உங்கள் வார்த்தை பலித்து விட்டதே ‘பிலிம் நியூஸ்’ ஆனந்தன் சார்… : கண்ணீருடன் மீனாட்சி சுந்தரம்

அப்போது சென்னை ராயப்பேட்டை நியூ காலேஜ் அருகில் குடியிருந்தார் பிலிம்நியூஸ் ஆனந்தன். அவர் வீட்டுக்கு
சென்று வராத சினிமா ரிப்போர்ட்டரே இருக்க முடியாது. பலதகவல்களுக்காக, பலமுறை நானும் அவரை தொந்தரவு
செய்து இருக்கிறேன்.
ஒவ்வொரு முறையும் முகம் சுளிக்காமல், குறிப்பாக, எந்த பலனையும் எதிர்பாராமல் ஸ்டில்கள், நியூசை, விளக்கங்களை தருவார். தமிழ்சினிமாவில் எந்த டவுட் என்றாலும், அவருக்கு போன் அடிக்கலாம். ‘ஆனந்தன்’ என்று மறுமுனையில் அவரே பேசுவார்.
வீட்டுக்கு சென்றால், அவருடைய உயிரான அந்தம்மா அப்படி உபசரிப்பார்கள். சில ஆண்டுகளாக அவர் பார்வை கோளாற்றில் கஷ்டப்பட்டபோது, அந்தம்மா படித்து தகவல்களை சொல்ல, பிலிம் நியூஸ் ஆனந்தன் அதை ஆவணமாக்கினார். அடிக்கடி எனக்கு போன் பண்ணுவார். சார், அந்த படம் ரிலீஸ் ஆகிவிட்டதா? விளம்பரம் வந்துவிட்டதே?என்று அக்கறையாக கேட்டு குறித்துக்கொள்வார்.
இந்த ஆண்டு, இந்த படம் வெளியானது எனன பல தகவல்களை மனிதர் புட்டு, புட்டு வைப்பார். நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அவரிடம் தகவல் பெறாத நபர்களை இருக்கமுடியாது. சம்பந்தப்பட்ட பட நிறுவனம், நடித்த நடிகர்களிடம் கூட போட்டோ இருக்காது. ஆனால், அவர் பாதுகாத்து வைத்து இருப்பார். எந்த நேரத்தில் அதை கொடுத்து உதவுவார். கடந்த சில ஆண்டுகளாக அவரிடம் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. அடிக்கடி போன் செய்வார். நானும் போன் செய்து பேசுவேன்.
ஆங்கில புத்தாண்டு அன்று அவரை சந்தித்து ஆசி பெற்றேன். அப்புறம், சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் ஒரு ஸ்டூடியோ எங்கே இருந்தது என்று தெரியவில்லை. அதை பற்றி கேட்டேன். அந்த காலத்தில் இந்த இடத்தில் இருந்தது என்றார் தெளிவாக. இனி, டவுட் என்றால் யாரிடம் போய் கேட்பேன். சில ஆண்டுகளுக்கு ஒரு பொங்கல் மலருக்கு அவரை பேட்டி எடுத்தேன். தன் அப்பா, தனது கல்லுாரி வாழ்க்கை, நாடகம் போட்டது, சிவாஜியை முதலில் சந்தித்து போட்டோ எடுத்தது, எம்ஜிஆர் நினைவலைகள், சாவித்ரி, பத்மினி நடிக்க வந்த கதை என ரொம்பநேரம் பேசினார். அதெல்லாம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நேரங்கள்.
தமிழ்சினிமாவில் முதல் படம் கீசகவதம். அந்த படத்தை தயாரித்து இயக்கியவர் நடராஜ முதலியார். அவரை படமெடுத்த ஒரே நபர் பிலிம்நியூஸ் ஆனந்தன்தான்.நடராஜ முதலியாரின் மகன் தனது அப்பா போட்டோவை ஒரு கண்காட்சியில் பார்த்துவிட்டு, அவரிடம் வந்து அழுததை சொன்னார். பிலிம்ஸ் ஆனந்தன் இல்லாவிட்டால், தமிழ்சினிமா தகவல்கள், போட்டோக்கள் யாருக்கும் தெரியாமல் போய் இருக்கும். அதேபோல், முதல் பேசும்படமான காளிதாஸ் நாயகி டி.ஆர்.ராஜகுமாரியையும் படமெடுத்து இருக்கிறார். அவர் கேமராவில் சிக்காத நடிகர், நடிகைகளே அந்த காலத்தில் கிடையாது. சாதனைகள் படைத்த தமிழ்த்திரைபட வரலாறு என்ற அவரின் புத்தகம், தமிழ்சினிமாவின் பெரிய சொத்து. அதில் அவ்வளவு தகவல்கள், போட்டோக்கள் இருக்கின்றன.
கடந்த ஆட்சியில் அவருடைய படைப்புகள் அரசுடைமையாக்கப்பட்ட பல ஆண்டுகளாக அவர் சேகரித்த தகவல்கள், போட்டோக்கள் ராயப்பேட்டை வீட்டில் இருந்து சென்னை தரமணி பிலிம் சிட்டிக்கு எடுத்து செல்லப்பட்டன. அப்போது சின்ன குழந்தை போல அழுதேன். என் குழந்தை என்னை விட்டு போவதை போல கலங்கினேன் என்று என்னிடம் ஒருமுறை வருத்தப்பட்டார். இப்போதும் பிலிம் நியூஸ் ஆனந்தனின் அந்த பொக்கிஷங்கள் கேட்பாராற்று தரமணி பிலிம் சிட்டியில் கிடக்கிறது. அதை நவீனப்படுத்த வேண்டும். அந்த தகவல்களை டிஜிட்டல் ஆக்க வேண்டும். அப்போதுதான் தமிழ்சினிமா வரலாறு இன்னும் பல நுாறு ஆண்டுகள் நிலைத்து நிற்கும். அதுதான் பிலிம் நியூஸ் ஆனந்தனின் ஆசையும் கூட…
ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் கடந்த ஆண்டு தமிழ்சினிமா விவரங்களை ஒரு புத்தகமாக அச்சடித்து, அதை அனைவருக்கும் இலவசமாக வழங்குவார். சில ஆண்டுகளாக ‘‘என்னால முடியலை சார், . இந்த ஆண்டுடன் கடைசி’ என்றார். ஆனால், அடுத்த ஆண்டும் சிரித்துக்கொண்டே அந்த ஆவண புத்தக்கத்தைகையில் கொடுப்பார். இந்த ஆண்டு கூட ‘‘என்னால முடியலை…உடல்நிலை ஒத்து வரலை, பார்வை பிரச்னை. ஒரு டாக்டரிடம் போனேன்.
எல்லா செக் அப் முடிந்துவுடன் ஸாரி குணப்படுதத முடியாதுன சொல்லுறாரு. அடுத்து ஆண்டு புத்தகம் வராது என்றார். அதெல்லாம் இல்லை. அடுத்த ஆண்டும் புத்தகம் வரும். நீங்க நல்லா இருப்பீங்க என்றேன்.
இந்த முறை உங்கள் வார்த்தை பலித்து விட்டதே சார்..
கண்ணீருடன்
மீனாட்சி சுந்தரம்
நிருபர்