எஸ்.பி.ஐ சினிமாஸ் உடன் போடப்பட்ட ஒப்பந்தம் சட்டப்படி ரத்து! : நடிகர் சங்கம் அறிவிப்பு
இது நடக்குமா? நடக்காதா? என்று எல்லோர் கண்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்க, இறுதியில் அதை செய்தே காட்டி விட்டார்கள் நடிகர் சங்கத்தின் புதி நிர்வாகிகள்.
ஆமாம், எஸ்.பி.ஐ சினிமாஸ் உடன் நடிகர் சங்கத்தின் இடத்தில் கட்டிடம் கட்டுவதற்காக போடப்பட்ட ஒப்பந்தம் சட்டப்படி ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து நடிகர் சங்கம் சார்பில் இன்று வெளியான அறிக்கையில் :
இன்று தென்னிந்திய நடிகர் சங்க வரலாற்றில் மிக முக்கியமான நாள். கடந்த நிர்வாகத்தால் நடிகர் சங்க அறக்கட்டளை மூலம் 2010-ல் நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக, தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது.
அந்த ஒப்பந்தம் 9 பேர் கொண்ட அறக்கட்டளையின் நிர்வாகத்தில் 2 பேர் மட்டுமே கொண்டு போடப்பட்டதால் அது அறக்கட்டளை சட்டப்பட்டி தவறானது என சங்க உறுப்பினர் திரு.பூச்சி முருகன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
நடிகர்களான நாங்கள் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரி பல முறை கோரிக்கை வைத்தோம். அது நிறைவேறாததால் தேர்தலிலும் பாண்டவர் அணி மூலம் நின்றோம். வெற்றியும் பெற்றோம்.
நாங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருந்தபடி பதவிக்கு வந்தவுடன், அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய, தனியார் நிறுவனத்துடன் பல முறை பேச்சுவார்த்தை நடத்தினோம். அதிலுள்ள சட்ட சிக்கல்களை விவாதித்தோம். முடிவில் அந்த ஒப்பந்தத்திற்காக கொடுக்கப்பட்ட ரூ.48 லட்சம் மற்றும் பத்திரப்பதிவுக்காக கொடுக்கப்பட்ட 1 கோடி 41 லட்சம் கடந்த 2 வருடங்களாக நடிகர் சங்க அலுவலுக்கு மாதந்திர செலவுகளுக்கு கொடுக்கப்பட்ட சுமார் ரூ.60லட்சத்தையும் சேர்த்து 2 கோடியே 48 லட்ச ரூபாயை கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டு சங்க அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் செயற்குழுவிலும் ஒப்புதல் வாங்கப்பட்டு இன்று ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த வரலாற்றுப்பதிவு நிகழ்ந்தேற உதவிய நல்ல உள்ளங்களுக்கு இன்று நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். இக்காலக் கட்டங்களுக்கான கால தாமதத்திறாக முதலீடு செய்த பணத்திற்கான வட்டியை ரத்து செய்து எதிர்காலத்தில் நடிகர் சங்கத்துடன் என்றும் ஒத்துழைப்போம் என்று கூறிய எஸ்.பி.ஐ சினிமாவிற்கு நன்றி.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
