சூப்பர் டீலக்ஸ் – விமர்சனம் #SuperDeluxe
RATING 3/5
‘நாட்டில் நடந்ததைத் தானே சொல்லுகிறேன்’ என்கிற போர்வையில் ஆபாசம், வக்கிரம், கெட்ட வார்த்தைகள் என பல ‘அல்லது’களையும் அள்ளித் தெளித்து இதுதாம்பா உலக சினிமா என்று ரசிகர்களை நம்ப வைக்கிற படைப்பாளிகளின் சமூகப் பொறுப்பை என்னவென்று சொல்வது?
அதுவும் சமீபகாலமாக பெண்ணுரிமை, பெண் சுதந்திரம் என்று கிளம்பியிருக்கிற ஒரு சிறு கூட்டம் செக்ஸ், மது, புகை இவை மூன்றும் தான் பெண்களின் பிரதான சுதந்திரமென்று சமூகத்தில் பிரபலப்படுத்துவது எவ்வளவு பெரிய ஆபத்து?
சுதந்திரமான படைப்பு, ‘உலக சினிமா’ என்ற பெயரில் வருகின்ற இந்த மாதிரியான படங்களைக் கொண்டாடவில்லை என்றால் ‘பழமைவாதி’ என்று பெயர் சூட்டுவதெல்லாம் என்ன விதமான மனோநிலை என்று தெரியவில்லை.
ஆண், பெண் சமநிலையைப் பற்றி பேச நினைத்த இப்படத்தின் இயக்குனர் அதற்காக எடுத்துக்கொண்ட கதைக்களம் தான் ‘உவ்வே…’ ரகம்.
படம் முழுக்க ஆபாசவலையைப் பிண்ணிப் பிணைந்து ‘ஆஸம்’ என்று சொல்லவில்லை என்றால் இவன் ”அப்டேட் ஆகாதவன்” என்று சொல்லும் ஒரு சிறு கூட்டத்துக்கான படம் தான் இந்த ‘சூப்பர் டீலக்ஸ்’.
பிட்டுப் படம் தோற்றுப் போய் விடுகிற அளவுக்கு பிட்டுப் பிட்டாக நகர்கிற நான்கு கதைகள். நான்கிலுமே செக்ஸ் பிரதானப்படுத்தப்படுகிறது. யார் என்ன வேண்டுமானாலும் செய்து விட்டுப் போகட்டும். அதை ‘ஜஸ்ட் லைக் தட்’ ஆக எடுத்துக் கொள்ளுங்கள் என்றால் சட்டமும் அதை சட்டை செய்ய வேண்டாம் என்கிறாரா? இயக்குனர்.
முன்னால் காதலனை வீட்டுக்கு வரச்சொல்லும் சமந்தா அவனை சந்தோஷப்படுத்தி விட்டு நகரப்போகையில், அவன் நகராமல் படுக்கையிலேயே பரலோகம் போகிறான். அதிர்ச்சியடைபவள் கட்டிய கணவனுக்கு பயப்படுவாள் என்று பார்த்தால் கணவன் பகத் பாசிலிடம் ரொம்ப கூலாக நடந்தவற்றை அப்படியே ஒப்பிக்கிறாள். அதன்பிறகு அந்த டெட்பாடியை எப்படி பேக்கப் செய்கிறார்கள்? என்பதே மீதி.
அடுத்த கதையில் நான்கு சிறுவர்கள் பிட்டுப் படம் பார்க்கிறார்கள். அதில் உள்ள ஒருவனின் அம்மாவே அந்தப் படத்தின் நாயகியாக வர, பயங்கர ஷாக். கடுப்பாகும் மகன் அம்மாவை கொலை செய்யக் கிளம்புகிறான். விபரம் தெரிந்து கொள்ளும் அம்மாவோ எந்த கூச்சமும் இல்லாமல் தன் இருட்டுப் பக்கத்தை மகனிடம் நியாயப்படுத்துகிறாள்.
இன்னொரு கதையில் வீட்டை விட்டு ஓடிப்போன விஜய் சேதுபதி ஏழு வருடங்களுக்குப் பிறகு வீட்டுக்கு திரும்புகிறார். அவருடைய வரவை சொந்த வீடும், சொந்தங்களும் எதிர்பார்த்து காத்திருக்க, அவரோ திருநங்கையாக வந்து அதிர்ச்சி தருகிறார். அவருடைய அந்த மாற்றத்தை சொந்த வீடும், சொந்தமும் எப்படி வரவேற்றார்கள்? என்பதே மீதிக்கதை.
இப்படி ‘பிட்டு பிட்டாக’ நகரும் ஒவ்வொரு கதையும் கிளைமாக்ஸில் போலீஸ் அதிகாரியான பக்ஸ் போர்ஷனில் இணைந்து நன்றி, வணக்கம் சொல்கிறது. பக்ஸோ ”போதும்பா.. நிறுத்து” என்று கதறுகிற அளவுக்கு நடித்துத் தள்ளுகிறார்…
நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் மக்களை சுழற்றியடிக்க, ‘ஆர்கஸம்’ இல்லாதது தான் மக்களின் முக்கியப் பிரச்சனை? என்று படம் பார்ப்பவர்களிடம் கட்டமைக்கிறார் இயக்குனர்.
சமந்தா, பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், காயத்ரி, பகவதி பெருமாள், சிறுவன் அஸ்வந்த், நான்கு இளைஞர்கள் என படத்தில் வருகிற அத்தனை கதாபாத்திரங்களும் கைதட்டல்களை அள்ளுகிறார்கள்.
திருநங்கையாக வரும் விஜய் சேதுபதியின் கெட்டப் கூட ஓ.கே தான். ஆனால் அவர்களின் மேற்படி மேனரிசங்களை இன்னும் கூட தனது கேரக்டரில் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கலாம். இருந்தாலும் தன்னுடைய ஹீரோ இமேஜைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் ‘இறங்கி’ வைத்து செய்தமைக்கு ஸ்பெஷல் பாராட்டுகள்.
மதம், கடவுள் நம்பிக்கை சம்பந்தமான வசனங்களில் இயக்குனரின் தனிப்பட்ட வெறுப்பு நக்கலாக வெளிப்படுகிறது. குறிப்பாக தமிழ் உணர்வை கிண்டல் செய்யும் வசனமெல்லாம் டூ மச்.
யுவனின் பரபரப்பான பின்னணி இசையும், தனி கலர் டோனில் ஜொலிக்கும் பி.எஸ். வினோத்தின் ஒளிப்பதிவும், இது சென்னையா என்று வியக்க வைக்கும் ஆர்ட் டைரக்டரின் உழைப்பும் படத்துக்கு கூடுதல் பலம்.
‘ஏ சர்ட்டிபிகேட்’ கொடுத்து விட்டாலே எதை வேண்டுமானாலும் வாந்தியெடுத்து வைக்கலாம் என்கிற மலிவான சிந்தனை ரசிக்கத் தக்கதல்ல. அது கண்டிக்கத் தக்கது.
”நாம் எந்த மாதிரியான சமூக கட்டமைப்பில் வாழ்கிறோம்” என்பதை தன்னுடைய தனித்த பாணியில் மிக அற்புதமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் தியாகராஜா குமாரராஜா. ஆனால் முகச்சுளிப்பைத் தரும் நேரடியான ஆபாச வசனங்களும், காட்சிகளும், ஜவ்வாக இழுத்துக் கொண்டே போகும் காட்சியமைப்புகளும் ஒரு லெவலுக்கு மேல் பார்வையாளர்களின் பொறுமையை ரொம்பவே சோதிக்கிறது.
படைப்புச் சுதந்திரம் என்பது ரசிகர்களின் பொறுமையைக் கூட சோதிக்கலாம், ஆனால் அவர்களின் ‘உணர்வுகளை’ சோதிக்கக் கூடாது. இதெல்லாம் தியாகராஜா குமாரராஜாக்களும், அவர்களின் அசிங்கப் படைப்புகளை ‘உலக சினிமா’ என்று கொண்டாடுபவர்களும் உணர வேண்டும்.
‘உலக சினிமா’ என்ற பெயரில் ஒரு ‘உவ்வே சினிமா’!