நாய்சேகர் ரிட்டன்- விமர்சனம்

எனக்கு என்ட்டே கிடையாதுடா என்று தலைநகரம் படத்தில் வடிவேலு ஒரு வசனம் பேசுவார்..அந்தப்படத்தில் அவரின் பெயர் நாய்சேகர். அதையே தலைப்பாக்கி வடிவேலுக்கு ரீ-என்ட்ரி கொடுக்க முயற்சித்துள்ளார் இயக்குநர் சுராஜ்
வடிவேலுவின் தாய் தந்தைக்கு சாமியார் ஒருவரால் நீண்டகாலம் வாழும் நாய் ஒன்று வழங்கப்படுகிறது. அந்த நாய் வந்தபிறகு வடிவேலுவின் தாய்தந்தை வசதி வாய்ப்பில் பெரிதாக வளர்கிறார்கள். அந்த நாயை பாதுகாக்க ஒரு ஆளை வேலைக்கு நியமிக்கிறார் வடிவேலுவின் அப்பா. அந்த வேலைக்காரன் ஒருநாள் நாயைத் திருடிக்கொண்டுச் செல்ல, வடிவேலு வில்லனான வேலைக்காரனை ஒழித்து எப்படி நாயை மீட்கிறார் என்பது மீதிக்கதை. படத்தின் இந்த மெயின் கதைக்கு வருவதற்கு முன் ஒரு மணி நேரம் பல கதைகளால் சூழப்படுகிறது படம். அந்த இடைப்பட்ட நேரத்தில் வடிவேலு ஸ்டைலில் சொல்ல வேண்டுமானால், “என்னா அடி”
வடிவேலு நடிப்பில் எவையெல்லாம் பலமோ அவையெல்லாம் இப்படத்தில் பலவீனமாக வெளிப்பட்டுள்ளது. ஒவ்வொரு காட்சியிலும் அவரது ஆக்டிங் ஓவர் ஆக்டிங்காக இருக்கிறது. ஆனந்த் ராஜ் மட்டும் சில இடங்களில் ஆறுதல் தருகிறார். ரெடின் கிங்ஸ்ட்லி உள்பட வேறு யாவரின் காமெடியும் எடுபடவில்லை
படத்தில் காமெடி காட்சிகள் எப்படி திராபையோ அதைவிட திராபை சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை. அநியாயத்திற்கு சொதப்பியுள்ளார். ஒளிப்பதிவு ஓகே ரகம். வடிவேலுவின் செயற்கையான காஸ்ட்யூம் கடுப்ஸ் மை லார்ட்
வடிவேலு வந்தாலே சிரிப்பார்கள் என்பதை வடிவேலு நம்பலாம். இயக்குநர் நம்பலாமா? சுராஜ் மிக அழகாக காமெடியை கோர்ப்பவர் அவருக்கு என்னதான் ஆச்சு?
மொத்தத்தில் வடிவேலுவை நம்பி தியேட்டருக்குச் சென்றவர்கள் ஆறுதலுக்காக யூட்யூபில் அவரது பழைய காமெடிகளை பார்க்கும் படி அமைந்துவிட்டது நாய்சேகர் ரிட்டன்
2/5
#NaaiSekarReturns