குழந்தைகளுக்காக பாடிய இசையமைப்பாளர் எஸ்.எஸ்.தமன்
பிறரை மகிழ்வூட்டும் செயலைத் தொடர்ந்து செய்வதில் மகிழ்ச்சி காண்பவர்கள் ‘ராஜஸ்தான் யூத் அசோசியேஷன் மெட்ரோ’ என்கிற சென்னை வாழ் ராஜஸ்தான் இளைஞர் சங்கம் அமைப்பினர்.
பசியில்லாத உலகத்தை உருவாக்கும் பணியில் இந்த அமைப்பு செயல்படுகிறது. அவ்வகையில் சென்னை பகுதியின் சுமார் 60 ஆதரவற்றோர் இல்லங்களுக்கு மாதம்தோறும் உணவுக்குத் தேவையான பொருட்களை தங்களது ‘புட்பேங்க்’ எனப்படும் உணவு வங்கி மூலம் வழங்கி வருகிறார்கள்.
அது மட்டுமல்ல இவர்களின் இன்ப அதிர்ச்சியான சேவைகள் பல ஆண்டுகளாகத் தொடர்கின்றன.இவர்கள் மகிழ்விப்பது சாதாரணமானவர்களை அல்ல. ஆதரவற்றோர், அனாதைகள் இல்லத்தில் உள்ள குழந்தைகளைத்தான் இப்படி மகிழ்ச்சியூட்டி வருகிறார்கள்.அதன்படி சென்னை மாநகர ராஜஸ்தான் இளைஞர் அமைப்பு எனப்படும் யூத் அசோசியேஷன். மெட்ரோ இன்று தங்கள் 22 ஆம் ஆண்டு செயல்திட்ட தினத்தை வித்தியாசமாகக் கொண்டாடினர்.
இன்று கீழ்ப்பாக்கத்தில் உள்ள பாரதிய வித்யா பவனின் ராஜாஜி வித்யாஷ்ரம் கலையரங்கத்தில் விழா நடைபெற்றது. ஆதரவற்ற இயலாத குழந்தைகள் 1008 பேரை அழைத்து வந்து அவர்களுக்காக ஒரு பிரமாண்டமான இசை நிகழ்ச்சியை நடத்தினர். கட்டணம் ஏதுமின்றி அவர்களை மகிழ்ச்சியூட்ட மட்டுமே இது நடத்தப்பட்டது. இதில் பிரபல இசையமைப்பாளர் எஸ்.எஸ்.தமன் பிரதானமாக கலந்துகொண்டு பாடி குழந்தைகளுக்கு நேரடி இசைநிகழ்ச்சி அனுபவத்தை வழங்கினார்.
ஏர்டெல் சூப்பர் சிங்கர் புகழ் சக்தி அண்ட் சாய் இசைக்குழுவினர் இசைநிகழ்ச்சியில் பங்கேற்றனர். இசையமைப்பாளர் தமன் குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் இசைகச்சேரியில் பாடி மகிழ்வித்தார். பல்வேறு பாடல்கள் பாடிய போது அந்தக் குழந்தைகள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
குழந்தைகள் பலரும் மன எழுச்சியுடன் ஆடி மகிழ்ந்தனர். இந்த இசை நிகழ்ச்சி அக்குழந்தைகளின் வாழ்வில் மறக்க முடியாத தருணமாக அமையும்படி உணர்வுபூர்வமாக இருந்தது. நிகழ்ச்சியில் நடிகைகள் சோனா,அர்ச்சனா,இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா சின்னத்திரை நட்சத்திரம் சோனியா, ஸ்ரீ மஞ்சுளா, அர்ச்சனா உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.‘
நிறைவாக அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது .
ராஜஸ்தான் யூத் அசோசியேஷன் மெட்ரோ’வின் தலைவர் விஜய் கோத்தாரி விழாவுக்கான விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
நிகழ்ச்சியை கண்டுகளித்த பலருக்கும் தோன்றியது, இதுதான் ‘சந்தோஷங்களில் பெரிய சந்தோஷம் அடுத்தவர்களைச் சந்தோஷப்படுத்துவது தான்’.