மறுக்கா மறுக்கா சொல்றேன்… ’49 ஓ’வை மிஸ் பண்ணாதீங்க… : அழைக்கிறார் ‘காமெடி கிங்’ கவுண்டமணி
காமெடி உலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருக்கும் ‘காமெடி கிங்’ கவுண்டமணி நீண்ட இடைவெளிக்குப் பிறகு படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
அவ்வப்போது வந்து போகும் காமெடி கேரக்டர்களிலேயே நக்கலும், நையாண்டியும் தூக்கலாக இருக்கும், இதில் ஒரு படம் முழுக்க அவரே ஹீரோவாக நடித்தால் கலாய்த்தல்களுக்கும், காமெடிக்கும் பஞ்சம் வருமா என்ன?
நீண்ட இடைவெளிக்குப் பிறகு 49 ஒ படத்தில் ஹீரோவாகியிருக்கும் கவுண்டமணி சமீபத்தில் நடைபெற்ற அப்படத்தின் ஆடியோ பங்ஷனில் கலந்து கொண்டார்.
எத்தனை வயசானாலும் இன்னும் குறையாத அவருடைய பேச்சில் நக்கலும், நையாண்டியும் செம தூக்கலாக இருந்தது…
”எனக்கெல்லாம் ஆடவே வராது. ஆடிக்கிட்டிருக்கும்போது பக்கத்துல ஆடுற பொம்பளைங்க மேல விழுந்து கைய, காலை மிதிச்சிருவேன். ‘ஸாரி’ சொல்வேன். ‘பரவாயில்லை’ன்னுவாங்க.
மறுபடியும் ‘நீங்க போய் கொஞ்சம் உக்காருங்க. நான் ஆடிப் பார்த்துக்குறேன்’னுவேன். ‘இல்ல ஸார். வேணாம்’னு சொல்வாங்க. ‘இல்லம்மா.. திரும்ப நின்னீங்கன்னா மறுபடியும் காலை மிதிச்சிருவேன்’னு சொல்வேன்.. இப்படி டான்ஸுக்கு சங்கடப்படுற என்னையே இந்தப்படத்துல ஆட வெச்சுருக்காங்க…
இந்தப்படத்துல நான் ஹீரோவா நடிக்கக் காரணமே படத்தோட கதை தான்.
2 மணி நேர படத்தோட கதையை பாடலாசிரியர் யுகபாரதி ரெண்டே வரிகளில் சொல்லியிருக்கார். ‘விவசாயம் இல்லைன்னா.. உலகம் ஏதுடா..? உயிர் ஏதுடா..? பல கட்டடங்கள் கட்ட வயல்காட்டை அழிச்சாங்க’ன்னு.! அதுதான் படத்தோட கதை.
விவசாயமும், விவசாயிகளும் நம்ம நாட்டுக்கு அவசியம் தேவை. விவசாயி இல்லைன்னா நாம உயிர் வாழ முடியாது. நாம சாப்பிடுற சாப்பாட்டை யார் தர்றது..?. ஆனால், அந்த விவசாயிக்கு அந்த நிலம் தான் மானம், புகழ், உயிர், பெயர், புகழ் எல்லாம். அந்த நிலத்தை விட்டுறக் கூடாது. அது கால் ஏக்கர், அரை ஏக்கர், முக்கால் ஏக்கரா இருந்தாலும் சரி.. அதுலதான் அவங்க வாழ்க்கை. அதுலதான் விவசாயம் பண்ணணும்..
ஒரு வருஷம் விளைச்சல் இல்லைன்னா அடுத்த வருஷம் விளையும். ‘நல்லா விளையலை.. அதுனால நிலத்தை வித்துட்டேன்’னு சொல்லக் கூடாது.. ஒரு வியாபாரி, தன் வியாபாரத்துல நஷ்டமானாலும் அடுத்து வேற வியாபாரத்துல ஈடுபட்டு ஜெயிக்கிறான்ல.. அது மாதிரிதான்.
அந்த விவசாயிகளைத் தேடி யார், யாரெல்லாம் வர்றாங்க.. அரசியல்வாதிகள், ரியல் எஸ்டேட் ஓனர்கள், தொழிலதிபர்கள், கார்பரேட் கம்பெனிக்காரங்க.
எதுக்கு வர்றாங்க..? துக்கம் விசாரிக்கவா..? இல்ல சந்தோஷம் கொண்டாடவா..? அந்த நிலத்துல கால் ஏக்கரையாவது வாங்கிரலாம்னுதான்..
சில பேர் வித்துர்றாங்க. அந்த இடத்துல கட்ட்டம் கட்டிர்றாங்க. அப்புறம் விளை நிலம் எங்க இருக்கும்..? அப்புறம் எப்படி நாம சாப்பிடுறது..? அப்படியிருக்கக் கூடாது. ‘விவசாயிகள் விவசாயிகளாத்தான் இருக்கணும்’னு சொல்றதுதான் இந்த 49-ஓ திரைப்படம்..
‘49-ஓ’ திஸ் இஸ் பெஸ்ட் மூவி. இதுவொரு நல்ல படம்..! இது எல்லாரும் அவசியம் பார்க்க வேண்டிய படம்.
நான் மறுபடியும் மறுபடியும் சொல்றேன். ‘49-ஓ’ படத்தைப் பத்தி மட்டுமே சொல்றேன். . நான் மறுக்கா மறுக்கா சொல்றேன். மவுன்ட் ரோடு தர்க்கா முன்னாடி வந்து நின்னு கூட சொல்றேன்.திஸ் இஸ் பெஸ்ட் மூவி. இதுவொரு நல்ல படம். இந்தப் படத்தை தயவு செய்து யாரும் மிஸ் பண்ணிராதீங்க. நீங்க பேமிலியோட அவசியம் பார்க்கணும்.
என்று கலகலப்பூட்டியபடி பேசி அமர்ந்தார் கவுண்டமணி.