‘கபாலி’ பிஸியிலும் கால்ஷீட் கொடுத்த கலையரசன் : டைரக்டர் ஆனார் பாவனா தம்பி!
‘மெட்ராஸ்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சினிமா கேரியரை நிலையாக வைத்துக் கொண்டு வருகிறார் நடிகர் கலையரசன்.
அந்தப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து அவர் ஹீரோவாக புரமோஷன் பெற்று நடிக்கிற படங்கள் எல்லாமே ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் வித்தியாசமானதாக இருக்கிறது.
அந்த லிஸ்ட்டில் கலையரசன், அனஸ்வரா நடிப்பில் தயாராகியிருக்கும் படம் தான் ”பட்டினப்பாக்கம்.”
முள்ளமூட்டில் புரோடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரோகித் மேத்யூவ் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் ஜெயதேவ் இயக்குகிறார். இந்த ஜெயதேவ் வேறு யாருமல்ல, நடிகை பாவனாவின் சொந்தத் தம்பி தான்.
அமெரிக்காவில் டைரக்ஷன் கோர்ஸை படித்து முடித்த கையோடு மலையாளம், தமிழில் பிரபல இயக்குநர்களிடன் உதவியாளராக வேலை செய்த பிறகு இந்தப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
பட்டினப்பாக்கம் என்ற டைட்டிலைக் கேட்டவுடன் இதுவும் வட சென்னைப்படமா? என்கிற கேள்வி இயல்பாகவே எழும். நிச்சயமாக இது வட சென்னையைக் கதைக்களமாகக் கொண்ட படமில்லை என்கிறார் ஜெயதேவ்.
சென்னையை முன்பெல்லாம் பட்டினம் என்று தான் அழைப்பார்கள். அதுதான் மதராஸ் பட்டினம், சென்னை பட்டினம் போன்ற பெயர்களில் அழைக்கப்பட்டு வந்தது. இந்தப்படத்துக்கு நான் சென்னை என்று பெயர் வைக்க நினைத்தபோது அது பல படங்களில் டைட்டிலாக வந்து விட்டது. அதனால் சென்னையை அதற்கு முன்பு என்னென்ன பெயர்களில் அழைத்தார்கள் என்று தேடிப்பார்த்தபோது பட்டினம் என்று அழைக்கப்பட்ட விஷயம் தெரிய வந்தது. அதனால் பட்டினப்பாக்கம் என்று டைட்டில் வைத்து விட்டேன். அந்த வகையில் டைட்டிலுக்கும் வட சென்னைக்கும் இந்தப்படத்தில் துளியும் சம்பந்தமில்லை. சென்னையில் நடக்கிற கதை அவ்வளவே என்கிறார்.
பட்டப்படிப்பை முடித்த கதாநாயகனின் குடும்பம் ஏழ்மையில் தவிக்கிறது. குறுகிய காலத்தில் பெரும் செல்வந்தனாக விருப்பப்படும் நாயகன், குறுக்கு வழியில் பணத்தை சம்பாதிக்கத் திட்டம் தீட்டுகிறான். சிலரை குறிவைத்து தீட்டிய திட்டம் திசைமாறி எதிர்பாராவிதமாக நாயகனுக்கு பெரும் சிக்கலை உண்டாக்குகிறது. இந்த சிக்கலில் மாட்டியவர்களின் கதி என்ன, நாயகன் இந்த பிரச்சனையை எவ்வாறு சமாளித்து வெற்றி காண்கிறான் என்பதை விறுவிறுப்பான திரைக்கதையுடன் காட்சிப்படுத்தும் படம் தான் இந்த ‘பட்டினப்பாக்கம்’ என்று சொல்லும் ஜெயதேவ் இந்தப்படத்தில் கலையரசனை ஹீரோவாக நடிக்க வைக்க பெரும்பாடு பட்டாராம்…
அவர் அந்த நேரத்துல ரஜினி சாரோட கபாலி படத்துல கமிட்டாகியிருந்தார். அதனால உங்க படத்துக்கு கால்ஷீட் கொடுக்க முடியலேன்னு சொன்னார். அப்புறம் 10 நாட்கள் மட்டும் தர்றேன். அதுக்குள்ள என்னோட போர்ஷன் எல்லாத்தையும் முடிச்சிடுங்கன்னு சொன்னார். அவர் சொன்ன மாதிரியே 10 நாட்கள்ல அவரோட போர்ஷனை முடிச்சிட்டோம் என்றார்.
என்னோட ஒவ்வொரு படமும் வித்தியாசமான, புதுமையான கதையம்சத்தோட இருக்கான்னு பார்ப்பேன். அப்படித்தான் இந்தப்படம் ஒரு மலையாளப்படத்தோட ரீமேக்குன்னு சொன்னதும் அதைப்பார்த்து படம் பிடிச்சுப்போய் நடிக்க ஒப்புக்கிட்டேன். நிச்சயமா என்னோட கேரியர்ல இந்தப்படம் இன்னொரு வித்தியாசமான படமா இருக்கும் என்றார் கலையரசன்.