நானும் ரவுடி தான் – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

nayan2

Rating : 4.1/5

ந்தப் படத்தின் டைட்டில் ‘தலைநகரம்’ படத்தில் வடிவேலு பேசி ரசிகர்களிடையே பிரபலமான வசனம்.

அந்த வசனத்துக்கு எந்த பங்கமும் வந்து விடாமல் முழுப்படத்தையும் லவ் வித் காமெடிப்படமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன். அதற்காக படத்தில் ஆக்‌ஷன் இல்லை என்று சொல்லிவிட முடியாது. அதையுமே காமெடியாக்கி ரசிகர்களின் வயிற்றை கதகளி ஆட விட்டிருக்கிறார்.

படத்தின் கதைக்களம் முழுவதும் பாண்டிச்சேரி தான். போலீசாக இருக்கு ராதிகாவுக்கு தனது மகன் விஜய் சேதுபதியை போலீசாக்கிப் பார்க்க வேண்டும் என்பது ஆசை.

ஆனால் விஜய் சேதுபதியோ போலீசை விட ரவுடி தான் பெரிய ஆள் என்கிற ஒருபக்க பார்வையிலேயே வளர்கிறார்.

தனது போலீஸ் அப்பாவை தன் கண் முன்னாலேயே அவமானப்படுத்தி வீட்டுக்கு பார்சல் குண்டை அனுப்பி அம்மாவையும் கொன்று, தனது காதையும் செவிடாக்கி விடும் மிகப்பெரிய ரவுடியான பார்த்திபனை தன் கையால் கத்தியால் குத்தி கொலை செய்ய வேண்டும் என்று லட்சியத்தோடு இருக்கிறார் நயன்தாரா.

இந்த இருவரும் ஒரு நேர்கோட்டில் சந்திக்கிற போது நயன்தாராவை காதலிக்கிறார் விஜய் சேதுபதி. அவரோ என்னை அனாதையாக்கிய ரவுடியை கொல்வது தான் லட்சியம். அது நிறைவேறினால் நம் காதலும் நிறைவேறும் என்கிறார்.

தன் காதலுக்காக ரவுடி பார்த்திபனை தீர்த்துக் கட்ட காதலி மற்றும் நண்பர்களோடு கிளம்புகிறார் விஜய் சேதுபதி.

அது நடந்ததா? இல்லையா? என்பதே சிரிக்க சிரிக்க முடியும் கிளைமாக்ஸ்.

விஜய் சேதுபதிக்கு இப்படிப்பட்ட அசால்ட்டான கேரக்டர் எல்லாம் திருநெல்வேலி அல்வாவை சுடச்சுட சாப்பிடுகிற மாதிரி. கிடைத்தால் விடுவாரா..? முகத்தை லேசாக அப்பாவித்தனமாக வைத்துக் கொண்டு அவர் செய்யும் சேட்டைகளை ரசித்துக் கொண்டே இருக்கலாம்.

Related Posts
1 of 9

நயன்தாராவின் அப்பா இறந்து விட்ட செய்தியைக் கூட சொல்ல முடியாமல் அவள் சந்தோஷமே முக்கியம் என்று நினைக்கிறார். பிறகு அவரது அம்மா ராதிகா மூலம் விஷயம் தெரிய வரவும் தான் ஏன் அதை மறைத்தேன் என்பதற்காக அவர் சொல்லும் காரணம் உண்மையான காதலின் யதார்த்தம்.

ஆர்.ஜே.பாலாஜியுடன் அவர் சேர்ந்து அடிக்கும் கூத்துகள் செம டைம்பாஸ். அதோடு ஆட்களை தீர்த்துக் கட்டுவதற்காகவே ஒரு கம்பெனியை நடத்தி வரும் விஜய் சேதுபதி நானும் ரவுடி தான் என்று நயன்தாராவை நம்ப வைப்பதற்குள் படும்பாடு சரியான காமெடி கலாட்டா.

கேட்காத காதுக்கு கால் கிலோவுல கம்மலா என்று நக்கல் அடிக்கிற அளவுக்கு வரிசையாக கம்மல்களை மாட்டிக் கொண்டு வருகிறார் நயன்தாரா. ஆனால் அவர் தயங்கி தயங்கி பேசுகிற விதமும், தனக்கு காது கேட்காது என்று யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக கெஞ்சுவதும் அப்படி ஒரு அழகு. இது போன்ற காட்சிகளில் பயன்படுத்தப்படும் உடல்மொழி ரொம்ப முக்கியம். அதை மிக இயல்பாக வெளிப்படுத்தி ரசிகர்களையே இரக்கப்பட வைக்கிறார் நயன்தாரா.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப்படத்தில் நாயகி கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் நயன்தாரா கொடுத்து வைத்தவர் தான்.

பார்ப்பதற்கு சின்டெக்ஸ் டேங் சைஸ் வில்லனாக இருந்தாலும் பிறந்த குழந்தை கூட துள்ளி எழுந்து சிரித்து விடும் பார்த்திபன் அடிக்கும் ‘பஞ்ச்’களில்! கூடவே ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன் என அவர்களும் தங்கள் பங்குக்கு சிரிக்க வைக்கிறார்கள்.

வழக்கம் போல வழவழா கொழகொழாவென்று பேசாமல் சுருக்கமாக தனது அக்மார்க் படபடவென பேச்சில் ரசிக்க வைக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி. இந்த லெவல் சரியா இருக்கு. அப்படியே மெயிண்டெண்ட் பண்ணுங்க பாலாஜீ…..

பின்னணி இசை, பாடல்கள் இரண்டிலுமே ரவுண்டு கட்டி வாசித்திருக்கிறார் அனிருத். ‘தங்கமே…’ பாடலை எத்தனை முறை கேட்டாலும் இனிய இசையை விரும்பும் காதுகள் கோபித்துக் கொள்ளாது.

கொள்ளை அழகு கொட்டிக்கிடக்கும் நயன்தாராவை எந்த சேதாரமும் இல்லாமல் ஸ்க்ரீனில் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி வில்லியம்ஸ்.

‘போடா போடி’யில் ஒழுங்காக வேலையைப் பார்க்க விட்டிருந்தால் இந்தப்படம் விக்னேஷ் சிவனுக்கு ரெண்டாவது மாஸ் ஹிட்டாக அமைந்திருக்கும். அதைத்தான் தனது நீட்டான இயக்கத்துடன் உணர்த்த வேண்டியவர்களுக்கு உணர்த்தி ‘ஹிட்’ லிஸ்ட்டில் சேர்ந்திருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

‘ஜஸ்ட் ரிலாக்ஸ்’ என்கிற சிந்தனையோடு தியேட்டர்களுக்கு படையெடுக்கும் ரசிகர்களுக்கு 100 சதவீதம் சிரிக்க வைப்பார் இந்த பிரியமான ரவுடி!