‘வேளச்சேரி துப்பாக்கிச்சூடு’ – முக்கிய புள்ளியான சரத்குமார்!
டஜன் கணக்கிலான படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தாலும், முதல்முறையாக படம் முழுக்க என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக புதுப்படம் ஒன்றில் நடித்து வருகிறார் சரத்குமார்.
ஷாம் – சினேகா நடித்த ‘இன்பா’ மற்றும் ‘மயங்கினேன் தயங்கினேன்’ ஆகிய படங்களை இயக்கியவர் எஸ்.டி.வேந்தன் இயக்க, வி.ஆர் மூவிஸ் சார்பாக டி.ராஜேஸ்வரி தயாரிக்கும் இப்படத்துக்கு ‘வேளச்சேரி துப்பாக்கிச்சூடு’ என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள்.
படத்தில் கதாநாயகியாகவும், மனித உரிமை கழக அதிகாரியாக இனியா நடிக்கிறார். மற்றும் இமான் அண்ணாச்சி, பிளாக் பாண்டி, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இளம் ஜோடிகளாக அர்வி, கேரள வரவு நீரஜா நடிக்கின்றனர்.
இன்றைய தேதியில் வட மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வேலைக்கு வரும் இளைஞர்களால் பல இடங்களில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. கலாச்சார சீர்குலைவும் ஏற்படுகிறது.
இப்படிப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை ஒடுக்கும் காவல்துறை அதிகாரியாக சரத்குமார் நடித்துள்ளார். அந்த நிகழ்வுகளும் அதைச் சார்ந்த ஒரு என்கவுண்டர் ஆபரேஷனுக்கு தான் இந்த ’வேளச்சேரி துப்பாக்கிச்சூடு’ என பெயரிட்டுள்ளனர். அதைப் புதுவிதமான திரைக்கதையில் இளைஞர்களை ஈர்க்கும் விதமாக தர இருக்கிறார்களாம்.
இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் என்கவுண்டர் காட்சி வேளச்சேரியில் நடைபெறுவதால் இந்தப் படத்திற்கு பொருத்தமாக இருக்கும் என ‘வேளச்சேரி துப்பாக்கிச்சூடு’ என்கிற டைட்டிலை வைத்துள்ளார்களாம்.
காஷ்மீர் துப்பாக்கிச்சூடு, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு என துப்பாக்கிச்சூடு என்பது அன்றாட நிகழ்வாக மாறிப்போய் விட்டது. அதை மனித உரிமை மீறல் என சொல்லக்கூடிய இனியாவுக்கும், இல்லையில்லை காவல்துறையின் செயல் நியாயமானதுதான் என்கிற சரத்குமாருக்கும் நடக்கும் விவாதங்களும் அதை சார்ந்த நிகழ்வுகளும் தான் படத்தின் அடிநாதம்.
வடமாநில கொள்ளையர்கள் அட்டகாசம், இளமையான காதல் ஜோடி, என்கவுண்டர், மனித உரிமை கழக விசாரணை என மாறிமாறி பரபரப்பாக நகரும் விதமாக இதுவரை இல்லாத வகையில் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறோம்.. கிளைமாக்ஸ் என்கவுண்டர் முடிந்ததும் நடைபெறும் மனித உரிமை ஆணையத்தின் விசாரணை இந்தப் படத்தின் ஹைலைட்டாக இருக்கும்.
படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.