பெண்கள் சறுக்குவதே காதலில் தான்! : பெண் இயக்குநரின் ‘பரபர’ பேச்சு
மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு விளம்பரப் படம் திரையிடல் நிகழ்ச்சி இன்றுமாலை சென்னை போர்ப்ரேம்ஸ் தியேட்டரில் நடைபெற்றது.
மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு அமைப்பான ‘சென்னை டர்ன்ஸ் பிங்க்’ நிறுவனர் ஆனந்த குமார் , அனைவரையும் வரவேற்றார்.அவர் பேசும்போது ”வெஸ்ட் கேன்ஸர் ரிசர்ச் பௌண்டேஷன் தொண்டு நிறுவனத்தின் ஒரு அங்கமாக சென்னை டர்ன்ஸ் பிங்க் செயல்படுகிறது. இது அனுபவம் வாய்ந்த மருத்துவ வல்லுனர்களைக் கொண்டு மார்பகப் புற்றுநோய்பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறது மார்பக சுய பரிசோதனை செய்வது எப்படி? என்பதனை சென்னையிலுள்ள மகளிர் கல்லூரி களிலும் கிராமப்புற பகுதிகளிலும் சென்று மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
இந்த விழாவில் கலந்து கொண்டு விளம்பரப் படம் பற்றி இயக்குநர் விஜயபத்மா பேசும்போது :
“எனக்கு சமூக விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் ஆர்வமும் விருப்பமும் உண்டு.நான் தமிழ்நாடு மருத்துவமனையில் வேலை பார்த்த போது புற்றுநோய் போன்ற பல விழிப்புணர்வு மருத்துவமுகாம்கள் 250க்கு மேல் கலந்து கொண்டுள்ளேன். நான் இயக்கிய ‘நர்த்தகி’ திரைப்படத்தில் கூட சமூகநோக்கில் கதை சொல்லியிருப்பேன். விளம்பரப் படத்தை அறிமுகம் செய்ய இதில் கலந்து கொள்ள கேட்டதும் ஷ்ரேயா ரெட்டி உடனே ஒப்புக் கொண்டதற்கு நன்றி .
நான் முதலில் எடுத்த குறும்பட முயற்சிக்கு ஷ்ரேயா வின் மாமியார்தான் தயாரிப்பாளர். இதை குறுகிய கால அளவில் எடுத்தோம்.நோய் பற்றி பயமுறுத்தாமல் ஜாலியாக நம்பிக்கையூட்டும்படி எடுத்திருக்கிறோம். பெண்கள் எவ்வளவோ பொருளாதார சுதந்திரம் பெற்று ள்ளார்கள்.இருந்தும் வாழ்க்கையில் ஒரு இடத்தில் மட்டும் சறுக்கிவிடுகிறோம். வாழ்க்கையில் பெண்கள் காதல் என்கிற விஷயத்தில் மட்டும் சறுக்கி விடுகிறார்கள். அறிவை இழக்கிறார்கள். அதில்தான் சுயத்தை இழக்கிறோம் அதில் எச்சரிக்கையாக விழிப்புணர்வோடு இருந்தால் சாதிக்கலாம்.” என்றார்.