அத்துமீறி நுழைபவர்களை காவு வாங்கும் மரணப்பாதை!

Get real time updates directly on you device, subscribe now.

நேநி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ரூட் நம்பர் 17’. இந்த படத்தை இயக்குநர் அபிலாஷ் ஜி தேவன் இயக்கியுள்ளார். இவர் பிரபல மலையாள இயக்குநர் தம்பிகண்ணம் தானம் அவர்களிடம் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அதுமட்டுமல்ல இதே நிறுவனத்தின் தயாரிப்பில் 14 சர்வதேச விருதுகளை வென்ற தாய்நிலம் என்கிற படத்தையும் இயக்கியுள்ளார்.

இந்த ரூட் நம்பர் 17 படத்தில் கதாநாயகனாக ஜித்தன் ரமேஷ் நடித்துள்ளார். கதாநாயகியாக அஞ்சு பாண்டியா என்பவர் நடித்துள்ளார். இவர் ஏர் இந்தியா நிறுவனத்தில் விமானப்பணிப்பெண்ணாக பணியாற்றுபவர். இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

படம் பற்றி இயக்குநர் அபிலாஷ் கூறும்போது,

“காட்டோடு சேர்ந்த பாதை என்பதுதான் இந்த படத்தின் தலைப்புக்கான அர்த்தம். முப்பது வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்த ஒரு பாதை இப்போது மூடப்பட்டுள்ளது. இந்த பாதையில் வலுக்கட்டாயமாக நுழைந்தவர்கள் எல்லாம் அன்றிரவே மரணத்தை தழுவுகிறார்கள். இதன் பின்னணியில் நெஞ்சை உருக்கும் காரணம் ஒன்று இருக்கிறது.

1990 முதல் 2020 வரை மூன்றுவித காலகட்டங்களில் நடக்கும் 30 வருட பழிவாங்கல் கதையாக இந்த படம் உருவாகியுள்ளது. அதற்கேற்ப ஜித்தன் ரமேஷும் மூன்று வித கெட்டப்புகளில் நடித்துள்ளார். அதில் 90 கிலோ எடையுள்ள ஒரு வித்தியாசமான கெட்டப்பும் உண்டு. இதற்காக தேசியவிருது பெற்ற ஒப்பனை கலைஞர் ரஷீத் அஹமது இந்த படத்தில் பணியாற்றியுள்ளார்.

இந்த படத்தின் கதை களம் தமிழகம் மற்றும் கர்நாடகா இரண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் நிகழ்கிறது. படப்பிடிப்பை கர்நாடக மாநிலம் குண்டல்பேட் மற்றும் தமிழகத்தில் தென்காசி, கடையநல்லூர் ஆகிய பகுதிகளில் நடத்தியுள்ளோம்.