‘என்னையும் காமெடியன் ஆக்கி விடுகிறார்கள்’ : நாசர் புலம்பல்
வடிவேலு, சந்தானம் போன பிறகு மனசு விட்டுச் சிரிக்கக் கூடிய காமெடி என்பது தமிழ்சினிமாவில் அரிதிலும் அரிதாகி விட்டது.
சூரி, சதீஷ், யோகிபாபு என ஒரு சிலர் இருந்தாலும் அவர்கள் செய்யும் பெர்பார்மென்ஸ் என்பது வடிவேலு செய்வதில் கால்வாசிக்கூட இல்லை.
இதனாலோ என்னவோ சமீபகாலமாக படமெடுக்கும் இயக்குநர்கள் பல படங்களில் நாம் வில்லன் கேரக்டர்களிலும், குணச்சித்திர கேரக்டர்களிலும் பார்த்த நடிகர், நடிகைகளையே காமெடி கேரக்டராக்கி விடுகிறார்கள்.
சில வாரங்களுக்கு முன்பு வெளியான ‘கதாநாயகன்’ படத்தில் கூட படத்தில் வந்த அத்தனை பேர் கேரக்டரும் காமெடி செய்வது போல வடிவமைக்கப்பட்டிருந்தன. அந்தளவுக்கு தமிழ்சினிமாவில் காமெடியில் வறட்சி ஏற்பட்டிருப்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.
சரி ஏதோ தெரியாத முகங்களை அப்படி காமெடி கேரக்டரில் நடிக்க வைத்தால் கூட பரவாயில்லை, எங்களைப் போன்ற வில்லன் நடிகர்களையும் காமெடியனாக்கி விடுகிறார்கள் இயக்குநர்கள் என்று புலம்புகிறார் நடிகர் நாசர்.
”சமீபகாலமாக சில படங்களில் என்னை காமெடியனாக்கி வருகிறார்கள். காமெடி வேடங்களில் நான் நடித்து விடுவேன் என்றாலும் அதை ரசிகர்கள் எந்த அளவுக்கு ரசிப்பார்கள் என்பதை நினைக்கும் போது எனக்கு கொஞ்சம் பயம் ஏற்படும்.
அப்படி மனதளவில் பயம் ஏற்படும்போது டைரக்டர்களிடம் சொல்வேன். அப்போது அவர்கள், நல்லாதான் பண்றீங்க, சிரிக்கிற மாதிரிதான் இருக்கு என்பார்கள். அப்படி அவர்கள் கொடுக்கும் தைரியத்தில்தான் தொடர்ந்து நடித்து வருகிறேன்.
தற்போது நான் மேலும் சில படங்களில் காமெடி வேடத்தில் நடித்திருக்கிறேன். அந்தப் படங்கள் திரைக்கு வரும்போது ரசிகர்கள் என்னை அங்கீகரித்து விட்டால் சந்தோஷப்படுவேன்” என்கிறார் நாசர்.
என்ன பண்றது வடிவேலு இல்லாத இடத்தை நாசர் போன்ற வில்லன்கள் தான் நிரப்ப வேண்டியிருக்கு…!