சிவலிங்கா – விமர்சனம்
RATING : 2.5/5
பேய், ஆவிப் படங்கள் என்றாலே ராகவா லாரன்ஸுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி போல. இதோ இன்னொரு அதே டைப் படமாக 2016ம் ஆண்டு கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் ரிலீசாகி வசூலை வாரிக்குவித்த ‘சிவலிங்கா’வின் தமிழ் ரீமேக் தான் அதே டைட்டிலோடு வந்திருக்கும் இந்த ‘சிவலிங்கா.’
ஓடும் ரயிலில் வெள்ளைப் புறா ஒன்றுடன் பயணம் செய்யும் சக்தி வாசு பார்வை தெரியாத ஒருவரால் கீழே தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்படுகிறார்.
கொலை செய்யப்பட்டதற்கான எந்த அடையாளமும் இல்லாததால் வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம் அது தற்கொலை தான் என்று தீர்ப்பளிக்கிறது.
ஆனால் இறந்து போன தன் காதலன் கொலையில் உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்க முயற்சிக்கும் காதலி சாரா கமிஷனர் உதவியை நாடுகிறார்.
அவர் சொன்னதன் பேரில் அந்த வழக்கை கையில் எடுத்து விசாரிக்கக் கிளம்புகிறார் சி.பி.சி.ஐ.டி ஆபீஸர் லாரன்ஸ்.
அவர் ஒருபக்கம் விசாரணையை முடுக்கி விட்டாலும் தன்னை யார் கொன்றது? எதற்காகக் கொன்றார்கள்? என்கிற உண்மையை விரைவாகத் தெரிந்து கொள்வதற்காக லாரன்ஸின் மனைவி ரித்திகா சிங்கின் உடம்பில் ஆவியாகப் புகுந்து கொண்டு லாரன்ஸூக்கு நெருக்கடி கொடுக்கிறார் சக்தி வாசு.
சக்தி வாசுவை கொலை செய்தது யார்? எதற்காகக் கொன்றார்கள்? அவரிடமிருந்து தனது மனைவி ரித்திகா சிங்கை லாரன்ஸ் மீட்டாரா? ஆகிய கேள்விகளுக்கு பதில் சொல்வதே கிளைமாக்ஸ்.
‘மொட்ட சிவா கெட்ட சிவா’வில் ‘மக்கள் சூப்பர் ஸ்டாராக’ தன்னை காட்டிக் கொண்ட லாரன்ஸ் இதில் ‘சின்ன கபாலியாக’ வருகிறார். சும்மாவே செம ஆட்டம் ஆடுகிறவர் இது பேய் படம் என்பதாலோ என்னவோ பாடல் காட்சிகளில் பேயாட்டம் தான் . வருகிற காட்சிகளில் கூட அப்படி ஒரு விறுவிறு வேகம். படத்துக்குப் படம் தன்னை ரஜினி ரசிகனாகக் காட்டிக் கொள்ளும் லாரன்ஸ் இதிலும் ’தலைவனுக்கு பாம்புன்னா பயம், எனக்கு பேய்ன்னா படம்’ என்கிற பஞ்ச்சிலேயே தியேட்டரை விசில் சத்தத்தால் அலற விடுகிறார்.
ரித்திகா சிங் பாடல் காட்சிகளில் கவர்ச்சி நாயகியாக புரமோஷன் பெற்றிருக்கிறார். சக்தி வாசுவின் ஆவி அவருடைய உடம்புக்குள் புகுந்தவுடன் நடிப்பில் மிரட்டலோ மிரட்டல். காஞ்சனா 2 வில் டாப்ஸியைப் பார்த்தது போன்ற ஒரு உணர்வு.
தன்னை யார் கொன்றது என்பது தெரியாமல் தவிக்கும் போதும், ஆவியாக மாறி பழி வாங்க ஆக்ரோஷம் காட்டும் போதும், என்னோட வாழ்க்கையில நான் எதையுமே அனுபவிக்கலேன்னே என்று லாரன்ஸ் காலைப் பிடித்து கதறி அழும் போதும் நெகிழ வைக்கும் சக்தி வாசுவுக்கு தமிழில் ஒரு நல்ல கம்பேக் படம்.
காமெடியில் கம்பேக் ஆக வரும் வடிவேலுவின் உடல்மொழி அவருடைய முந்தை படங்களைப் போல இதில் எடுபடவில்லை. கதையோடு கலந்த காமெடியனாக வந்தவர் காட்சிகளில் கொஞ்சமாச்சும் புதுசாக யோசித்து சிரிக்க வைக்க முயற்சித்திருக்கலாம்.
ஊர்வசி, பானுப்பிரியா, சந்தானபாரதி, ராதாரவி, மதுவந்தி அருண் என படத்தில் அவ்வப்போது வந்து போகிற கேரக்டர்கள் தங்களது பங்களிப்பை மிகச்சரியாகச் செய்திருக்கிறார்கள்.
பின்னணி இசையை மிரட்டலாகக் கொடுத்த தமன் பாடல்களில் ஆந்திரா மிளகாய்த் தூளின் நெடி ஜாஸ்தி. ‘ரங்கு ரக்கர’ பாடல் மகுத்தாட்டம் போட வைக்கிறது.
ஒரு கொலை அது சம்பந்தமான இன்வெஸ்டிகேஷன் என பழைய மாவாக இருந்தாலும் அதைக் கண்டுபிடிக்க துருப்புச் சீட்டாக ஒரு புறாவை கதையில் இறக்கி விட்டிருப்பது திரைக்கதையில் ரொம்பப் புதுசு. அதோடு காட்சிகளை எக்ஸ்ட்ராவாக பட்டைத் தீட்டியிருந்தால் லாரன்ஸூக்கு இன்னொரு காஞ்சனா, பி.வாசுவுக்கு இன்னொரு சந்திரமுகி என்று பேர் சொல்லும்படியான வெற்றியாக அமைந்திருக்கும் இந்த ‘சிவலிங்கா.’