ஆல்பம் வெளியீட்டு மேடையிலேயே புதுப்பட அறிவிப்பு : அசத்திய அறிமுக இயக்குநர்!

ஜுபின் இசையில் குமரன் எழுதி இயக்கிய ‘ஒரு காதலின் புதுப்பயணம்’ ஆல்பத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
விழாவில் ஆல்பத்தை பொன்ராம் வெளியிட்டார். நடிகர்கள் மைம் கோபி, பிரஜின், நிஷாந்த் தயாரிப்பாளர் இளைய அரசன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
விழாவில் இயக்குநர் பொன்ராம் பேசும்போது “இந்தக் குமரன் என்னிடம் உதவி இயக்குநர் வாய்ப்பு கேட்டு வந்தார். அப்போது வாய்ப்பு தர முடியவில்லை. அடுத்த படத்துக்கு பார்க்கலாம் என்றேன். ஆனால் அடுத்து இப்படி ஒரு வாய்ப்பு வந்து இருக்கிறது. இதை நான் எதிர்பார்க்கவில்லை. புதிய படமும் வந்து விட்டது. ஒருவரை நம்பி படவாய்ப்பு கொடுப்பது என்பது
சாதாரணம் அல்ல.
முதல் பட வாய்ப்பு கொடுக்கும் தயாரிப்பாளர் தான் நமக்கு கதாநாயகன். எல்லாமே. அதை மறந்து விடக்கூடாது. இந்த நான்கு நிமிட பாடல் ஆல்பத்தைப் பார்த்தேன். நல்லவேளை இரண்டு முறை போட்டார்கள். அதற்குள் பாடல், கதை, காட்சியழகு எல்லாமே இருந்தன.
இது மாதிரி ஆல்ப முயற்சி தன்னை சோதித்துக் கொள்ளும் ஒரு முயற்சி தான். எஸ்.எம் எஸ்.ராஜேஷ் கூட ஒரு காட்சியை மாதிரிக்கு எடுத்துக் காட்டி விட்டுத்தான் பட வாய்ப்பை பெற்றார். திரையிட்டபோது இதை முதல்முறை பாடலாகப் பார்த்தேன். இரண்டாவது முறை அதில் இருந்த கதையைப் பார்த்தேன். இந்த ஆல்பம் நன்றாக இருக்கிறது. பாராட்டுக்கள்.” என்று கூறி வாழ்த்தினார்.
நடிகர் பிரஜின் பேசும்போது, “குமரன் முதலில் இயக்கிய ‘வயோல்’ குறும்படம் சர்வதேச விருதுகளைப் பெற்றது. இந்த ஆல்பமும் ஒரு படம் போல உணர்ந்து செய்திருக்கிறார். ஒன்றரை வருஷத்துக்கு முன் என்னிடம் ஒரு கதை சொன்னார். அதில் வரும் வில்லன் வேடம் பிரமாதமாக இருக்கும். கதாநாயகனை விட பெரியதாக இருக்கும். அதை செய்ய ஆர்வமாக இருந்தேன். ஆனால் அந்த வாய்ப்பு நிஷாந்துக்குப் போய் விட்டது. நான் கதாநாயகன் ஆகி விட்டேன். போராடினால் தான் வெற்றி கிடைக்கும். நாங்கள் 5 ஆண்டுகள் போராடி’பழைய வண்ணாரப் பேட்டை’ படம் எடுத்தோம். முதல்வர் மரணம், வர்தா புயல் வந்ததால் சரியாகப் போகவில்லை. ஆனால் எங்கள் உழைப்பு இன்றும் பாராட்டப்படுகிறது.” என்றார்.
இந்த ஆல்பம் வெளியீட்டு விழாவிலேயே இயக்குநர் குமரனின் அடுத்த பட அறிவிப்பும் வெளியிடப்பட்டது. பிரஜின், நிஷாந்த் நடிக்க, அனாமிகா பிக்கர்ஸ் சார்பில் ‘பழைய வண்ணாரப் பேட்டை’ படத்தை ஹன்சிகா எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் விநியோகம் செய்த தயாரிப்பாளர் இளைய அரசன்தான் இந்தப் புதிய படத்தைத் தயாரிக்கிறார்.
நிகழ்ச்சியில் ‘பழைய வண்ணாரப்பேட்டை’ இயக்குநர் ஜி.மோகன், ஆல்பம் நாயகன் ரெக்ஸ், நாயகி பார்வதி, நடன இயக்குநர் சுஜாதா, ஒளிப்பதிவாளர் அர்ஜுன், எடிட்டர் தீபக், கலை இயக்குநர் ராஜா ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.