தடைகளை தகர்த்து ரிலீசாகும் ‘நேர்கொண்ட பார்வை’
‘விஸ்வாசம்’ படத்தைத் தொடர்ந்து அஜீத் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘நேர்கொண்ட பார்வை’.
ஹெச்.வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தை போனிகபூர் தயாரித்திருக்கிறார். ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடித்த ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக்கான இதில் அமிதாப்பச்சன் கேரக்டரில் அஜீத் நடித்திருக்கிறார்.
ஆகஸ்ட் 8-ம் தேதி ரிலீசாகும் என்று தயாரிப்பு தரப்பில் அறிவிக்கப்பட்ட நிலையில் ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க இப்படத்தின் வியாபாரம் கடும் சிக்கலை சந்தித்து வந்தது.
சுமார் 70 கோடி வரை போனிகபூர் விலை கேட்டதால் அவ்வளவு தொகையை கொடுத்து வாங்க யாரும் முன்வரவில்லை. ஏற்கனவே உதயநிதி உள்ளிட்ட சில தயாரிப்பாளர்கள் பேரம் பேசியும் ஒரு பைசா கூட குறைக்க மாட்டேன் என்று போனிகபூர் பிடிவாதமாக இருந்தது தான் இந்த சிக்கலுக்கு காரணம் என்கிறார்கள்.
இதற்கிடையே ஜெமினி ஸ்டூடியோஸ் நிறுவனம் நேர்கொண்ட பார்வை படத்தின் தமிழக உரிமையை போனிகபூர் கேட்ட விலையைக் கொடுத்து வாங்கியிருக்கிறது. ஏற்கனவே இந்த நிறுவனம் தயாரித்து நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் முடங்கிக் கிடக்கும் மதகஜராஜா படத்தின் பஞ்சாயத்து ஒருபக்கம் இருக்க, விநியோகஸ்தர்கள் மத்தியில் இருக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையும் நேர்கொண்ட பார்வை படத்துக்கு சிக்கலாக அமைந்தது.
இதனால் திட்டமிட்ட தேதியில் படம் ரிலீசாகுமா என்று சந்தேகம் வலுத்த நிலையில் நேற்று இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது ஜெமினி ஸ்டூடியோஸ்.
ஹைதாராபாத்தில் உள்ள தங்களுக்கு சொந்தமான சொத்து ஒன்றை விற்று அதன் மூலம் நேர்கொண்ட பார்வை படத்துக்கு எதிராக இருந்த அத்தனை சிக்கல்களையும் சரி செய்திருக்கிறது.
இதனால் ‘நேர்கொண்ட பார்வை’ பட ரிலீசில் இருந்த எல்லா சிக்கல்களும் தீர்ந்து திட்டமிட்டபடி வருகிற ஆகஸ்ட் 8-ம் தேதி ரிலீசாகிறது.