சினிமாவுல சம்பாதிச்சது போதும்! – சந்தோஷமாக விடைபெறுகிறார் ‘கானா’பாலா!
‘கானா’ பாலா அந்தச் செய்தியை சொன்னபோது முதலில் நம்பமுடியவில்லை.
நாம் ஆச்சரியப் பார்வை பார்த்ததும் ”நெசமாத்தான் சார் சொல்றேன். நான் சினிமாவுல பாடல்கள் பாடுறது, பாட்டெழுதுறது ரெண்டையுமே கொறைச்சுக்கப் போறேன்” என்பது தான் கானா பாலா சொன்ன அந்த ஆச்சரியத் தகவல்.
‘மஞ்சள்’ என்ற படத்தில் ஒரு கானா பாடலை பாடிய ‘கானா’ பாலா அது பற்றிய அனுபவத்தை பகிர்ந்து கொள்வதற்காக வந்த இடத்தில் தான் தனது வி.ஆர்.எஸ். விஷயத்தையும் பகிர்ந்து கொண்டார்.
எதற்கு இப்படி ஒரு அதிரடி முடிவு?
அவரே சொல்கிறார் கேளுங்கள்….
”இதுவரைக்கும் 75 பாடல்கள் எழுதியிருக்கேன். 300 பாடல்களை பாடியிருக்கேன். எனக்கு இது போதும் சார். ‘அட்டக்கத்தி’ படத்துல வந்த ஒரே ஒரு சாங் என்னை எங்கேயோ கொண்டு போயிடுச்சு. இன்னைக்கு என்னோட அக்கா ரோட்ல நடந்து போனாக்கூட டேய் கானாபாலாவோட அக்கா போறாங்கடான்னு அன்பா பேசுறாங்க, உபசரிக்கிறாங்க. நான் எங்க போனாலும் என்னை கொண்டாடுறாங்க. இது போதும் சார்.
எனக்கு தேவையானதை நாம் சம்பாதிச்சிட்டேன். நானே தொடர்ந்து சம்பாதிக்கணும்னு நெனைக்கிறது ரொம்ப தப்பு. என்னை மாதிரி இன்னும் 200 திறமையான ‘கானா’ பாடகர்கள் வாய்ப்பு இல்லாம இருக்காங்க. நான் வெளியில போனாத்தானே அவங்களால வர முடியும். அவங்களும் வந்து ஒரு நாலு காசு சம்பாதிக்கட்டுமேங்கிற நல்ல எண்ணத்துல நான் இப்படி ஒரு முடிவெடுத்திருக்கேன்.”
என்றவர் அதற்காக முழுசா சினிமாவை விட்டு வெளியில போறேன்னு நெனைக்க வேண்டாம். நான்தான் பாட்டு எழுதனும்னு என்னைத் தேடி வர்றவங்களுக்கு மட்டும் தான் பாட்டு எழுதுவேன். நானா எந்தக் கம்பெனியும் தேடிப் போய் எழுத மாட்டேன். அப்படித்தான் இந்த ‘மஞ்சள்’ படத்தோட டைரக்டரும் என்னை வந்து மீட் பண்ணினாங்க. அவர் சொன்ன கதை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. பொண்ணுங்க பின்னாடிப் போற பசங்களைப் பத்தி ஒரு சாங் கேட்டாங்க. எழுதி பாடினேன்.
என்றவரிடம் ரஜினி படத்தில் பாட வாய்ப்பு வந்ததா? என்கிற கேள்வியை கேட்காமல் இருக்க முடியுமா? பின்னே அவரை இயக்குபவர் அவருடைய ஆஸ்த்தான இயக்குநர் ரஞ்சித் ஆச்சே…?
”ரஞ்சித் அண்ணன் அந்தப் படத்தை ஆரம்பிச்சதிலேர்ந்து இன்னைக்கு வரைக்கும் அது சம்பந்தமா நான் அவரை மீட் பண்ணி பேசல. ஏன்னா அவர் ரொம்ப பிஸியா இருப்பார். ”ஆனா அந்தப் படத்துல நான் ஒரு பாட்டு எழுதப்போறேன்”னு ரஞ்சித் சாரோட நண்பர்கள் மூலமா எனக்கு தகவல் வந்துச்சு.
அவரோட போனுக்காக வெயிட் பண்ணிக்கிட்டிருக்கேன். என்ற கானாபாலா இன்னைக்கும் மற்ற கானா பாடகர்களை எனக்குத் தெரிஞ்ச எல்லா இயக்குநர்கள் கிட்டேயும் இசையமைப்பாளர்கள் கிட்டேயும் அறிமுகப்படுத்தி வெச்சுக்கிட்டுத்தான் இருக்கேன். தொடர்ந்து அதை செய்வேன். என்றார்.
எங்கேயோ போயிட்டீங்க ‘கானா’ பாலா சார்…!