மீண்டும் தமிழுக்கு ‘யு-டர்ன்’ அடித்த சமந்தா!

Get real time updates directly on you device, subscribe now.

திருமணத்துக்குப் பிறகு மீண்டும் தமிழ்ப் படங்களில் பிஸியாக ஆரம்பித்திருக்கிறார் சமந்தா.

‘இரும்புத்திரை’ வெற்றியைத் தொடர்ந்து சமந்தா நடிப்பில் தமிழ் – தெலுங்கு என இருமொழிப்படமாக செப்டம்பர் 13ஆம் தேதி விநாயகர் சதூர்த்தி அன்று ரிலீசாக இருக்கும் படம் ‘யு-டர்ன்’.

ஸ்ரீனிவாச சில்வர் ஸ்கிரீன் சார்பில் ஸ்ரீனிவாச சித்தூரி, வி.ஒய். கம்பைன்ஸ் மற்றும் பிஆர்8 கிரியேஷன்ஸ் சார்பில் ராம்பாபு பண்டாரு தயாரித்திருக்கும் இந்தப்படம் கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘யு-டர்ன்’ படத்தின் ரீமேக் ஆகும். கன்னட ஒரிஜினல் படத்தை இயக்கிய பவன்குமார் இயக்கியிருக்கும் இந்த படத்தில் சமந்தா கதையின் நாயகியாக நடிக்க, ஆதி, ராகுல் ரவீந்திரன், நரேன், பூமிகா சாவ்லா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தின் தமிழ் பதிப்பை கிரியேட்டிவ் எண்டர்டெயினர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் சார்பில் தனஞ்செயன் வெளியிடுகிறார். இதன் சந்திப்பில் பேசிய சமந்தா ”இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் ஆனபோது 2 மில்லியன் வியூஸ் போகும், ரசிகர்கள் இவ்வளவு பெரிய ஆதரவு தருவார்கள் என நான் எதிர்பார்க்கவே இல்லை.

இந்த படத்தில் யாரும் நாயகன், நாயகி என இல்லை. கதை தான் படத்தின் மிகப்பெரிய ஹீரோ. ‘லூசியா’ படத்தில் இருந்தே நான் பவன் குமாரின் பெரிய ரசிகை. அப்போதே இவருடன் ஒரு படம் பண்ணனும்னு ஆசைப்பட்டேன். இந்த படத்தில் அது நிறைவேறியிருக்கிறது. இந்த படம் வெறும் திரில்லர் மட்டுமல்ல. இது ஒரு பெரிய பயணம். எல்லா உணர்வுகளையும் உள்ளடக்கியது. முழு மூச்சில் ஒரே கட்டமாக இந்த படத்தை முடித்தோம்.

தமிழில் தனஞ்செயன் சார் ரிலீஸ் செய்கிறார். இப்போது பாதுகாப்பான கைகளில் இந்த படம் இருப்பதாக உணர்கிறேன். மிகவும் யதார்த்தமாக கதாபாத்திரங்களில் நடிக்க எப்போதுமே ஆசை. அதுதான் இந்த படத்துக்குள் என்னை கொண்டு வந்தது. படத்தில் நிறைய எமோஷனல் காட்சிகள் உண்டு. எனக்கு கிளிசரின் போட்டு நடிப்பது பிடிக்காது.

கஷ்டப்பட்டு ஒரு காட்சியில் நடித்த முடித்தவுடன் இன்னொரு மொழியில் அதே காட்சியை நடிக்க வேண்டும். அது மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஹீரோக்கள் மீதான சுமை எப்படி இருக்கும் என்பதை இந்த படத்தில் நான் உணர்கிறேன்” என்றார் சமந்தா.

சந்திப்பில் விஸ்வாசம் பட இயக்குனர் சிவா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஆதி உள்ளிட்ட படக்குழுவினருடன் தயாரிப்பாளர்கள் ஸ்ரீனிவாச சித்தூரி, ராம்பாபு பண்டாரு ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.