தடைகள் தகர்ந்தது : 800+ தியேட்டர்களில் ரிலீசாகிறது ‘ரஜினி முருகன்’
புதிய ரிலீஸ் தேதி மீண்டும் அறிவிக்கப்பட்டு சில வாரங்கள் ஆகியும் கூட, சில தினங்களுக்கு முன்புவரை ‘ரஜினி முருகன்’ திட்டமிட்டபடி 14-ம் தேதி பொங்கல் கொண்டாட்டமாக இருக்குமா? என்கிற சந்தேகம் கோலிவுட்டின் காதுகளை குடைந்து கொண்டே இருந்தது.
ஏனென்றால் இதற்கு முன்பும் பல தடவைகள் ரிலீஸ் தேதிகள் முறைப்படி அறிவிக்கப்பட்டும் படம் ரிலீசாகாததால் வந்த வழக்கமான சந்தேகம். அதோடு சிலர் படம் இந்த முறையும் ரிலீஸ் ஆகாது என்கிற வழக்கமான பொய்களும், புரட்டுகளும் கூட சேர்ந்தே செய்திகளாக உலாவிக் கொண்டிருந்தன.
இந்த தடவையும் ரிலீஸ் தேதி தள்ளிப்போனால் அவ்வளவு சரியாக இருக்காது என்பதால் நேற்று தயாரிப்பாளர் தரப்பிலிருந்து, விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட தடைக்கு எதிரானவர்கள் அத்தனை பேருடனும் விடிய விடிய பேச்சு வார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டு 14-ம் தேதி ‘ரஜினிமுருகன்’ ரிலீசை இன்று 12ம் தேதி மாலை உறுதி செய்தது திருப்பதி பிரதர்ஸ் பட நிறுவனம்.
இதில் கூடுதல் சந்தோஷம் தரும் செய்தி என்னவென்றால் பொங்கலுக்கு ரிலீசாகும் வேறு எந்தப் படத்துக்கும் கிடைக்காத வகையில் ரஜினி முருகனுக்கு சுமார் 800 க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் கிடைத்திருக்கிறது.
ஆக உலகம் முழுக்க இந்த ‘ரஜினி முருகன்’ சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு பொங்கல் கொண்டாட்டமாக இருக்கப் போகிறது என்பது உறுதியாகியிருக்கிறது!