யுவன் ஷங்கர் ராஜா பட விழாவுக்கு வர மறுத்த இளையராஜா!
இசையமைப்பாளர்கள் எல்லோரும் அடுத்தடுத்து ஹீரோவாகிக் கொண்டிருக்கும் சூழலில் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.
கே புரொடக்ஷன்ஸ் உடன், தனது ஒய் எஸ் ஆர் பிக்சர்ஸ் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு ‘பியார் பிரேமா காதல்’ என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள்.
‘பிக்பாஸ்’ சீசன் ஒன்று புகழ் ஹரீஷ் கல்யாண், ரைஸா வில்சன் நடித்திருக்கும் இப்படத்தை இளன் இயக்கியிருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
நேற்று சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு இசைஞானி இளையராஜா உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.
முன்னதாக மேடைக்கு பேச வருவதற்கு முன் தன் அப்பாவும், இசையமைப்பாளருமான இளையராஜாவை வரவேற்றுப் பேசிய யுவன் ”120 படங்கள் இசையமைத்திருக்கிறேன், ஆனால் எந்த ஒரு படத்தின் விழாவுக்கும் என் அப்பா வந்ததே இல்லை. நான் வந்து உன்னை ப்ரமோட் பண்ண மாட்டேன் அப்படின்னு சொல்லிட்டார். இப்போது படம் தயாரிச்சிருக்கேன் வாங்கனு சொன்னேன். வந்திருக்கார்” என்று வரவேற்றார்.
பின்னர் மேடையேறிய இசைஞானி இளையராஜா பேசியதாவது, “பியார் பிரேமா காதல் படத்துக்காக இங்கு வந்திருக்கிறேன். அன்புக்காக தான் இங்கு வந்திருக்கிறேன். இந்த படம் முதன் முதலாக தயாரிச்சுருக்கிறதுனால என் ஆசீர்வாதம் யுவனுக்கு இருக்கணும்னு இங்கு வந்திருக்கேன்.
இசையமைப்பாளர்கள் எலக்ட்ரானிக் இசையை விட்டுட்டு, உண்மையான இசைக்கருவிகளை உபயோகியுங்கள். அது தான் ஆன்மாவை எழுப்பும், புத்துணர்ச்சியோடு வைத்திருக்கும்” என்றார்.
விழாவில் நடிகர்கள் ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, ஆர்யா, கிருஷ்ணா, ஷாந்தனு, வசந்த் ரவி, நடிகைகள் ரேகா, பிந்து மாதவி, இசையமைப்பாளர் டி.இமான், ஐஸ்வர்யா தனுஷ், பாடலாசிரியர் விவேக், இயக்குனர்கள் ஐக், ஆதிக் ரவிச்சந்திரன், பவதாரிணி, நாயகி ரைஸா வில்சன், தயாரிப்பாளர் ராஜராஜன், இர்ஃபான் மாலிக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.