தென் மாவட்டங்களில் பரவும் பிரிவினை படிநிலைகளை தோலுரித்துக் காட்ட வரும் ‘பரியேறும் பெருமாள்’

Get real time updates directly on you device, subscribe now.

”தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்” என்ற சிறுகதை தொகுப்பின் மூலமாகவும் “மறக்கவே நினைக்கிறேன்” தொடரின் மூலமாகவும் இலக்கிய உலகத்திலும் பரவலாக அறியப்பட்ட எழுத்தாளர் மாரி செல்வராஜ். இயக்குநர் ராமிடன் இணை இயக்குநராக பணியாற்றிய இவர் இயக்கும் முதல் திரைப்படம் “பரியேறும் பெருமாள்”.

இப்படத்தில் பரியேறும் பெருமாளாக, சட்டக்கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் கதிர் நடிக்க, அவருடன் கயல் ஆனந்தி, யோகிபாபு, லிஜீஷ், மாரிமுத்து ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களைத் தவிர திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மக்களையும் படத்தில் பெரும்பான்மையான கதாபாத்திரங்களில் நடிக்க வைத்துள்ளனர்.

தனது “நீலம் புரொடக்ஷ்ன்ஸ்” சார்பாக இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்திருக்கும் இப்படம் முழுக்க முழுக்க தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் எடுக்கப்பட்டுள்ளது.

Related Posts
1 of 10

தென் தமிழக கிராமங்களிலும் நகரங்களிலும் பள்ளி, கல்லூரிகளிலும் எளிய மக்களிடமும் நுணுக்கமாக பரவிக் கொண்டிருக்கும் பிரிவினை படிநிலைகளையும் அது உருவாக்கும் பெரும் தாக்கத்தையும் பற்றி உண்மைக்கு மிக அருகில் சென்று பேசுகிற படமாக இப்படம் தயாராகியுள்ளது. அதோடு காதலையும் வாழ்வியலையும் அதனைச் சுற்றி நடைபெறும் உளவியல் அரசியலையும் பேசும் படமாகவும் இந்த பரியேறும் பெருமாள் இருக்கும்.

படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, விவேக் மற்றும் மாரி செல்வராஜ் இருவரும் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். ஸ்ரீதர் ஒளிப்பதிவாளராகவும், ஆர்.கே.செல்வா எடிட்டராகவும் பணியாற்றியிருக்கிறார்கள். சான்டி நடனம் அமைக்க, சண்டைப்பயிற்சியை ஸ்டன்னர் சாம் அமைத்திருக்கிறார். சி.வேலன் மற்றும் ஆர்.ராகேஷ் இணைந்து தயாரித்துள்ளனர். நிர்வாகத் தயாரிப்பு லிஜீஷ்.

படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில், விரைவில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது, “பரியேறும் பெருமாள்”.