கிராமத்து நாகரீகத்தை சொல்லும் ”ஒண்டிக்கட்ட” : இயக்குநர் ஆனார் இசையமைப்பாளர் பரணி

Get real time updates directly on you device, subscribe now.

Ondikkatta

ப்ரண்ட்ஸ் சினி மீடியா என்ற பட நிறுவனம் சார்பாக மேகலா.ஆர்.தர்மராஜ், ஷோபா.கே.கே.சுரேந்திரன், சுமித்ரா பரணி ஆகியோர் இனணந்து தயாரிக்கும் படத்திற்கு ” ஒண்டிக்கட்ட” என்று பெயரிட்டுள்ளனர்.

தெனாவட்டு, குரங்கு கைல பூ மாலே, எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது போன்ற படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்த விக்ரம் ஜெகதீஷ் இந்த படத்தில் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நேகா நடிக்கிறார்.

இவர் உச்சத்துல சிவா, தண்ணில கண்டம் போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர். மற்றும் தர்மராஜ், கலைராணி, சாமிநாதன், முல்லை, கோதண்டம், சென்ராயன், மதுமிதா, ஹலோ கந்தசாமி ஆகியோர் நடிக்கிறார்கள்.
இப்படத்தை எழுதி இயக்கி இருப்பவர் இசையமைப்பாளர் பரணி.

படத்தைப் பற்றி அவருடன் பேசிய போது “நான் இசையமைப்பாளராக என் பயணத்தை துவங்கி 18 வருடங்களாகி விட்டது. இதுவரை எனக்கு கிடைத்த அனுபவங்களையும் கற்றுத் தேர்ந்த விஷயங்களையும் இந்த படத்தில் பயன்படுத்தி இருக்கிறேன்.

நான் இசைத்துறையிலிருந்து இயக்கத்துறைக்கு அடியெடுத்து வைத்திருக்கிறேன்..பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டுக்கு வந்த மணப்பெண் மாதிரி. இரண்டு இடத்து பெருமையையும் காப்பாற்றி ஆக வேண்டும்.

அதனால் தான் என் பிறந்த வீட்டு சொந்தங்களாகிய இசையமைப்பாளர்களர்கள் இசையை வெளியிட, என் புகுந்த வீட்டு சொந்தங்களான இயக்குனர்கள் பெற்றுக் கொள்வது தான் சிறப்பு என்பதால் இந்த ஏற்பாட்டை செய்திருக்கிறோம். கிராமத்து நாகரீகத்தை இதில் பதிவிட்டிருக்கிறேன்.

படத்தின் கதாபாத்திரங்கள் பேசப்படும் மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது. நாம் பிறந்த போதும் ஒண்டிக்கட்டையாகத்தான் பிறக்கிறோம்..போகும் போதும் ஒண்டிக்கட்டையாகத் தான் போகப் போகிறோம். இதைத் தான் இதில் சொல்கிறோம்.
இந்தப் படத்தினை விக்ரம்ஜெகதீஷ் ஆர்.தர்மராஜ் நேகா இந்த மூவரும் தாங்கிப் பிடிக்கும் கதாபாத்திரங்கள். ஆர்.தர்மராஜுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும்.

என் கற்பனையை சிறப்பாக வடிவமைக்க தயாரிப்பாளர்கள் ஆர்.தர்மராஜ் கே.கே.சுரேந்தர் சுமித்ராபரணி ஆகியோர் எனக்கு பக்கபலமாக இருந்தார்கள்.

மண் சார்ந்த வாழ்க்கையையும் மக்களையும் இதில் பிரதிபலித்து இருக்கிறோம். நிச்சயம் மக்களுக்கு இது பிடிக்கும். ஒண்டிக்கட்டை படம் குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லோருக்கும் பிடித்த படமாக இருக்கும் என்று நம்பிக்கையுடன் கூறினார் பரணி.