ரஜினி – கமல் கூட்டணி அரசியல்! : சும்மா இருந்தவங்களை சீண்டி விட்டுட்டீங்களேப்பா..!
”ஆண்டவன் எப்போது நினைப்பாரோ அப்போது தான் போருக்குப் போவேன்” என்று தன் ரசிகர்கள் முன்னிலையில் வழக்கம் போல வீராவசனம் பேசிவிட்டு ”காலா” படப்பிடிப்பில் பிஸியாகி விட்டார் ரஜினிகாந்த்.
ஆனாலும் ரஜினி பேசினால் சீண்டாமல் விடுவதில்லை என்று காத்திருக்கும் துக்கடா கட்சிகள் இந்த முறை அரசியலுக்கு வறப்போகிற தொணியில் இருந்த அவரது பேச்சை தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.
முன்பு போல இல்லாமல் தமிழகத்தில் தற்போது துணிச்சலான தலைமை இல்லாததால் இதுதான் அரசியலுக்கு சரியான தருணம் என்று ரஜினியைச் சுற்றியிருப்பவர்கள் தூபம் போடுகிறார்கள். ஆனாலும் நாலா பக்கமும் இருந்து வரும் எதிர்ப்பு விமர்சனங்களால் ரொம்பவே யோசிக்கத்தான் செய்கிறார்.
ரஜினியைச் சீண்டுகிற சில அரசியல்கட்சிகளும், சுப்ரமணியசாமி உள்ளிட்ட சில டெல்லி பொறுக்கீஸ்களும் சமீபகாலமாக மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளை சமூகவலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் கடுமையாக விமர்சித்து வரும் கமலையும் சீண்டி வருகிறார்கள்.
இந்த ஒற்றுமையை பார்த்த ரஜினி பேசாமல் நண்பர் கமலுடன் கூட்டணி போட்டு அரசியலில் இறங்கி விடலாமா? என்று யோசிக்க ஆரம்பித்திருக்கிறாராம்.
தற்போது விஜய் டிவிக்காக ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார் கமல்ஹாசன். இந்த நிகழ்ச்சிக்கான செட், சென்னைக்கு அருகிலுள்ள ஈவிபி பொழுதுபோக்குப் பூங்காவில் தான் அமைக்கப்பட்டுள்ளது. அதே இடத்தில் தான் பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் ‘காலா’ படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இங்கு ரஜினி – கமல் இருவரும் தமிழக அரசியல் குறித்து அடிக்கடி சந்தித்து பேசிக்கொள்வதாகவும் கூறப்படுகிறது.
ரஜினி – கமல் என்கிற இருபெரும் ஆளுமைகளின் கூட்டு அரசியல் வரவேற்கத் தக்கதா? அல்லது நிராகரிக்கத் தக்கதா? என்பது அவர்களின் அடுத்தடுத்த நடவடிக்கைகளில் தான் தெரிய வரும்.
சும்மா இருந்தவங்களை சீண்டி விட்டுட்டீங்களேப்பா..!