சிறுவன் சாமுவேல்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

“சின்னச் சின்ன அன்பில் தானே ஜீவன் இன்னும் இருக்கு” என்ற கவிஞர் வாலியின் வரிகளை நினைவுப்படுத்தி நம்மை பால்யத்திற்கு அழைத்துச் செல்கிறது சிறுவன் சாமுவேல் படம்

முதல் கன்னியாகுமரி படம் என்ற சப்டைட்டிலுக்கு 100% நியாயம் சேர்த்து வந்திருக்கிறது படத்தின் அவுட்புட். சிறுவன் சாமுவேலுக்கு ஒரு பேட் வாங்கவேண்டும் என்பது கனவு. அந்தக் கனவை எளிதாக நிறைவேற்றும் பொருளாதாரச் சூழல் அவன் வீட்டில் இல்லை. அவனோ பேட் வாங்க வேண்டும் என்பதை விடா முயற்சியாக கொண்டு அதற்கான தேடலில் இறங்குகிறான். அவனின் முயற்சியும் தேடலும் முடியும் இடமே படத்தின் க்ளைமாக்ஸ்

அச்சு அசலான பாத்திரங்களை நடிப்பால் நிஜமாக்கி கவனம் ஈர்க்கிறார்கள் நடித்துள்ள கதை மனிதர்கள். முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள அஜிதன் தவசிமுத்து, விஷ்ணு இருவரும் படத்தை பெருந்தூணாக தாங்கி நிற்கிறார்கள். அவர்களுக்கு மிகச்சிறப்பான பயிற்சிகளை கொடுத்து வேலை வாங்கியுள்ளார் இயக்குநர் சாது. பெற்றவர்கள் பெரியவர்கள், வேன் டிரைவர், ட்யூசன் சொல்லிக்கொடுக்கும் அக்கா என அத்தனை கேரக்டர்களும் அசலான கன்னியாகுமரி முகங்கள். யாருமே நடிக்கவில்லை கேமரா முன் வாழ்ந்திருக்கிறார்கள்

மென் உணர்வுகளை நமக்குள் கடத்தும் படங்களுக்கு ஒளிப்பதிவும் பின்னணி இசையும் மிக முக்கியம். அந்த முக்கியத்துவத்தை உணர்ந்து உழைத்துள்ளனர் ஒளிப்பதிவாளரும், இசை அமைப்பாளரும்

மின்னலென பாயும் திரைக்கதை இல்லை. இருப்பினும் ஜன்னல் தாண்டி வரும் தென்றலாய் வசீகரிக்கிறது திரைமொழி. பெரிய நடிகர்கள் இல்லை, பெரிய டெக்னிஷியன்கள் இல்லை, பெரிய பட்ஜெட் இல்லை, பெரிய பேனர் இல்லை, பெரிய இயக்குநருமில்லை. ஆனால் அறிமுகப்படத்திலே ஒரு மிகப்பெரிய இயக்குநருக்கான தரத்தோடு படத்தை கொடுத்திருக்கிறார் சாது.

இந்தக் கோடை விடுமுறையில் குழந்தைகளோடு காண வேண்டிய படம் சிறுவன் சாமுவேல்
4/5

#SiruvanSamuel #சிறுவன் சாமுவேல்