பிரகாமியம் – விமர்சனம்

போகனைப் போல கூடுவிட்டு கூடு பாயும் வித்தையுடன் உளவியலை அடிப்படையாக வைத்து வந்திருக்கும் இன்னொரு சுமால் பட்ஜெட் படம் தான் இந்த ”பிரகாமியம்.”
மனநலம் பாதிக்கப்பட்டவர் போன்று காணப்படும் ஹீரோ பிரசாப் ஆள் பார்ப்பதற்கு கொஞ்சம் அசாதாரணமானவர். ஒரு உடம்பிலிருந்து இன்னொரு உடம்புக்குள் புகும் கூடுவிட்டு கூடு பாயும் வித்தை தெரிந்த இவருக்கும் ஒரு ஜோசியருக்கும் இடையே எப்போதுமே மோதல் தான்.
அப்படிப்பட்டவரை மேலும் கோபப்படுத்தும் விதமாக இனி உன் வாழ்க்கையில் திருமணம் நடக்க வாய்ப்பே இல்லை, ஒருவேளை திருமணம் நடந்தாலும் உனக்கு புத்திர பாக்கியம் இருக்காது, அதையும் மீறி புத்திர பாக்கியம் கிடைத்து விட்டாலும், உன்னுடைய சாவு அடிபட்டு, மிதிபட்டு ஒரு அனாதையைப் போல மிகவும் மோசமாக இருக்கும் என்கிறார் அந்த ஜோசியர்.
இதைக் கேட்டதும் ஆவேசமடையும் பிரதாப் தன் வாழ்க்கையை நிர்ணயிக்கும் ஜோசியத்தை எப்படியாவது பொய்யாக்க வேண்டுமென்று அவர் சொன்ன மூன்று நிலைகளையும் விஞ்ஞானத்தின் உதவியோடு வெற்றி கொள்ள நினைக்கிறார்.
அதன் முதல்படியாக தன் வாழ்க்கையை குறித்து சொன்ன ஜோசியரின் விவாகரத்து பெற்ற மனைவியையே திருமணம் செய்கிறார். அதன்பிறகு அவருக்கு குழந்தை பிறந்ததா? அவர் நினைத்தபடி ஜோதிடத்தை வென்றாரா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.
படத்தில் அளவான கதாபாத்திரங்கள் தான். அப்பா, மகன் என இரண்டு கேரக்டர்களிலும் இயக்குநர் பிரதாப் தான் நடித்திருக்கிறார். அப்பா கேரக்டரில் மனநிலை பாதிக்கப்பட்டவராக லேசாக நாக்கை வெளியில் நீட்டிக் கொண்டு தலையை ஒருபக்கமாக சாய்த்தபடி படம் முழுக்க ஆவேசத்தோடு நகர்கிறார்.
மகன் கேரக்டரில் எப்போதுமே மதுவைக் குடித்துக் கொண்டு எனக்கு எனர்ஜி பத்தாது, பத்தாது என்று அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டே இருக்கிறார். தன்னை வைத்து தன் அப்பா அவர் வாழ்வதற்காக என்னவெல்லாம் செய்கிறார் என்று தெரிந்தும் பெற்ற அப்பாவை ஒன்றும் செய்ய முடியாத பாசத்தை முகத்தில் காட்டியிருக்கிறார்.
இருந்தாலும் கூடு விட்டு கூடு பாயும் வித்தை தெரிந்த அந்த அப்பா கேரக்டரை ஒரு இயல்பான மனிதராக காட்டியிருக்கலாம். மனநலம் பாதிக்கப்பட்டவரின் அந்த முக பாவனைகளை ரசிக்க முடியவில்லை.
நாயகிகளாக நடித்திருக்கும் சுபா, பார்வதி இருவரும் தங்கள் கேரக்டரை உணர்ந்து அதை உள்வாங்கி நடித்திருக்கிறார்கள்.
சீரியஸாக நடிக்கும் சில காட்சிகளில் நம்மை சிரிக்க வைத்திருக்கிறார்கள். படத்தில் வருகிற பெரும்பாலான கேரக்டர்களை இன்னும் கொஞ்சம் முக லட்சணம் உள்ளவர்களாக போட்டிருக்கலாமோ என்கிற கேள்வியையும் எழுப்புகிறது. அந்தளவுக்கு படத்தில் சிலருடைய முகங்களை பார்க்க நமக்கு எரிச்சல் தான் வருகிறது.
படத்தில் பாடல்களே இல்லை. இரண்டு நாயகிகள் இருந்தும் காதல் காட்சிகள் இல்லை. அம்மா செண்டிமெண்ட்டை முன்னிறுத்தினாலும் அம்மா புகழ்பாடும் பாடல்கள் இல்லை. இப்படி சில ஆறுதல்களும் உண்டு.
பிரகாமியம் என்பது ஆயக்கலைகள் 64 கலைகளில் மற்றொருவரின் மனதை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கலையான கூடு விட்டு கூடும் பாயும் வித்தையை குறிக்கும் அற்புதக் கலையாகும். அப்படிப்பட்ட இந்தக் கலையைத் தேடிப்பிடித்து அதற்கான பட்ஜெட் கிடைக்காமல் கமர்ஷியலாகவும், ரசிகர்கள் புரிந்து கொள்ளும்படியும் தெளிவாக சொல்ல முயற்சிப்பதில் தவறியிருக்கிறார்.
இருந்தாலும் என்ன சர்ட்டிபிகேட் கொடுக்கலாம்? என்று சென்சார் போர்டு உறுப்பினர்களையே மண்டையைப் பிய்க்க வைத்த இப்படத்தில் அப்படியென்ன இருக்கிறது? என்று யோசிப்பவர்கள் ஒரு தடவையாவது பார்த்து விட்டு வரலாம்.