ரிகர்சல் பார்த்தாச்சு! : ஹீரோ ஆகிறார் சந்தோஷ் நாராயணன்?
அதிகம் பேச மாட்டார், பத்திரிகையாளர் சந்திப்பில் கூட நூலை பிடிச்சாப்ல நாலு லைன் தொடர்ச்சியாக பேசினாலே ஆச்சரியம். ஆனால் தனது இசையை உலகம் முழுக்க உள்ள இசை ரசிகர்களை பேச வைத்து வருகிறார். அதே சமயம் நன்றாக பாடவும் செய்வார். அவர் தான் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.
இதனாலேயே இன்றைய தேதியில் முன்னுக்கு வந்தவர்கள், முன்னுக்கு வரத் துடிப்பவர்கள் என எல்லா ஹீரோக்களின் சாய்ஸ் மியூசிக் டைரக்டர் சந்தோஷ் நாராயணன் தான்.
ரஜினியின் ‘கபாலி’, தனுஷின் ‘கொடி’, விஜய்யின் 60 -வது படம் என்று முன்னணி நடிகர்கள், இயக்குநர்களின் படங்களோடு பிஸியாக இருக்கும் சந்தோஷ் நாராயணனுக்கு கமிட் செய்திருக்கும் படங்களுக்கு இசையமைக்கவே நேரம் பத்தவில்லை. அப்படிப்பட்டவரை ஒரு பாடலுக்கு ஆட வைத்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.
அவர் இயக்கி வரும் ‘இறைவி’ படத்துக்கும் இவர் தான் இசையமைப்பாளர். இந்தப் படத்தில் தான், ஒரே ஒரு பாடலுக்கு செமத்தியாக குத்தாட்டம் ஒன்றை போட்டிருக்கிறாராம் சந்தோஷ் நாராயணன்.
ஏற்கனவே ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி என இசையமைப்பாளர்கள் ஹீரோக்களாக அவதாரமெடுத்து வரும் நிலையில் விரைவில் சந்தோஷ் நாராயணனும் ஹீரோ ஆகி விடுவாரோ? என்று அவரது ஆட்டத்தைப் பார்த்தவர்கள் எல்லாம் யோசிக்கத் தொடங்கி விட்டார்கள்.
யார் கண்டது? நாளை கார்த்திக் சுப்புராஜே சந்தோஷ் நாராயணனை ஹீரோவாகப் போட்டு படம் இயக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
சினிமா உலகில் எதுவும் நடக்கலாம்… அதுவும் எப்ப வேணும்னாலும் நடக்கலாம்… அம்புட்டுத்தான்!