தலைவி- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

தமிழக அரசியல் அத்தியாயத்தில் மிக முக்கியமான பெயர் ஜெயலலிதா. அவரின் வாழ்க்கை ஏற்கெனவே குயின் என்ற வெப்சீரிஸாக வந்திருந்தது. அதைப் பலரும் பார்த்திருந்தாலும் இயக்குநர் ஏ.எல்.விஜய் உருவாக்கிய தலைவி மீதும் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது..தலைவி எதிர்பார்ப்பை நிறைவேற்றி இருக்கிறாரா?

ஜெயலலிதாவின் முழு வரலாற்றையும் தொடாமல் சில முக்கியமான பகுதிகளை மட்டும் வைத்து திரைக்கதை எழுதியிருக்கிறார்கள் விஜய்யும், வியஜேந்திர பிரசாத்தும். சட்டமன்றத்திற்குள் அவமானப்படுத்தப் பட்ட ஜெயலலிதா எப்படி அந்தச் சட்டமன்றத்திற்குள் முதல்வராக நுழைகிறார் என்பதே கதையின் அடிநாதம்.

எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவிற்குமான உறவை ஒரு கவிதை போல கையாண்டிருக்கிறார் இயக்குநர். அந்த உறவுக்குள் இருந்த விரிசலையும் லேசாக தொட்டிருக்கிறார். இதில் எடுத்திருக்கும் கதையை விட தவிர்த்திருக்கும் கதையே அதிகம்.

Related Posts
1 of 4

எம்.ஜி.ஆருக்கு எதிரான மனநிலையில் ஜெயலலிதா இருந்ததாக ஒரு ஹிஸ்டரி உண்டு. அதை மிக லாவகமாக தவிர்த்திருப்பது ஓர் உதாரணம். கருணாநிதி எம்.ஜி.ஆர் யுத்தத்தை சிறப்பாக படமாக்கி இருக்கிறார்கள். அதேநேரம் தி.மு.க சைடில் கொஞ்சம் ஓவராக அடித்து துவைத்திருப்பது சின்ன நெருடல்..

படத்தின் தரத்தில் எந்தக் குறையும் சொல்லிட முடியாது.. கேமராமேன், எடிட்டர், காஸ்ட்யூம் டிசைனர், இசை அமைப்பாளர் இந்த நால்வரும் மிகச் சிறப்பாக உழைத்திருக்கிறார்கள். கார்த்தியின் வசனங்கள் அவ்வளவு மெச்சூட். திரைக்கதையில் விறுவிறுப்பு இருந்தாலும் படத்தோடு முழுதாக ஒன்ற முடியாதது ஒரு பெருங்குறை..அந்தக் குறைகளை நடிகர்களின் பங்களிப்பு நிவர்த்தி செய்து விடுகிறது..

எம்.ஜி.ஆராக வரும் அரவிந்தசாமியும் சரி, ஜெயலலிதாவாக வரும் கங்கணா ரணவத்தும் சரி எந்தச் சமரசமும் இல்லாமல் அழகாக நடித்திருக்கிறார்கள். இவர்களுக்கு அடுத்து படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர் சமுத்திரக்கனி. ஆர்.எம் வீரப்பன் கதாப்பாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார். சில லாஜிக் குறைகளையும் வரலாற்றுப் பிழைகளையும் மறந்து விட்டு பார்த்தால் தலைவியை ஒருமுறை வரவேற்கலாம்!
3/5