இந்த உலகத்தின் மிகமிக சுவையான உணவு கருவாடு தான்! – பட விழாவை கலகலப்பாக்கிய மிஸ்கின்

Get real time updates directly on you device, subscribe now.

mysskin

ந்த விழாவுக்கு வந்தாலும் கருப்புக் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு ரொம்ப சீரியசாகவே பேசக்கூடியவர் மிஸ்கின். தான் பேசுகிற ஒவ்வொரு முக்கியமான பாயிண்ட்டுக்கும் வந்திருக்கும் விருந்தினர்களையும், மற்றவர்களையும் ”ப்ளீஸ் கொஞ்சம் கிளாப்ஸ் பண்ணுங்க…” என்று விரும்பி கேட்பார்.

அப்படி சீரியசாகவே பேசிப் பழக்கமுள்ள மிஸ்கின் முதல் முறையாக கலகலவென்று பேசிய ஆச்சரிய சம்பவம் ”சீமத்துரை” ஆடியோ வெளியீட்டு விழாவில் நடந்தது.

புவன் மீடியா ஒர்க்ஸ் சார்பில் ஈ சுஜய் கிருஷ்ணா தயாரிப்பில், கீதன், வர்ஷா பொல்லம்மாவுடன் விஜி சந்திரசேகர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கும் இந்தப்படத்தை, சந்தோஷ் தியாகராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார்.

இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

விழாவில் பேசிய இயக்குநர் மிஷ்கின், தனது வழக்கமான பேச்சு நடையால் விழாவை கலகலப்பாக்கினார்… “பொதுவாக இசை வெளீயிட்டு விழா என்பது பொய்கள் நிறைந்ததாகவே இருக்கும். இது என் படங்களுக்கும் பொருந்தும். ஆனால் உண்மையிலேயே இங்கே இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. காரணம் இங்கு வந்திருப்பவர்களின் பொய்யற்ற வெகுளித்தனம்.

Related Posts
1 of 7

விஜி சந்திரசேகர் இந்திய சினிமா குறைத்து மதிப்பிட்டு வைத்திருக்கும் ஒரு நடிகை, நிச்சயம் அவர் வரும் நாளில் கொண்டாடப்படுவார். அவர் தோழமையோடு கண்டிப்பாக கேட்டுக் கொண்டதின் பெயரிலேயே நான் இங்கிருக்கிறேன். இயக்குநர் சந்தோஷ் என்னை சந்திக்க வந்திருந்த போது தான் அவரை முதன் முதலாகப் பார்த்தேன். பார்த்த மாத்திரத்திலேயே அவரது நம்பிக்கை மிகுந்த கண்களும், முகமும் எனக்கு மிகவும் பிடித்துப் போனது. அவரது நம்பிக்கையே “சீமத்துரை” நன்றாக இருக்கும் என உறுதி செய்கிறது.

தான் வாழ்ந்த மண் சார்ந்தே தனது முதல் படத்தை எடுத்துள்ள இயக்குநருக்கு வாழ்த்துகள். குறிப்பாக தனது முதல் படத்திலேயே இசை வெளியீட்டு விழாவில் “மேக்கிங்” காட்சிகளை ஒளிபரப்பிய நம்பிக்கை எனக்கு பிடித்திருந்தது. இதற்கு முன்னர் நான் மட்டும் தான் “சித்திரம் பேசுதடி” படம் வந்தபோது இதை செய்தேன். இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் கீதன் மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார். அவரது முகம் எல்லோருக்குமே எளிதில் பதியும் விதத்தில் இருப்பது அவரது பலம், நிச்சயமாக உயரங்கள் தொடுவார்.

ட்ரெய்லரில் கருவாடு விற்பது போல காட்சிகள் இருந்தது, இந்த உலகத்தின் மிகமிக சுவையான உணவு கருவாடு தான். பழைய சோற்றுக்கும், கருவாட்டுக் குழம்பிற்கும் ஈடு இணையான உணவே கிடையாது. படத்தின் பாடல்களை பார்க்கும் போது அதில் ஒரு மிகையில்லாத ஒளிப்பதிவு நேர்த்தியை காண முடிந்தது. இசையமைப்பாளர் ஜோஸ் ஃப்ரான்க்ளின் அழகான பாடல்களைக் கொடுத்திருக்கிறார். படக்குழுவினர் அத்தனை பேருக்கும் என் வாழ்த்துகள்.” என்று பேசி முடித்தார்.

பின்னர் பேசிய விஜி சந்திரசேகர், “இந்தப் படத்தின் இயக்குநர் கதை சொன்ன விதம் எனக்கு பிடித்திருந்ததது. அதனால் தான் நடிக்க சம்மத்தித்தேன். இதில் பணியாற்றியிருக்கும் இந்த இளைஞர்களுக்கெல்லாம் என்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்பதற்காகவே அவர்களுக்கு துணையாக நிற்கிறேன். ஊரார் பிள்ளைகளை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளைகள் தானே வளரும் என்பதை நம்புகிறேன். நம்மால் முடிந்த அளவிற்கு பிறருக்கு உதவுவது நல்லது. சீமத்துரையில் ஓரளவிற்கு நன்றாக நடித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி” என்று சுருக்கமாக பேசினார்.

விழாவில் வசந்தபாலன், இயக்குனர் நடிகர் மனோபாலா, பொன்வண்ணன், தயாரிப்பாளர்கள் “அம்மா கிரியேஷன்ஸ்” சிவா, தனஞ்செயன், நடிகர்கள் கலையரசன், கதிர் மற்றும் எழுத்தாளர் நடிகர் வேலா ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பாக்கினார்.