ரோமியோ ஜூலியட் – விமர்சனம்
‘நிமிர்ந்து நில்’ படத்துக்குப் பிறகு ஜெயம்ரவியின் நடிப்பில் ரிலீசாகியிருக்கும் 100 % ரொமான்ஸ் திரைப்படம் தான் இந்த ரோமியோ ஜூலியட்.
‘எங்கேயும் எப்போதும்’ படத்துக்குப் பிறகு மீண்டும் ஜெயம்ரவியுடன் இந்தப்படத்தில் இணைந்திருக்கிறார் ஹன்ஷிகா மோத்வானி.
புனிதமான காதலை இந்தக்காலத்துப் பெண்கள் எப்படியெல்லாம் சுயநலத்துடன் பயன்படுத்தி இளைஞர்களை ஏமாற்றுகிறார்கள். அப்படி ஏமாற்றும் பெண்களுக்கு சவுக்கடியாக அமையும் படமாக தந்திருக்கிறார்கள்.
மனசைப் பார்த்து வந்து கல்யாணத்தில் முடிந்த காதல்கள் எல்லாம் மலையேறி ஆண்டுகள் பல ஆகிவிட்டன. இப்போதெல்லாம் தனக்கு காதலனாக வருபவன் எல்லா வசதிகளுடன் இருக்கிறானா? இல்லையா? என்பதை நோட்டம் விட்டு அப்புறம் அவனை காதலிப்பது தான் பேஸனாகி விட்டது.
அப்படித்தான் இப்படத்தின் நாயகன் ஜிம் மாஸ்டரான ஜெயம் ரவியை பெரிய பணக்கார வீட்டுப்பிள்ளை என்று தப்பாக நினைத்து வலியப்போய் காதலிக்கிறார் விமான பணிப்பெண்ணான ஹன்ஷிகா.
காதலிக்க ஆரம்பித்த சில தினங்களிலேயே அவர் பணக்காரர் இல்லை என்கிற உண்மை தெரியவருகிறது. உடனே அவருடைய காதலை தூக்கியெறிகிறார் ஹன்ஷிகா.
ஆனால் ஜெயம்ரவி ஹன்ஷிகாவை விடுவதாக இல்லை. ”நான் பணக்காரன்னு நெனைச்சு காதலிச்சது உன்னோட தப்பு. இருந்தாலும் நான் உன்னை நெஜமாகவே லவ் பண்றேன். உன்னை நல்லா பார்த்துப்பேன்” என்கிறார்.
ஹன்ஷிகாவோ ”என்னோட எதிர்ப்பார்ப்புக்கும், ஸ்டேட்டஸுக்கும் நீ செட்டாக மாட்டே…” என்று அவரை கழட்டி விடுவதிலேயே குறியாக இருக்கிறார். இதனால் நொந்து போகும் ஜெயம்ரவி ”நான் உன்னை லவ் பண்ணிட்டேன். இனிமே எந்தப் பொண்ணுக்கும் என் மனசுல இடமில்லை. அதனால உன்ன மாதிரியே ஒரு பொண்ணை எனக்கு செட் பண்ணிக்கொடுத்துட்டு போ” என்று அவருடன் நெருக்கமாக இருந்தபோது எடுத்த போட்டோக்களைக் காட்டி ப்ளாக்மெயில் செய்கிறார்.
ஹன்ஷிகாவுக்கும் பெரிய பணக்கார மாப்பிள்ளையுடன் நிச்சயமாகி விட, எங்கே அந்த திருமணம் ஜெயம்ரவியால் நின்றுவிடுமோ..? என்று பயந்து அவருக்கு ஒரு பெண்ணைத் தேடுகிறார்.
இடையில் அவருக்கு நிச்சயமான வீட்டில் நடக்கும் சம்பவங்கள் எல்லாமே ”நல்ல வாழ்க்கைக்கு பணம் முக்கியமில்லை. அன்பு தான் முக்கியம்” என்பதை உணர்த்துகிறது.
இதற்கிடையே ஜெயம்ரவி ஹன்ஷிகா செட் பண்ணிக்கொடுத்த பூனம்பாஜ்வாவை திருமணம் செய்யத் தயாராகிறார். ஹன்ஷிகாவோ மனம் திருந்தி மீண்டும் ஜெயம்ரவியை தேடி வருகிறார்? அவருடைய காதல் கை கூடியதா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.
‘எங்கேயும் எப்போதும்’ படத்துக்குப் பிறகு ஜெயம்ரவி – ஹன்ஷிகா காம்பினேஷனில் வந்திருக்கிறது இந்தப்படம். அந்தப்படத்தில் ரொம்ப ஸ்மார்ட்டாக பார்த்த ஜெயம்ரவியை இதில் பக்கா லோக்கல் இளைஞனாக காட்டியிருக்கிறார் இயக்குனர். படத்தில் டி.ஆரின் ரசிகர் என்று அறிமுகம் கொடுக்கப்பட்டாலும் ‘டண்டணக்கா..’ பாட்டு மட்டும் தான் அவர் டி.ஆரின் ரசிகர் என்பதற்கு அத்தாட்சியாக வருகிறது. ( கோர்ட்டு, கேஸ் என்று டி.ஆர் போனதால் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை குறைத்து விட்டார்கள் போலிருக்கிறது.)
ஹன்ஷிகா அதே வழக்கமான பப்ளிமாஸ், க்யூட் பியூட்டியாக மட்டுமில்லாமல் படத்தில் அவர் நடிப்பதற்கான ஏரியாக்கள் நெறைய இருக்கின்றன. பல காட்சிகளில் ஜெயம்ரவியை விட அவருக்கே ஸ்கோப் இருக்கிறது அவரும் சளைக்காமல் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஜெயம்ரவியின் நண்பராக விடிவி கணேஷ் படத்திலும் அதே பேருடனே வருகிறார். நண்பனுக்காக எதையும் செய்யும் கேரக்டர் இவருடையது. ஒரு டைரக்டரான இவர் கடைசியில் ஒரு படத்தை ஜெயம்ரவியின் காதலையே அவருக்கு தெரியாமல் ஆர்யாவை வைத்து படமாக எடுப்பது நல்ல காமெடி.
பூனம் பாஜ்வா இடைவேளைக்குப் பிறகு வந்தாலும் அழகிலும், நடிப்பிலும் கவர்கிறார்.
வைக்கம் விஜயலட்சுமியின் குரலில் ஒரு பாடலைக் கேட்கும் போது தான் ஓஹோ இந்தப்படத்துக்கு இசை டி.இமானோ என்கிற எண்ணம் வருகிறது. அந்தளவுக்கு பாடல்கள் மனதில் ஒட்டாமல் போகின்றன.
செளந்தர்ராஜனின் ஒளிப்பதிவில் எல்லாக் காட்சிகளும் ப்ரெஸ்ஸாக இருக்கின்றன.
காதலைச் சொல்லும் படங்கள் வரிசைக்கட்டி வந்தாலும் இந்தக்காலத்துக் காதல் எப்படி இருக்கிறது என்பதை எந்தப்படமும் சொன்னதாகத் தெரியவில்லை. அதன் லட்சணத்தை இந்தப்படத்தில் வெளிச்சம் போட்டுக்காட்டியிருக்கிறார் இயக்குனர் லஷ்மண்.
காதல் என்ற ஒற்றை வார்த்தையில் கவரப்பட்டு இக்கால இளைஞர்கள் எப்படியெல்லாம் பெண்களால் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மிக அழகாக காட்சிப்படுத்தி இளைஞர்களை உஷார் படுத்திருக்கிறார் இயக்குனர் லஷ்மண்.