டாஸ்மாக் வேண்டாம் என்பதற்கான காரணங்கள்

Get real time updates directly on you device, subscribe now.


தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உச்சத்திற்குச் சென்று கொண்டிருக்கும் நிலையில் அரசு வரும் 7-ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் ஓப்பன் ஆகும் என்று அறிவித்துள்ளது. அரசின் இந்த முடிவிற்கு பெரும்பாலான மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இயக்குநர் மற்றும் கலப்பை மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவருமான PT செல்வகுமார் சில முக்கியமான வேண்டுகோளை வைத்துள்ளார்..

1. 45 நாட்களுக்கு பிறகு திறப்பதால் பெரும் கும்பலாக குடிக்க வருவார்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாது.இதனால் நோய் தொற்று ஏற்படும்.

2. டாஸ்மாக்கில் குடிப்பவர்கள் பெரும்பாலும் ஏழை எளிய மக்கள். வேலை இல்லாமல் பண கஷ்டத்தில் இருக்கும் இப்போது கடன் வாங்கி குடித்து கடனாளி ஆகி விடுவார்கள்.குடும்பத்திற்குள் சண்டை சச்சரவு வந்து தற்கொலைகள் நிகழ வாய்ப்புள்ளது. விபத்து, திருட்டு,வழிப்பறி, கற்பழிப்பு,கொலை போன்றவற்றிற்கும் வழிவகுக்கும்.

3.குடிப்பவர்கள் போதையுடன் இருக்கும் போது கண்ட இடத்தில் எச்சில் துப்புவார்கள், மற்றும் சிகரெட்,பீடி புகைத்து புகையை வெளியிடுவார்கள்.இதனால் கிருமி தொற்று ஏற்படும்.

4.கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்க முடியாத சூழலில் உடலில் எதிர்ப்பு சக்தி இருந்தால் கொரோனா தாக்காது. ஆனால் குடிப்பதால் உடலில் எதிர்ப்பு சக்தி குறைந்து கொரோனோவால் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.

5.ஊரடங்கால் 45 நாட்கள் குடிக்காமலும் வாழ முடியும் என நிரூபித்துள்ளார்கள். உடல் ஆரோக்கியத்துடனும் , புத்துணர்ச்சியுடனும் இருக்கும் அவர்களை மீண்டும் குடிப்பதற்கு அரசே வழி வகை செய்யலாமா. குடி குடியை கெடுக்கும் என்ற வாசகம் ஒவ்வொரு பாட்டில்களிலும் அரசே எழுதி வைத்துள்ளது. அரசே குடியை கெடுக்க துணை போகலாமா

6.டாஸ்மாக் அரசு பணியாளர்களும் பூரண மதுவிலக்கே மக்களுக்கும் ,அரசுக்கும் நல்ல தீர்வு என்று தங்களுக்கு கடிதம் தந்துள்ளார்கள்.

7 மாண்புமிகு அம்மா அவர்கள் படிப்படியாக குறைத்து முழு மதுவிலக்கை கொண்டு வருவேன் என்று பதவி ஏற்றதும் சொன்னார்கள். அவர்கள் சொன்ன வாக்கை காப்பாற்ற, அவர்களின் கனவை நனவாக்க தங்களுக்கு நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.

எனவே அன்பான முதல்வர் அவர்களே கோடானு கோடி தமிழக மக்களின் வேண்டுதலும் வேண்டுகோளும் டாஸ்மாக் வேண்டாம் என்பதே! மாண்புமிகு அம்மாவின் ஆத்மா சாந்தியடைய மூடிய டாஸ்மாக்கை மீண்டும் திறக்காமல் இருக்க நடவடிக்கை எடுங்கள். அம்மாவின் அரசு பெண்களின் அரசு! கோடானு கோடி பெண்களின் வாழ்க்கையில் விளக்கேற்றுங்கள்!

இவ்வாறு கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் வேண்டுகோள் வைத்துள்ளார்.