6 வருஷத்துக்கு பிறகும் அதே சோகம்? : கவலையில் அஜித் ரசிகர்கள்

வருஷத்துக்கு ஒரு படம் என்கிற கொள்கையை தளர்த்திய அஜித் கடந்த சில வருடங்களாகவே விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறார்.
‘ஆரம்பம்’, ‘வீரம்’, ‘என்னை அறிந்தால்’ சென்ற ஆண்டு அதிக வசூலுடன் முதலிடத்தில் இருந்த ‘வேதாளம்’ என தொடர் வெற்றிகள் அவரை உற்சாகமாக்கியிருக்கிறது.
இதனால் முன்னெப்போதும் இல்லாத வகையில் அஜித் ரசிகர்களும் அவரைப்பற்றி சமூக வலைத் தளங்களில் தாறு மாறு தக்காளி சோறாக்கி புகழை பரப்பி வருகிறார்கள்.
என்னதான் இந்த சந்தோஷம் ஒருபக்கம் இருந்தாலும் கடந்த 2009ம் ஆண்டைப் போலவே இந்த 2016 ஆண்டும் அமைந்து விட்டது தான் அஜித் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.
ஆமாம், ஏகன் படத்தின் தோல்விக்கு பிறகு அஜித் 2009ம் ஆண்டில் எந்த படத்திலும் நடிக்காமல் கேப் விட்டார். தற்போது 6 வருடத்திற்கு பிறகு 2016 இந்த வருடமும் அதேபோல எந்தப்படமும் ரிலீசாகவில்லை.
வேதாளம் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தால் காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அஜித் அதற்காக ஓய்வெடுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார். இதனால் அஜித்தின் புதுப்படம் தள்ளிப்போகும் நிலை வந்ததால் இந்த ஆண்டு அஜித் படம் இல்லாமலே ஆகி விடும் என்பது உறுதியாகி விட்டது.
இதுதான் அஜித் ரசிகர்களுக்கு கவலையை தந்திருக்கிறதாம். என்றாலும் இந்தக் குறையை வட்டியும் முதலுமாகப் போக்கும் விதத்தில் அடுத்த ஆண்டு இரண்டு படங்கள் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கலாம்.