வேதிகாவுக்கு ஸ்பெஷல் ட்ரெயினிங் கொடுக்கும் இயக்குநர்!
‘காவியத் தலைவன்’ படத்துக்குப் பிறகு தமிழில் பட வாய்ப்புகளே இல்லாமல் இருந்த வேதிகாவை மீண்டும் தமிழுக்கு கூட்டி வந்திருக்கிறார் அறிமுக இயக்குநர் விக்டர்.
நடிகர் பிரபுதேவா தனது பிரபுதேவா ஸ்டுடியோஸ் மூலம் தயாரிக்கும் மூன்று படங்களில் ஒன்றான ‘வினோதன்’ படத்தில் தான் கதாநாயகியாக கமிட்டாகியிருக்கிறார் வேதிகா. மறைந்த பிரபல நடிகர் ஐசரிவேலனின் பேரன் புதுமுகம் வருணுக்கு ஜோடியாக நடிக்கப் போகும் வேதிகா தனது அனுபவத்தை கூறினார்.
‘இயக்குனர் விக்டர் என்னிடம் கதை சொல்ல அணுகும் போது, பிரபுதேவா சாருடைய நிறுவனம் சார்பில் தயாரிக்கும் படம் என்றவுடன் மிகவும் உற்சாகமானேன். கதையை கேட்டவுடன் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி, அவ்வளவு நேர்த்தியான, செதுக்கப்பட்ட கதை.
‘பரதேசி’ ‘காவிய தலைவன்’ ஆகிய படங்களின் கதாபாத்திரத்தை போலவே இந்தப்படத்தில் எனக்கு வித்தியாசமான, மிகவும் சவாலான கதாபாத்திரம்.
‘வினோதன்’ மனோதத்துவத்தின் பின்னணியில் உருவாகும் ஒரு த்ரில்லர் கதை ஆகும். இயக்குனர் விக்டர் தன்னுடைய கதாபாத்திரம் எப்படி நடிக்க வேண்டும் என்பதைக் குறித்து ஒரு ஆய்வே செய்து வைத்து இருக்கிறார். அதன் அடிப்படையில் அவர் எனக்கும், கதாநாயகன் வருனுக்கும் ஒரு நடிப்பு பயிற்சி வகுப்பு எடுக்க உள்ளார். இந்த வகுப்பு வளர்ந்து வரும் என்னை போன்ற நடிகர், நடிகையருக்கு ஒரு பெரிய வர பிரசாதமாகும். ‘வினோதன்’ மூலம் என்னுடைய நெடுநாள் கனவு நிறைவு பெற உள்ளது.
நான் சிறு வயதில் இருந்தே பிரபு தேவா சாருடைய தீவிர விசிறி. இப்பொழுது ஒரு நடிகையாக அவருடைய தயாரிப்பில் நடிக்கப் போவதை எண்ணி மிகவும் சந்தோஷப்படுகிறேன். அவருடைய இயக்கத்திலும், அவருக்கு இணையாகவும் நடிக்கும் நாட்கள் வெகுத் தொலைவில் இல்லை என்பது மட்டும் நிச்சயம். ‘வினோதன்’ படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் துவங்க உள்ளது.’ என்று வசீகர புன்னகையோடு கூறினார் வேதிகா.