‘லக்ஷ்மி’யை ‘சலங்கை ஒலி’யோடு ஒப்பிட வேண்டாம் – பிரபுதேவா வேண்டுகோள்
‘தேவி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிரபுதேவா மீண்டும் இயக்குனர் விஜய் இயக்கத்தில் ஹீரோவாக நடித்திருக்கும் படம் ‘லக்ஷ்மி’.
நடனத்தை மையமாக வைத்து தயாராகியிருக்கும் இப்படத்தை ப்ரமோத் ஃபிலிம்ஸ் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தில் பிரபுதேவாவுடன், ஐஸ்வர்யா ராஜேஷ், பேபி ‘தித்யா’ ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்திருக்கிறார்.
வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி படம் வெளியாவதையொட்டி பத்திரிகையாளர்களை சந்தித்தது படக்குழு. சந்திப்பில் பேசிய பிரபுதேவா ”லக்ஷ்மி திரைப்படத்தை சலங்கை ஒலி படத்தோடு ஒப்பிட வேண்டாம்” என்று வேண்டுகோள் வைத்தார்.
தொடர்ந்து பேசிய அவர் ”இந்திய அளவில் இருக்கும் நல்ல திறமையான குழந்தைகளை தேர்ந்தெடுத்து இந்த படத்தை எடுத்திருக்கிறார் விஜய். தேவி, லக்ஷ்மி படங்களில் விஜய் இயக்கத்தில் நடித்திருக்கிறேன். அடுத்து தேவி 2 படத்தை எடுக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறோம்.
ஆர்ட் அசிஸ்டண்ட் மாதிரி ஓடி ஓடி உழைத்திருக்கிறார் கலை இயக்குனர் ராஜேஷ். ஐஸ்வர்யா டான்ஸராக இருந்தாலும் இதில் அவருக்கு டான்ஸ் இல்லை, நடிக்க மட்டும் வைத்திருக்கிறோம். குழந்தைகள் மக்ச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள். \
நான் 4,5 டேக் வாங்கினாலும் குழந்தைகள் குறிப்பாக தித்யா முழு டான்ஸையும் ஆடி முடித்து தான் நிறுத்துவார். ‘சலங்கை ஒலி’ என்ற டான்ஸ் படம் இதற்கு முன்பு வெளிவந்திருக்கிறது. அது வேற லெவல். அதனோடு இதை ஒப்பிட வேண்டாம்” என்றார்.
நிகழ்ச்சியில் கலை இயக்குனர் ராஜேஷ், படத்தொகுப்பாளர் ஆண்டனி, பேபி தித்யா, தயாரிப்பாளர் பிரதீக் சக்கரவர்த்தி, தயாரிப்பாளர் ரவீந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.