”அடுத்த முறை தமிழில் பேசுவேன்” – சொன்னபடியே பேசி அசத்திய விஜய் தேவரகொண்டா!
‘அர்ஜுன் ரெட்டி’, ‘கீதா கோவிந்தம்’ ஆகிய தெலுங்கு வெற்றிப் படங்களில் நடித்து தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் விஜய் தேவரகொண்டா. அவர் முதல்முறையாக ‘நோட்டா’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக சன்சனா நடராஜன் நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் சத்யராஜ், நாசர், எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ள இப்படத்தை ‘அரிமா நம்பி’, ‘இருமுகன்’ படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கியுள்ளார்.
இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நாயகன் விஜய் தேவரகொண்டா, சத்யராஜ், நாயகி சன்சனா மற்றும் ‘பிக்பாஸ்’ புகழ் யாஷிகா, நாசர், எம்.எஸ்.பாஸ்கர், இயக்குநர் ஆனந்த் சங்கர், இசையமைப்பாளர் சாம் சி.எஸ்., படத்தொகுப்பாளர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாயகன் விஜய் தேவரகொண்டா பேசும்போது, “முதல் பத்திரிகையாளர் சந்திப்பின்போது மற்றவர்கள் பேசுவது எதுவும் புரியாத நிலையில் அதை கவனிக்காமல், எண்ணித்துணிக கருமம் என்கிற திருக்குறளை திரும்பத் திரும்ப மனப்பாடம் பண்ணிக் கொண்டு இருந்தேன்.
ஆனால் இப்போது தமிழில் நானே திருக்குறள் ஒப்பிக்கும் அளவுக்கு வந்து விட்டேன். இயக்குனர் ஆனந்த் சங்கருடன் பணியாற்றியது ரொம்ப ஈஸியாக இருந்தது. இந்தப்படம் குறித்து டிவிட்டரில் அடிக்கடி மரண வெயிட்டிங் என கமெண்ட் போடப்பட்டு இருந்தது. அதேபோல நானும் இந்தப் படத்திற்காக மரண வெயிட்டிங்.
இந்தப் படத்தின் மூலம் தமிழ் மக்களின் மனதை வெல்ல வேண்டும் என்பதுதான் என் ஆசை என்றவர் ‘சொன்னது போலவே திருக்குறள் ஒன்றை அழகாக உச்சரித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.
சமகால அரசியலை துணிச்சலாகப் பேசும் இந்தப் படம் வரும் அக்-5ஆம் தேதி வெளியாக இருக்கிறது.