பாபநாசம் – விமர்சனம்
மலையாளத்தில் கடந்த 2013 – ஆம் ஆண்டு இறுதி வாக்கில் ரிலீசாகி ட்ரெண்ட் செட்டரை ஏற்படுத்தி மிகப்பெரிய அளவில் வசூலையும் வாரிக்குவித்த படம் தான் ‘த்ரிஷ்யம்’.
அதன் வீச்சு தெலுங்கு, கன்னடம் என அடுத்தடுத்த மொழிகளில் ரீமேக்காகி ஹிட்டானதுடன் இப்போது ஹிந்தியிலும் தயாராகி வருகிறது.
தமிழில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ‘பாபநாசம்’ படமாக ரீமேக்காகியிருக்கிறது. மலையாளத்தில் இப்படத்தை இயக்கிய ஜூத்து ஜோசப்பே தமிழிலும் இயக்கியிருக்கிறார்.
எந்த சலனமும் இல்லாமல் தெளிந்த நீரோடைப் போல ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நடுத்தர சராசரி மனிதனின் வாழ்க்கையில் அதிகார வர்க்கத்தின் ரூபத்தில் பிரச்சனை வரும்போது அதனால் ஏற்படுகிற விளைவுகளை எப்படி சாமார்த்தியமாக சமாளித்து வெற்றி பெருகிறான் என்பதே கதையின் சாராம்சம்.
படிப்பு வாசனையே இல்லாத கமல்ஹாசன் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் என்ற சிறிய ஊரில் கேபிள் டிவியை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார். அவருக்கு மனைவி கெளதமி, மூத்த மகள் நிவேதா தாமஸ், இளைய மகள் எஸ்தர் என அளவான அன்பைப் பொழியும் குடும்பம்.
ஒரு தனி மனிதனின் வளர்ச்சி அவனுடைய சிக்கனத்தில் ஆரம்பிக்கிறது என்று சொல்வதைப் போல என்னதான் கேபிள் டிவி நடத்தி வந்தாலும் பெரிய கட்சிக்காரன் வந்து நிதி கேட்டாலே 5 ரூபாய் தான் கொடுத்தனுப்புவார் என்று கேலி பேசுகிற அளவுக்கு மகா கஞ்சன் கமல்.
”முதுக்குக்குப் பின்னாடி என்னோட சிக்கனத்தைப் பத்தி ஊரே கேலி பேசும். அப்படி இல்லாம இருந்தா இவ்ளோ பெரிய வீட்டை கட்டியிருக்க முடியுமா?” என்று சிரித்தபடியே அடுத்த வேலையைப் பார்க்கப் போகும் கமல் குடும்பத்துக்கு பிரச்சனை ஐ.ஜி ஆஷாசரத்தின் மகன் ரோஷன் ரூபத்தில் வருகிறது.
ரோஷன் படிக்கும் பள்ளியில் தான் கமலின் மூத்த மகள் நிவேதா தாமஸும் படிக்கிறார். பள்ளி சார்பில் கல்விச் சுற்றுலா சென்ற இடத்தில் நிவேதா தாமஸ் குளிக்கும் போது அவரை யாருக்கும் தெரியாமல் செல்போனில் நிர்வாணமாக வீடியோ எடுத்து தனது ஆசைக்கு இணங்குமாறு மிரட்டுகிறார்.
இந்த விபரீதம் தெரிய வரும் நிவேதாவின் அம்மா கெளதமி மகளுக்காக ரோஷனின் காலைப் பிடித்து கெஞ்சுகிறார். அப்போது நடக்கும் மோதலில் எதிர்பாராத விதமாக ரோஷன் இறந்து விடுகிறான்.
ஒரு பக்கம் காணாமல் போன தன் மகனை போலீஸ் துணையுடன் தேடுகிறார் ஐ.ஜி ஆஷாசரத். இன்னொரு பக்கம் தன் குடும்பத்தை இந்த கொலைப்பழியிலிருந்து காப்பாற்றப் போராடுகிறார் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த கமல்ஹாசன்.
இந்த பரபரப்பான போராட்டத்தில் வென்றது எளிமையா? அதிகாரமா? என்பதே மீதிக்கதை.
ஒவ்வொரு எளிய மனிதனின் கனவும் அதிகார வர்க்கத்தினர், ஆள் பலம் கொண்டவர்கள், அரசியல் ஆதிக்கம் உள்ளவர்களால் கேலிக்கூத்தக்கப்படும் சூழல் ஏற்படும் போது அதற்காக எந்த லெவலுக்கும் இறங்கி தனக்கு தன் குடும்பம் தான் முக்கியம் அதன் சந்தோஷத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று இறங்குகிற ஒரு நடுத்தர வர்க்கத்தின் கேரக்டர் தான் கமல்ஹாசன்.
சும்மாவே மனுஷன் எட்டடி என்றால் பதினாறடி நடிப்பார். இதில் கேட்கவே வேண்டாம். ஒவ்வொரு காட்சியிலும் தனது உடல்மொழியால் பரவசமான நடிப்பை வெளிப்படுத்தி பிரமாதப்படுத்துகிறார். பெண் குழந்தைகள் இருக்கும் ஒவ்வொரு அப்பாக்களுக்கும் இனி கமல் என்கிற மாபெரும் கலைஞனை கண்டிப்பாக பிடித்து விடும். அவரை தங்கள் குடும்பத்தில் ஒருவராக கொண்டாடுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ப்ரேம் பை ப்ரேம் தனது தனித்துவமான உடல்மொழியால் பிரம்மிப்பை ஏற்படுத்துகிறார் உலகநாயகன். அதிலும் கிளைமாக்ஸ் காட்சியில் “வெளியூர்ல இருந்து வந்து எல்லாரும் இந்த பாபநாசத்துல குளிச்சி தங்களோட பாவத்தை கழுவிட்டுப் போறாங்க… நான் உள்ளூர்லேயே இருந்துட்டு கொஞ்சம் கொஞ்சமா என்னோட பாவத்தை கழுவிட்டு இருக்கேன். எத்தனையோ தடவை உங்ககிட்ட வந்து எல்லாத்தையும் சொல்லிடணும்னு நெனைப்பேன். ஆனால் அதற்காக தைரியம் எனக்கு இல்லாமலேயே போயிடுச்சு” என்று நா தழுதழுக்க பேசுகிற காட்சிகளில் ஒட்டுமொத்த ரசிகர்கள் கூட்டமும் கண்கள் குளமாகி தியேட்டரை விட்டு வெளியேறுகிறது.
திருநெல்வேலி பாஷையை எந்த தடுமாற்றமும் இல்லாமல் அந்த வார்த்தைகள் தெளிவாகக் கேட்கும் படியும் அவர் பேசும் அழகை ரசித்துக் கொண்டே இருக்கலாம். அதன் பின்னணியில் உழைத்த வசனகர்த்தா ஜெயமோகனுக்கும், சுகாவுக்கும் ஸ்பெஷல் பாராட்டுகள். நீண்ட இடைவேளைக்குப் பிறகு எந்த பகட்டும் இல்லாமல் வேட்டி, சட்டையில் முழுப்படத்திலும் ஒரு ஹீரோவை தமிழ்சினிமாவில் பார்ப்பது ரசிகர்களுக்கு புதுமையான ரசனையாக இருக்கும்.
மலையாளத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக மீனா நடித்த கதாபாத்திரத்தை கெளதமி ஏற்றிருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரை பெரிய திரையில் பார்க்க முடிகிறது. வயதின் காரணமாக அழகில் சேதம் வந்து விட்டாலும் நடிப்பில் அப்படியே தான் இருக்கிறார். இரண்டு பெண் குழந்தைகளின் தாயாக மேம்பட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
கமல் – கெளதமியின் மகள்களாக வரும் நிவேதா தாமஸ், சிறுமி எஸ்தர் இருவரும் கேரக்டர்களுக்கு கச்சிதமான பொருத்தம். அதிலும் எஸ்தர் ரீமேக்கான எல்லா மொழிகளிலும் அவருடையே கேரக்டரில் அவரே நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
டீக்கடை பாயாக வரும் எம்.எஸ்.பாஸ்கர், போலீஸ்காரர்களாக வரும் கலாபவன் மணி, இளவரசு, சப் இன்ஸ்பெக்டராக வரும் அருள்தாஸ், கேபிள் டிவியில் வேலை செய்யும் சிறுவன் ஸ்ரீராம், தங்கராசுவாக வரும் அபிஷேக், இருளப்ப பிள்ளையாக வரும் நெல்லை சிவா கருப்பையாக வரும் மதன கோபால் என படத்தில் வருகின்ற அத்தனை கேரக்டர்களும் படத்தின் இயல்பான ஓட்டத்துக்கு வலு சேர்க்கிறார்கள்.
அதிலும் ஐ.ஜியாக வரும் ஆஷா சரத், அவருடைய கணவராக வரும் ஆனந்த் மகாதேவன் இருவருமே நடிப்பில் மிரட்டியிருக்கிறார்கள். “ பிள்ளையே இல்லாத எங்களுக்கு பல வருஷங்களுக்கு அப்புறம் வருண் பிறந்தான். அதனால அவனை ரொம்பவே கொஞ்சிட்டோம். அவனை எங்களாக நல்ல பையனா வளர்க்க முடியல.’’ என்று வசனங்கள் பேசி கலைகிற இடத்தில் ரசிகர்களும் கூடவே கலங்குகிறார்கள்.
திருநெல்வேலி, தென்காசி அதைச் சுற்றியுள்ள ஏரியாக்களில் கொட்டிக் கிடக்கும் இயற்கை அழகை தனது கேமராவில் முழுமையாக கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ச்ஜுத் வாசுதேவ்.
ஜிப்ரானின் இசையில் இரண்டு பாடல்கள் தான் என்றாலும் இரண்டுமே மெல்லிசையாக ஒலிக்கிறது. பின்னணி இசையில் ரசிகர்களை படத்தோடு பிண்ணிப் பிணைய வைத்து விடுகிறார்.
நேர்த்தியான கதை, தடுமாற்றமில்லாத திரைக்கதை, கேரக்டர்களை கையாண்ட விதம் என சின்னச் சின்ன விஷயங்களில் கூட அதிகம் மெனக்கிட்டு 3 மணி நேரம் ஓடுகிற படத்தில் எந்த இடமும் போரடிக்காமல் பார்த்துக் கொள்கிறார் இயக்குநர் ஜூத்து ஜோசப்.
இது போதாதா படம் வசூலுடன் கூடிய மாபெரும் வெற்றியைப் பெற…!!!