பீச்சாங்கை – விமர்சனம்
RATING 3/5
இடது கையால் லாவகமாக பிக் பாக்கெட் அடித்து வாழ்க்கையை ஓட்டும் ஒரு திருடனின் இடது கை திடீரென்று ஒருநாள் அவன் சொல் பேச்சு கேட்காமல் போனால் அவனின் நிலைமை என்னவாகும்? அதுதான் இந்த ”பீச்சாங்கை.”
நண்பர்கள் இருவருடன் சேர்ந்து பிக்பாக்கெட் அடிக்கும் இளைஞன் ஹீரோ ஆர்.எஸ்.கார்த்திக். என்னதான் பிக் பாக்கெட்டாக இருந்தாலும் பணம் தவிர மற்றவற்றை தொடாத, கொஞ்சூண்டு இரக்க குணமும் கொண்டவரும் கூட!
அப்படிப்பட்ட குணம் கொண்ட அவர் ஹீரோயின் அஞ்சலி ராவ்விடமும் பணத்தை அடித்து வரும் அவரது கூட்டாளிகளிடமிருந்து அந்தப் பணத்தை வாங்கி மீண்டும் அஞ்சலியிடமே கொடுத்து விடுகிறார். அதிலிருந்து இருவருக்கும் காதல் மலர்கிறது.
பிறகு திடீரென்று விபத்து ஒன்றில் சிக்கும் கார்த்திக் அவரது தலையில் அடிபட்டதில், Alien Hand Syndrome எனப்படும் பிரச்சனை ஏற்பட்டு, அவரது இடது கை அவரது கட்டுப்பாட்டை மீறி செயல்பட ஆரம்பிக்கிறது. அதாவது மூளை சொல்வதை அவர் பிக்பாக்கெட் அடிக்க உதவியாக இருக்கும் அவரது இடது கை கேட்காது.
அதனால் அடுத்தடுத்து என்னென்ன கூத்துகள் நடக்கிறது? என்பதே கிளைமாக்ஸ்.
தமிழ்சினிமாவில் பெயர் தெரியாத நோய்களைக் கொண்ட கதைகள் எத்தனையோ படங்களில் வரும். அந்த வரிசையில் இப்படிப்பட்ட நோயுள்ளவர்களும் இந்த உலகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று ஆச்சரியப்படுத்துகிறது இந்தப் படத்தில் ஹீரோவின் பீச்சாங்கை செய்யும் சேட்டைகள்.
முதல் படம் என்றால் முழுக்க முழுக்க ரொமான்ஸ் கதையைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் ஹீரோக்களுக்கு மத்தியில் முதல் படத்திலேயே வித்தியாசமான கதையம்சம் கொண்டதாக தேர்ந்தெடுத்திருக்கும் ஹீரோ ஆர்.எஸ்.கார்த்திக் பிக் பாக்கெட் திருடனுக்குரிய குணங்களுடன் அளவான நடிப்பை அசால்ட்டாக காட்டியிருக்கிறார்.
கதை முழுக்க ஹீரோ கார்த்தியை முன் வைத்தே பயணப்படுவதால் ஹீரோயின் அதிதிக்கு படத்தில் அவ்வளவாக வேலை இல்லை.
வரும் காட்சிகள் குறைவு என்றாலும் குறையாமல் சிரிக்க வைத்து விட்டுச் செல்கிறார் அரசியல்வாதியாக வரும் எம்.எஸ்.பாஸ்கர்.
ஹீரோ, ஹீரோயின் உட்பட படம் முழுக்க பல புதுமுகங்களை வைத்து காமெடிப்படமாகத் தர முயற்சித்திருக்கிறார் இயக்குநர் அஷோக்.
இப்படியெல்லாம் கூடவா இடது கை செய்யும் என்று ஆச்சரியப்படும் விதமாக காட்சிகளை அமைத்து விறுவிறுப்பைக் கூட்டும் இயக்குநர் இரட்டை அர்த்த வசனங்களில் படத்தை தூக்கி நிறுத்த முயன்றதை தவிர்த்திருக்கலாம்.
இடைவேளைக்குப் பிறகு விறுவிறுப்பாக நகரும் காட்சிகள் இடைவேளைக்கு முன்பு இருந்திருந்தால் பீச்சாங்கையை இருகரம் கூப்பி வரவேற்றிருக்கலாம்!