சில்லுக்கருப்பட்டி- விமர்சனம்

RATING : 4/5
பல்லிடுக்கில் சிக்கிய வெள்ளம் போல சில சினிமாக்கள் மட்டும் தான் வாய்க்கும். அப்படியொரு படமாக வந்திருக்கிறது சில்லுக்கருப்பட்டி. ஒரு படத்திற்குள் நான்கு வாழ்க்கையை வைத்து ஒரு ஆந்தாலஜி மூவியாக எடுத்திருக்கிறார் இயக்குநர் ஹலிதா ஷமீம்.
ஒவ்வொரு கதையிலும் வரும் சம்பவங்களும் சரி வசனங்களும் சரி மிகச்சிறப்பாக அமைந்துள்ளது இப்படத்தில் ப்ளஸ் பாயிண்ட்ஸ். நான்கு படமாக வரும் ஒவ்வொரு கதையிலும் மெயின் கதாபாத்திரங்கள் ஏங்கி நிற்பது அன்புக்காகத் தான் என்பது தான் இந்தப்படம் மீதான காதலை அதிகப்படுத்துகிறது.
குப்பைக் கிளறும் சிறுவன் கையில் ஒரு பணக்கார சிறுமியின் வைர மோதிரம். அதை அவன் அவளிடம் சேர்க்க முயல்கிறான். பிறப்புறுப்பில் கேன்சர் வந்த ஐடி பாய், அவனது கல்யாணம் பொய்யாக ஒரு காதலி வந்து தேற்றுகிறாள், நேசித்த மனைவியை இழந்த ஒரு வயதானவர் கல்யாணமே செய்து கொள்ளாமல் வாழும் ஒரு முதிய பெண்மணி மேல் கொள்ளும் காதல், கடமையே கண்ணாயிரம் என வாழும் ஓர் சமகால இல்லத்தரசன், அவனின் ஆதுரத்திற்காக ஏங்கி நிற்கும் மனைவி..இப்படி நான்கு கதைகளுக்குள்ளும் நாம் ஊடுருவிப் பார்த்தால் அன்பு அன்பு அன்பு..என்பதே பிரதானமாக இருக்கிறது.
சமுத்திரக்கனி சுனைனா உள்ளிட்ட அத்தனை நடிர்களும் கதாபாத்திரங்களாக மாறி கதைகளுக்கு கணம் சேர்த்திருக்கிறார்கள். பிரதீப் குமாரின் இசை, அபிநந்தன் ராமானுஜம், யாமினி யக்னமூர்த்தி ஆகியோரின் ஒளிப்பதிவு இரண்டு டிப்பார்ட்மெண்டும் கருப்பட்டிக்கு கூடுதல் சுவை சேர்த்துள்ளது.
முதல் கதையில் சற்றும் நீளம் அதிகம் என்று தோன்றினால் கடைசி கதையில் ஆழம் அதிகம் என தோன்ற வைத்துவிடுகிறார் இயக்குநர். நம் அந்தஸ்தை உயர்த்த செலவழிக்கும் நேரத்தை அன்பை உயர்த்துவதற்காகவும் செலவிடுங்கள் என்கிறது சில்லுக்கருப்பட்டி. நல்ல விசயம் தானே!