள் மீது நடைபெறும் அதிகார அத்துமீறல் தொடர்பான காட்சிகள் அரசியல் நையாண்டியுடன், அன்பான குடும்ப உறவுகள் குறித்த விசயங்களை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் ராஜுமுருகன்.
இப்படத்தில் சசிகுமார், சைத்ரா ஜே. ஆச்சார், ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம் , ஆஷா சரத் , இயக்குநர் கோபி நயினார், வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, பாடலாசிரியர் யுகபாரதி பாடல்களை எழுத, ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை முனி பால்ராஜ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை சத்யராஜ் நடராஜன் கவனிக்கிறார். டி. ஆர். பூர்ணிமா ஆடை வடிவமைப்பாளராக பணியாற்ற, நடனத்தை எம். ஷெரீப்பும், சண்டை காட்சிகளை பி. சி. ஸ்டண்ட்டும் அமைக்கிறார்கள். அடித்தட்டு மக்களின் வாழ்வியல் சுரண்டலை சட்டயர் (Satire) பாணியில் விவரிப்பதுடன் ஃபேமிலி என்டர்டெய்னராகவும் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிக்கிறார். இதனை அம்பேத்குமார் வழங்குகிறார் . இதனை தமிழகம் முழுவதும் ஸ்ரீ குமரன் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது.
“மை லார்ட்” திரைப்படம் எதிர்வரும் பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது