மதுரை பின்னணியில் சமூக சீரழிவை படம் பிடித்து காட்டும் ‘மஞ்சள்’
வெள்ளிக்கிழமையானாலும் தியேட்டர்களுக்கே தாயத்து கட்டி விடுகிற அளவுக்கு பேய்ப்படங்கள் அணிவகுத்து நிற்க மீண்டும் ஒரு மதுரைப் பின்னணியில் படமெடுத்து விட்டு வந்திக்கிறார் புதுமுக இயக்குநர் சத்ய சரவணா. படத்தின் பெயர் ‘மஞ்சள்’.
செல்வன் நம்பி இசையமைக்கும் இப்படத்திற்கு சதீஷ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். டான் பிக்சர்ஸ் சார்பில் கணேஷ், சுரேஷ், பிரியா ஆகிய மூன்று பேர் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.
இதுவும் வழக்கமான மதுரைப்படம் தானா? இல்லை ஏதாவது புதுசா சொல்றீங்களா..? என்றதும் உற்சாகமானார் இயக்குநர்.
எனக்கு சொந்த ஊர் மதுரை தான். எங்க அக்கம் பக்கத்து ஊர்கள்ல இறந்து போற பெரியவங்களோட இறுதிச்சடங்கை திருவிழா போல கொண்டாடுவாங்க. இறந்து போன பெரியவோட பையனுக்கு அவனோட தாய்மாமன்கள் எல்லாரும் ஒண்ணு சேர்ந்து 16ஆம் நாள்ல கறிவிருந்து வெச்சு சாப்பாடு போடுவாங்க, ஏன்னா அவன் அந்த துக்கத்துல இருந்து வெளியில வரணும்னு அப்படிச் செய்வாங்க.
அப்படித்தான் என் அப்பா இறந்தப்போ நடந்த சம்பவங்கள், அதையொட்டி நடக்கிற சடங்குகள் எல்லாம் ரொம்ப புதுசா இருந்துச்சு. அதை அப்படியே படமாக்கினா என்னன்னு யோசிச்சப்ப தான் இந்த மஞ்சள் படத்தோட கதை ரெடியாச்சு. என்றார்.
இதே மாதிரி சாவு வீட்ல ஹீரோவும், ஹீரோயினும் லவ் பண்ற மாதிரி விழான்னு ஒரு படம் வந்துடுச்சு. அந்தப்படம் மாதிரிதான் இதுவுமா? என்றதும் கண்டிப்பா இல்ல சார். அதுல ஹீரோ, ஹீரோயின் ரெண்டு பேரும் சாவு வீட்ல லவ் பண்ணுவாங்க. இதுல ஹீரோ சாவு வீட்ல தப்பு அடிக்கிற தொழிலைச் செய்றவன். அம்புட்டுத்தான். அவனுக்கும் ஹீரோயினுக்கும் இடையே காதல் வர்றப்போ அவங்க காதலுக்கு பயங்கர எதிர்ப்பு இல்லேன்னாலும் அதையும் தாண்டி சமுதாயத்தை சீரழிச்சிட்டு இருக்கிற ஒரு முக்கியமான பிரச்சனையை படத்துல மெயினா சொல்லியிருக்கேன் என்றார்.
சரி நீங்க சொன்ன கதைக்கும் டைட்டிலுக்கும் சம்பந்தமே இல்லையே? உண்மைதான். படத்தோட டைட்டில் மங்களகரமா இருக்கட்டுமேன்னு தான் இந்த மஞ்சள் டைட்டிலை வெச்சோம். என்றவரிடம் அதென்ன சமுதாயத்தை சீரழிக்கக் கூடிய முக்கியமான பிரச்சனை? என்றதும் ‘அது மட்டும் சஸ்பென்ஸ்’ என்றார்.
என்ன பண்றது எல்லாத்துக்கும் சஸ்பென்ஸ் தேவைப்படுதே..?